பழிக்குப் பழி :
சிங்கமாயிருந்தேன்
அசிங்கப்படுத்திவிட்டாள் என்னை !
அலட்சியம் தோய்ந்த பார்வை
ஆணவம் தடவிய செய்கை
விசம் புதைந்த வார்த்தைகள்
வீசி எறியும் பேச்சுகள்
--தாங்க முடியவில்லை
பழி வாங்கியே ஆகவேண்டும்!
அலுவலகத்திலிருந்து
அரைமணிக்கு ஒருமுறை
அலைபேசியில் அழைத்து
ஒருமணி நேரம் பேசுவேன்
--இன்று பேசவில்லை
ஆறு முழம்பூவும்
அரைக்கிலோ அல்வாவும்
அவளுக்கென வாங்குவேன்
--இன்று வாங்கவில்லை
ஆணியடித்தாற் போல்
ஆறுமணிக்கு அவளருகே
வீட்டில் இருப்பேன்
--இன்று இருக்கவில்லை
ஒன்பது மணி..
அழைப்புமணியை அடித்து
வாசலில் காத்திருக்கிறேன்
--அவள் வரவில்லை
நானே திறந்து
உள் நுழைகிறேன்
--விளக்குகள் எரியவில்லை
படுக்கையறைக் கதவை
வேகமாய்த் திறக்கிறேன்
உறங்கிக்கொண்டிருக்கிறாள் அவள்
--இன்னும் விழிக்கவில்லை
கோபம் தலைக்கேற
கதவினை அறைந்து சாத்துகிறேன்
பதறி எழுகிறாள்.....
பதட்டமாய் அடிப்பார்வையால்
எனைத் துளைக்கிறாள்.......
மெல்ல இருகைத் தூக்கி
மெதுவாய் எனக்கு முன்னால்
மேனகையாய் மாறி அவள்
சோம்பல் முறித்த அந்த
அழகிய நொடியில்
கலைந்தே போனது
இந்த விசுவாமித்திரனின் தவம்...
1 comment:
எல்லா விட்லயும் நடக்ரதுதான்...
ரொம்ப நல்ல சொல்லி இருக்கீங்க..
வாழ்த்துக்கள்..
Post a Comment