Thursday, November 13, 2008

எங்கே அவன் ?


புத்தாண்டு 2108 ல்
புதிய உலகம் கண்டுபிடிக்க
புறப்பட்டோம் பிரபஞ்சப்பயணம்
பறக்கத் தொடங்கி ஆண்டுகள்
பல பறந்து போயின

சூரியனிலிருந்து சக்தி பெற்று
சளைக்காமல் எங்களை
சுமந்து செல்லும்
சின்னஞ்சிறிய விண்கலம்

வானில் சூழல் புரிந்து
வந்துபோகும் திசை தெரிந்து
வரப்போகும் இடர் அறிந்து
வழி நடத்த நான்

என் சைகை புரிந்து
தன் கணினியுடன் இணைந்து
கண நேரம் இமைக்காமல்
கலம் செலுத்த அவன்

இருக்கை மட்டுமே எங்கள்
இருப்பிடமும் உலகமும்
இருவரும் இதுவரை
இரு நிமிடம் பிரிந்ததில்லை
இருந்தாலும் சேர்ந்தார்ப்போல
இரு நிமிடம் பேசியதுமில்லை

பூமியிலிருந்து கிளம்பி
சூரியனிலிருந்து விலகி
நிலவு தாண்டி
செவ்வாய் கடந்து
தொடர்ந்து ஒளிவேகத்தில்
போய்க்கொண்டே......... . . . . . . . . .

திடீரென உறக்கம் கலைந்தேன்
தடுமாற்றம் கலத்திலும் உணர்ந்தேன்
எதிர்பார்க்கவே இல்லை
எதிரே புதிய விண்கோளம்

ஒன்று ஒன்பதாக
ஒன்பது எண்பதாக
வெடித்துச் சிதறி
பெருகிக்கொண்டே இருக்கிறது
நெருப்பு மழையாக

உயிர் தப்ப வேண்டுமெனில்
உடனே கலம் திருப்ப வேண்டும்
உள்ளம் துடிக்கத் திரும்பினேன்

உடன் இருந்தவன் அங்கு இல்லை.

No comments: