Tuesday, November 1, 2011

பெரியாத்தா : -- இதுதான்யா சொர்க்கம் -3

வாரீயளா .....சொர்க்கலோகம் கூட்டிப் போறேன் ...... கலர்கலராக் காட்டப் போறேன் ....:3


வேப்பம்பழம் பொறுக்கி, கொட்டை எடுத்துக் கொண்டிருக்கும் ஆத்தா
தூரத்தில் ஓட்டுவீடுகள் தெரிய ஆரம்பிக்கின்றன .. ஆங்காங்கே சில மட்டப்பா வீடுகளும்....

என்வண்டியைத் தாண்டி சைடு எடுத்துச் சென்ற டிவிஎஸ் 50 ஒன்று சட்டென ப்ரேகடித்து நின்றது .
(TVS 50 - எனது கனவுவாகனம் ... இப்போதுக்கூட யாராவது என்னிடம் அந்த வண்டிக்கு எனது காரை எக்ஸ்சேஞ்ச் தர ஒப்புக்கொண்டால் உடனே தரும் மன நிலையில்தான் இருக்கிறேன் ... )

அவசரமா ஸ்டாண்டுபோட்டு என்னைப்பார்த்து ஓடிவரும் அது ...அட ...எசக்கி

‘’எண்ணே.....பாத்து எம்புட்டு நாளாச்சு .... இதாம் புள்ளைங்களா...’’
என்று கேட்டபடியே கன்னத்தை பிடித்து கிள்ளிவிட்டு
வூட்டம்மாவைப்பார்த்து ’‘கும்புடறேன் தாயி ‘’ என்றான் ....

சின்னவயசுல எனக்கு அவந்தான் ‘பாடிகார்டு’ ... (3 அடு உயரத்துல நான்....ஒரு 2 அடி உயரம்தான் அவன் இருப்பான் ) ..ஆளுதான் வளந்திருக்கான் ...முகம் இன்னும் மாறவே இல்லை

அவனை தோள்சேர்த்து பற்றிக்கொண்டேன் ...ம்ம்ம் .. தோட்டத்திலிருந்து வருகிறான் போலும் ...மண்வாசம் ...

’’ஏண்ணே ... கொடைக்கு வந்தியா ..பெரியாத்தா விசயம் தெரியுமா உனக்கு’’

லேசான அதிர்ச்சி எனக்கு ...
”என்னல ஆச்சு ” எதையோ மறைத்திருக்கிறார்கள் ...

பெரியாத்தா .... அப்பாவின் அம்மாவோட அம்மா .... 100வயசு தாண்டி ஒரு மாமாங்கம் ஆகிஇருக்கும் ..

ஒருவாரமா சோறுதண்ணீ எறங்கலண்ணே ... உசுறு வாய்க்கும் தொண்டைக்குமா இழுத்துக்கிட்டு கெடக்கு...
ஏதோ நெனப்புலத்தான் உசிறு இன்னும் ஒட்டிக்கிட்டு கெடக்குது .... உன்னைப் பாத்தான்னா ஒடனே போய்ச் சேந்திருவாண்ணே “

’ஓ .... என்னை கைகுள்ளேயே வச்சு பொத்திப் பொத்தி வளர்த்தவள் அவள் ..
வேகமாக வண்டியில் ஏற ஓட எத்தனிக்க ..எசக்கி என்கையைப் பிடிச்சு தடுக்கிறான் ...

“அண்ணே ...உடனே போய் பார்த்திறத... ரெண்டுநாள்ல கொடை இருக்கு... முடியட்டும் ...இப்போ உன்னைப் பாத்தவுடன் ஆத்தா புட்டுக்கிச்சுன்னா ... தேரு வெளியேவராது ...கொடை நின்னுபோவும்...12 வருசம் கழிச்சு நடக்குற கொடைக்காவ வெளுயூருல இருந்து ஊருசனாமெல்லாம் வந்திருக்காங்க ... நெறையா ஏற்பாடெல்லாம் நடந்திட்டிருக்கு...எல்லாம் உன்னால கெட்டுப் போச்சுன்னு பின்னால யாரும் சொல்லீரக் கூடாதுண்ணே “

உண்மை உறைக்க ஆரம்பிக்கிறது எனக்கு ...
மெதுவாக பாக்கெட்டைத் தடவிப் பார்க்கிறது எனது கை ...
உள்ளே இருக்கும் இரண்டு ‘சுகர் ஃப்ரீ டாப்லெட்’ பாக்கெட்டுகள் என்னைப்பார்த்து சிரிக்கின்றன ...

இந்தக் கிராமத்தைவிட்டு நான்வெளியேறும் முன்னால்... என்றோ ஒருநாள்
‘ எய்யா .. பெரியவனே ...எனக்கு ஏதோ சுகராம்..இவளுவோ கருப்பட்டிய என்கண்ணுலயே காட்ட மாட்டக்காளுவ.. என்னமோ இனிப்பு மாத்தரன்னு இருக்காமே அது எனக்கு கொஞ்சம் வாங்கித் தாரியா ???’

கருப்பட்டியும் , வெல்லமுமாய் காய்ச்சி ஊருக்கெல்லாம் கொடுத்தவள் ...இனிப்புக்காக ஏங்கி என்னிடம் கேட்டது மங்கலாக இன்னும் மனக்கண்முன்னால் ஓட ..........

என்ன செய்யப் போகிறேன் நான் ...????????????

(என்ன செய்யலாம் சொல்லுங்க மக்களே ...ஊருக்குள் நுழையாமல் தூரத்தில் தெரியும் அந்தக் கல்வீட்டை பார்த்தபடியே உடைந்துபோய் காத்திருக்கேன் )

1 comment:

Part Time Jobs said...

Hi i am JBD From JBD

Hi i Read Your Information its Really Very interesting & Usefull!


Visit My Website Also : www.cutcopypaste.co.in , www.indiai365.com , www.classiindia.com , www.jobsworld4you.com