Saturday, February 26, 2011

13.இந்த நூற்றாண்டின் நிலவரம்...கலவரமாய்..........!

போர்க்களம்.....


தம் கலையைக் காட்ட

தம்மை நிலை நாட்ட

எதிர் எதிர் துருவங்கள்

வெற்றியைக் குறிவைத்து

வெறியுடன் மோதும் ஆடுகளம் ...


அடியார்கள் கூடிவர

பெரியோர்கள் பாடிவர

தேவதைகள் ஆடிவர

அமைதியாய் வருகிறார் கடவுள்


அரக்கர்கள் வெடிவெடிக்க

ஆயுதங்கள் சடசடக்க

அங்கங்கள் துடிதுடிக்க

ஆர்ப்பரித்து நிற்கிறான் சாத்தான்


பாந்தமாய் நடுவர் கொடியசைக்க

பார்ப்போர் மனதுக்குள் இடிஇடிக்க

இந்தப் பூகோளம் ஒடுங்கிநிற்க

அந்தக் பாதாளம் நடுங்கிநிற்க

தொடங்கிய போராட்டம்....


கடுமையான விதிமுறைகளுடன்

கொடுமையான வழிமுறைகளுடன்

வியூகங்களைப் புரிந்துகொண்டும்

சாகசங்களால் முறியடித்தும்

சமயத்தில் சறுக்கிவிழுந்தும்....

முடிவேத் தெரியாமல்

விடைகாண முடியாமல்

விடாமல் தொடர்கிறது..............


ஏற்கனவே ‘எங்கோ’

செய்துகொண்ட ஒப்பந்தப்படி

கடவுள் வெற்றிபெற்றதாக

’வழக்கம் போலவே’

அறிவிக்கப் படுகிறது......


தேவதைகளின் எண்ணிக்கையும்

கூடிக்கொண்டே இருக்கிறது

நடுவரின் அந்தப்புரத்தில் ....!




[கரு : யாழி]

[படம் : இணையம் /யாரையும் குறிப்பிட்டு அல்ல :) ]

No comments: