Sunday, February 7, 2010

எங்கும் நிகழ்வதுதான் ..! என்றாலும்....!!


மையப்புள்ளியை
தரையில் வைத்து
வானத்தில் வட்டமிடுகிறது
கள்ளப் பருந்தொன்று

அதன்பார்வை பயணித்து
முடிவடையும் இடத்தில்

கீழே
தூரத்தில்
தாயின் அச்சுறுத்தல் மீறி
உலகமே தனதென்று எண்ணி
எதையும் சட்டைசெய்யாமல்
துள்ளி விளையாடிய படி
அன்றுதான் தரைதொட்ட
குட்டி அணிலொன்று

திடீரென....
தன்நிழல் கணித்து
இலக்கு குறித்து
கவனம் குவித்து
பாதை மாற்றி
வேகம் கூட்டி
இறகு மடக்கி
தரை நோக்கி
தலைகீழாய்
இறங்குகிறது
அந்தப் பருந்து

கடைசி நொடியில்
மயிறிழையில்
அனிச்சையாய்த்
துள்ளி விலகி
தாவிப் பொந்துதினுள்
நுழைந்துபின் எட்டிப்பார்க்கிறது
அந்தக் குட்டி அணில்

நிலைகுத்திய பார்வையோடு
உறைந்துபோன உணர்வுகளோடு
மூச்சுவிட மறந்த இதயத்தோடு

நான் ............


.

1 comment:

நிலாமதி said...

நான்.........அப்பாடா அது காப்பாற்ற பட்டதே எனும் மன நிலை யோடு.
மெய் மறந்தேன். உங்கள் பதிவு கண்டு. எனக்கும் இயற்கையை ரசிக்க பிடிக்கும். .