Thursday, June 25, 2009

முன்னேற்றமா? (அ) முட்டுக்கட்டையா?


கணினிக்குள் நுழைந்திருக்கிறான் அவன்
கண்ணிமைக்காமல் அமர்ந்திருக்கிறேன் நான்

அறிவியலின் முன்னேற்றம் பற்றி
அது செய்யும் மாயாசாலம் பற்றி
அது உருவாக்கும் வாய்ப்புகள் பற்றி
அதனால் உருவாகும் வசதிகள் பற்றி

கண்களைக் கணினிமேல் பதித்தபடி
கருத்தினைக் கண்டம்தாண்டி விதைத்தபடி
எதைஎதையோ இணையத்துள் தேடியபடி
இடையிடையே என்னிடன் பேசியபடி அவன்

"நமது ஊரின் வானிலை வேண்டுமா ?
நல்ல ஓசையில் வானொலி வேண்டுமா ?
அன்னைதேச நிலவரம் புரியவேண்டுமா ?
அண்டைதேச கலவரம் தெரியவேண்டுமா ?

இணையத்துக்குள் நுழைந்தால்
இப்போதே கிடைத்து விடும்

அன்னைக்கு அன்புமடல் - இங்கே
அமெரிக்காவிலிருந்து அனுப்பினால்
அரைநொடியில் அங்கு போகும்

அப்பாவின் கணக்கில்
இங்கே பணம் செலுத்தினால் - அங்கே
அரைமணியில் வங்கியில் சேரும்

அற்புதக் கணினி இல்லாத உலகமது
அதிகாலைக் கிழக்கு இருள் போல
அரைநொடியில் கலைந்து போகும் "

மிகத் தெளிவாக இருக்கிறான் அவன் !
ஏகக் குழப்பத்தில் இருக்கிறேன் நான் ?

அறிவியலோடு சேர்ந்து முன்னோட வேண்டும் - இதற்கு
மாற்றுக் கருத்து முன்மொழிய வேண்டாம் - அதற்காக
அதனுள் வீழ்ந்து மூழ்கிட முடியுமா ?

சன்னல் திறந்தாலே காற்றின் இதம்
உனக்கு வானிலை கூறாதா ?
சாலையில் நடந்தாலே சூரியனின் பதம்
உனக்கு வெப்பநிலைக் காட்டாதா ?
வானம் நோக்கினாலே நகரும் மேகம்
உனக்கு வரும்மழையினைச் சொல்லாதா ?

நால்வரோடு கலந்தால் தானே
நாட்டு நிலவரம் தெரியும் !?
நல்லவரோடு இணைந்தால் தானே
நல்லது கெட்டது புரியும் !?

'நண்பனே ,
அரைப் பக்கத்தில் கடிதம் எழுது
கரைத் தாண்டி சுமந்து செல்லுமது
உனது விலையில்லா பாசத்தையும்
உனது உயிரின் வாசத்தையும்

அன்புமகனின் மடல்தனை
வாசித்து அறிவோரைவிட
உச்சி முகர்ந்து உள்ளம் சேர்த்து
சுவாசித்து உணர்வோரே அதிகம்

உனது எழுத்தில்
உனது முகம் தெரியும்
அதிசயம் அங்கேதான் நிகழும்
அதுஇங்கே உனக்கெப்படிப் புரியும்'

மெதுவாய் விலகி நடக்கிறேன் வீட்டுக்கு
மெல்லத் தழுவிக் கடக்கும் குளிர்காற்று
அன்றைய வானிலையை எனக்கு
அழுத்தமாய்ச் சொல்லிச் செல்கிறது !

No comments: