Monday, April 12, 2010

மணி என்ன ஆச்சு ???


பதட்டம்....
பதட்டம் ......

இரவு செல்லப்போகும்
இடம் நினைத்துத் தொற்றுகிறது
இப்போதே பதட்டம் எனக்குள்..

குறுகுறுக்கும் உள்ளத்தோடு
அறிந்துகொள்ளும் ஆர்வத்தோடு
அவன் அழைத்தவுடன் ஒத்துக்கொண்டேன்
என்றாலும் பயமாகத்தான் இருக்கிறது ..

இதோ வழக்கம்போல்
இன்றைய நாளும் ஆரம்பம் ..
அவசரமாய்க் கிளம்பி
ஆறடி நடப்பதற்குள்
வழக்கம்போலவே
ஆளாளுக்கு கேட்டு
மிருகமாக்குகிறார்கள் என்னை

’’மணி என்ன ஆச்சு/’’

நடைபாதையை ஆக்கிரமிக்கும்
பிச்சைக்காரன்.................
பூங்காவில் பகல்முழுதும் படுத்து
பொழுதுபோக்குபவன்.................
முக்குக்கடை வாசலிலேயே
முழு நாளும் கழிப்பவன்.................

இப்போது மணி என்ன
ஆனால்தான் என்ன ?
தெரிந்தவுடன் இவர்களுக்கு
ஆவப்போவதும் என்ன ?

பதில் சொல்லியே எனக்கும்
பாதிநாள்ப் பாழாகிவிடும்


எதிர்பார்த்த இரவு...........

கண்சிமிட்டிச் சிரித்து
உள்ளே தள்ளிவிட்டு அவன்
வேறிடம் துணையுடன் செல்ல

உள்ளே கட்டிலில்
கைகளைப் பிசைந்தபடி
பதட்டமாய் அவளும்........

ஒருவேளை என்னைப்போலவே
இவளும் புதியவளோ ?

மெதுவாய் முன்னேறி
விளிம்பில் அமர்கிறேன்

மெல்ல நிமிர்ந்தவள்
எனது கண்களுக்குள்
எதையோ தேடியபடி
மெதுவாகக் கேட்கிறாள்

''மணி என்ன ஆச்சு ?''

எங்கோ.....
இவள்வரவுக்குக் காத்திருக்கும்
முகம் தெரியாத சீவன்களின்
தெளிவில்லாத முகங்கள் என்னுள்
தோன்றி மறைகிறது

முதன்முதலாய் அந்தக் கேள்வி
மனிதனாக்கியது என்னை .........

1 comment:

பனித்துளி சங்கர் said...

மிகவும் அழகான சிந்தனை !
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .