
ஆண் மகன் நான்
ஆணவத்துடன் கேட்கிறேன் ....
தேவையா இதுபோன்று
மகளிருக்கென தனியே ஒருநாள்..!!
தடம் பதிக்கிறேன் குழந்தையாய்
தாங்கிப் பிடிக்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் தாயின் வடிவில்
வளர்ந்து வருகிறேன் பாலகனாய்
கூடி விளையாட காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் அக்காவின் உருவில்
படித்து வருகிறேன் மாணவனாய்
வழிகாட்டி உயர்த்தக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் ஆசிரியரின் வடிவில்
வலம் வருகிறேன் சுமைதாங்கியாய்
ஊன்றுகோலாய்த் தாங்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் மனைவியின் உருவில்
உறைந்துபோய் இருக்கிறேன் பாறையாய்
உருக்கி மனிதனாக்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் மகளின் வடிவில்
ஓய்ந்துபோய் இருக்கிறேன் முதியவனாய்
மீண்டும் குழந்தையாக்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் பேத்தியின் உருவில்
எங்கும் அவள் ..
எதிலும் அவள் ....
எல்லாமே அவள் .....
எல்லா நாளுமே அவள்.....
பிறகு ஏன் இந்தநாள்?
அவளுக்கென
தனியே ஒரு நாள்!
No comments:
Post a Comment