Monday, November 22, 2010

ஏன்?..எதற்கு??....எப்படி???


அனைவரும் கிளம்பியபின்

அத்தனையும் அணைத்து

அலுவலகம் முடித்துக் கிளம்ப

எப்படியும் அரைமணி ஆகிவிடும் ....


ம்ம்ம்ம்....


பாப்பாவின் பத்தாவது

பிறந்த நாள் கொண்டாட்டம்

பரபரப்பாய் முடிந்திருக்கும் ....


இப்போதே பத்தாகப் போகிறது

அரக்கப் பரக்க விரைந்தாலும்

இன்னும் அரைமணி தாண்டிவிடும்


பதட்டமாய் இருக்கிறது எனக்கு...


ஏங்கிப் போயிருப்பள் அவள்.....

தூங்கிப் போகும்முன் முன்நின்று

சிரிக்க வைத்துவிட வேண்டும்...

நெற்றியில் முத்தமிட்டுவிட வேண்டும்


மிகவும் பதட்டமாய் இருக்கிறது எனக்கு....


வேகவேகமாய்க் கதவடைத்து

அவசர அவசரமாய் படிஇறங்கத்

தொடங்குகிறேன் நான்....


எதிர் கீழே

மெல்லிய இருளில்

மங்கிய உருவில்

கலங்கிய முகத்துடன்

ஒரு நிமிடம் நிற்க

சொல்லி கெஞ்சலாய்

சைகை செய்த படியே

கீழ்ப் படியிலிருந்து

மேலேறத் தொடங்குகிறாள் அவள்


பலநாள் பழகிய முகம்.......

மிகமிக அறிமுகமான உருவம்.......


இவர் யாராய் இருக்கும் ?

இங்கே யாரைப் பார்க்க ??

இந்த நேரத்தில் எப்படி ???


உள்ளே கேள்விகள்

வளையமிடும் வேளையில்

பாப்பாவின் நினைவுகள் தூண்டிலிட.....


குடையாய் சுருங்கிய புருவங்களுடன்

அவசரமாய் அவளைக் கடக்கிறேன்


அந்த நொடியில்

திடுக்கிட்டுப்போய் நிற்கிறேன்


வாசம் ....

அக்காவின் வாசம் ...

பத்தில் பறந்துபோன

பாசமிகு அக்காவின் வாசம்....


இந்த வயதிலிருந்தால்

இப்படித்தான் இருப்பாள் அவள்


அதிர்ந்து திரும்புகிறேன் ...


அங்கே யாரும் இல்லை

அருகில் ஒருவரும் இல்லை


ஒருவேளை மேலேறிச் சென்றிருக்கலாம் ?

அல்லது வெறும் பிரம்மையாய் இருக்கலாம் ??


ஆராய நேரமின்றி

ஒரு நொடி தாமதித்து

என்னையே தேற்றிக் கொண்டு

தாவி இறங்கி தரையைத் தொடுகிறேன் ....


ஒரு நொடியின்

நூறில் ஒருபங்கு

நேர இடைவெளியில்

என்னையும் முந்திக்கொண்டு

எனது இருசக்கர வாகனத்தின்


மேலேறி........

நகராமல் நிற்கிறது

நகரப் பேருந்து ஒன்று ......!

.

No comments: