Sunday, December 26, 2010

அறிவியல் அறியாத மழைக்கான காரணம் ...

என்னவள்

தாய்மையுடன் சென்றிருக்கிறாள்


அவளது தாய்வீட்டுக்கு நேற்று..


வெள்ளி இல்லாமல்

துடைத்து விடப்பட்ட

நேற்றைய வானம் போலவே

ஒரேநாளில் அனைத்தும்

அணைந்து போனது எனக்குள்...


அட....

இன்றும் வானில்

நேற்றைப் போலவே....

எங்கும் காணவில்லை

மின்னும் அந்த நட்சத்திரங்களை....


எதிரே..

வரண்டு போன

பளிங்குத் தரையைப் போல

வெறுமையாய் வெளிர்வானம்..


திடீரென வீசத்துவங்கியது

மண் வாசம்...

கடும் கோடையிலும்

மழையின் வாசம்...


என்வீட்டு முற்றத்தில் மட்டும்

மேகங்கள் திரண்டொரு

மழைக்கான முன்னேற்பாடு...


வாசலில் இருந்த

கோலத்தின் கோடுகளை

அழிக்கும் முயற்சியில்

மும்முரமாய் இருக்கிறது மழை...


அட

அப்போதுதான் கவனிக்கிறேன்


அதுவொன்றும் சராசரி மழையன்று...

இதுவொரு மீட்புப் போராட்டமென்று.....


இரண்டு நாட்களுக்கு முன்

என்னவள் வரைந்து......இன்னமும்

அழியாத கோலத்தின்

வளைவுகளுக்குள் சிக்கி

தரையெங்கும் இறைந்து

அடைபட்டுக் கிடக்கின்றன

அந்த நட்சத்திரங்கள்

புள்ளிகளாக ...................!

.

No comments: