Saturday, October 2, 2010

காந்தி ஜெயந்தி..: அவருக்கென்ன ?...விடச் சொன்னார் தான் ...!


விடிந்தால் பள்ளிவிடுமுறை

வீட்டிற்குப் போகும்முன்

நல்லதாக நாலுவார்த்தை

நாமளாவது காந்தியைப் பற்றி

நறுக்குன்னு சொல்லியணுப்புவோம்

பசங்களா .....

காந்தித் தாத்தா...

அவரது அறிவுரைகளைப் பற்றி

அணுஅளவாவது தெரிஞ்சிக்கோங்க .....

ஆழ்ந்த கருத்துக்களைப் பற்றி

மேலாகவாவது புரிஞ்சுக்கோங்க....

அவர்.........

இம்சைக் கிடம்கொடா(து) உந்தி விடச்சொன்னார்
அந்நிய மோகம் அணை(னை)த்தும் விடச்சொன்னார்

தீண்டாமை யைத்தூரத் தள்ளி விடச்சொன்னார்
ஆணாதிக் கம்அவநம் பிக்கை விடச்சொன்னார்

ஆள்க்கொள் ளுமாசை சித்தம் விடச்சொன்னார்
ஆழ்மன வேற்றுமையை உன்னில் விடச்சொன்னார்

வாய்மைப் பெருக்கியே பொய்மை விடச்சொன்னார்
சோம்பல் அதனை மொத்தம் விடச்சொன்னார்

மண்ணில் மதவேற் றுமையை விடச்சொன்னார்
உன்னில் பயமும் சுயமும் விடச்சொன்னார்


எடுத்தத் தலைப்பில் எடுப்பாய் முடித்தேன்

என்ன சந்தேகம் என்றாலும்

என்னிடம் கேளுங்கள் என்றேன்

இரண்டுபேர் எழுந்தனர்

ஆளுக்கொன்றாய் தொடுத்தனர்...

இதுவரைக்கும் என்னவெல்லாம் விட்டீங்க சார் ?

இன்றைக்கு லீவும் விடச் சொன்னாரா சார் ??

குட்டிக் குழந்தைகளின் கேள்விகள்

நெற்றிப் பொட்டில் அறைந்தன .....

‘விடச்சொன்னார் ..சரிதான் ...!

விட்டிருக்கிறோமா நாம் ? - அவர்

சொன்னது எதையும் விடவில்லை ஆனால்

சொல்லாததை எல்லாம் விட்டிருக்கிறோம் ..!

இரவெல்லாம் என்னைச் சுற்றிலும்

ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன

அந்தக் கேள்விகள்......!


தூங்கவில்லை நான்........!

”நீங்கள்” ............?

1 comment:

ராஜா said...

நாலெழுத்து படிசிட்டதால ..நமக்குத் தெரியாத நல்லது கெட்டதையா இவிங்க சொல்லிடப்போறாங்க / சொல்லிருக்காங்க என்ற இறுமாப்போடு சுத்துறவங்க தான் இப்ப அதிகமா இருக்காங்க:( சில விசியங்கள
விட்டா புடிக்கமுடியாது சிலவிசியங்கள விடலைன்னா நீடிக்க முடியாது :(