Friday, August 12, 2011

குழந்தையும் , கோடுகளும்...!

butterfly.gif
எனது அலுவலகக் கோப்பை விரித்து
கையில் கிடைத்த எதையோவைத்துக்
கிறுக்கிக் கொண்டிருக்கிறாள் அவள்

அதிர்ந்து நான் நிற்க
நிமிர்ந்த அவள் முகத்தில்
தொக்கி நின்ற கேள்வியுள்
கரைந்து போகிறதென் கோபம்

சிங்கமா என்கிறேன்
இடம் வலமாகத் தலையசைக்கிறாள்

புலியா என்கிறேன்
உதட்டைப் பிதுக்குகிறாள்

பூனையா என்கிறேன்
ஆமென்று துள்ளிக் குதிக்கிறாள்

இப்பொழுதுதான் கவனிக்கிறேன்
அந்தக் காகிதத்தில்
நடைபெற்றுக் கொண்டிருக்கும்
அசைவுகளை...

தாறுமாறாக
சிதறி இருந்த கோடுகள்
பதறி அவசர அவசரமாக
ஒரு பூனையாக
உருமாறிக் கொண்டிருந்தன...!

.

1 comment:

settaikkaran said...

கவனித்திராதிருந்தால் பூனை புலியாகியிருக்குமோ? :-)