ஊருக்கு வெளியேத்
தள்ளியிருக்கு வீட்டுக்குள்
தாயும் குழந்தையுமென
உறுப்பினர்கள் இரண்டு
கூடத்தில் தொங்கிய
கடிகாரத்தில் சரியாக
மணி மதியம் இரண்டு
தோட்டத்து மரக்கிளையில்
சன்னல்வழியே வீட்டுக்குள்
குறுகுறுவெனக் கவனித்தபடி
சிட்டுக் குருவிகள் இரண்டு
வீட்டையே இரண்டாக்கி
சோற்றை அள்ளி விசிறி
அறையெங்கும் பரப்பியபின்
குழந்தை விழுங்கிய
உருண்டைகள் இரண்டு
ஊட்டி முடித்தபின்
சிதறியதை எல்லாம்
அலுப்போடு கூட்டியள்ளி
குப்பைப்பைக்குள் திணிக்கும்
அம்மாவையே இமைக்காமல்
சன்னலில் அமர்ந்து
பதறியபடி கவனிக்கும்
உதறும் இதயங்கள் இரண்டு
அங்கோ ...........
பசித்த வயிறோடு
பெற்றோரின் வரவுக்காகக்
காதுகளைக் கூராக்கிக்
கூட்டில் காத்திருக்கும்
குஞ்சுகள் இரண்டு
இங்கே .............
சிதறியதில்
பார்வையிலிருந்து பதுங்கி
துடைப்பத்திலிருந்து ஒதுங்கி
சன்னலுக்கு மிகஅருகே
சத்தமில்லாமல் சேர்ந்திருந்தது
பருக்கைகள் இரண்டு
.
3 comments:
கருத்தான பதிவு....அழகான வரிகள் .........எனது வார்த்தைகளும் இரண்டு. பாராட்டுக்கள்.
மிகவும் அருமையான சிந்தனை . அற்புதமான வரிகள் வாழ்த்துக்கள் !
:((
Post a Comment