Thursday, April 7, 2011

எனது கோணத்தில் திருக்குறள் :வழக்கு 2 : வான் மழையும் , வெண் சுண்ணாம்பும் ஒன்றா ?

வள்ளுவன் வாக்கினை வம்புக்(கு) இழுப்போர்முன்
வந்து தொடுப்போம் வழக்கு


அன்புப் பெரியோர்களே .......

திருக்குறளுக்கான விளக்கஉரையில், தவறான புரிதல் இருப்பதுபோலத் தோன்றும் இடங்களில் தெளிவு பெறுவதற்கான ஒரு முயற்சி இது

வழக்கு 2 :


பொருட்பால் :அங்க இயல்

அதிகாரம் : அவை அறிதல்

குறள் : 714

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்

வான்சுதை வண்ணம் கொளல்.


திரு மு.வரதராசனார் உரை :

அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக நடந்து கொள்ள வேண்டும், அறிவில்லாதவர் முன் தாமும் வெண் சுண்ணம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.

திரு மு.கருணாநிதி உரை :

அறிவாளிகளுக்கு முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன் விளங்கும் அறிஞர்கள், அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்பு போல் தம்மையும் அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும்.

திரு சாலமன் பாப்பையா உரை :

தன்னிலும் மேலான தனக்குச் சமமான அறிஞர் கூடியுள்ள அவையில் தன் நூல் அறிவும் சொல்வன்மையும் வெளிப்படப் பேசுக; தன் அறிவிலும் குறைவான மக்கள் கூடியுள்ள அவையில் அவருக்கு விளங்கும்படி இறங்கிப் பேசுக.


திரு.பரிமேலழகர் உரை :

ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல்- அறிவால் ஒள்ளியாரவைக்கண் தாமும் ஒள்ளியராக; வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல் - ஏனை வெள்ளைகள் அவைக்கண் தாமும் வாலிய சுதையின் நிறத்தைக் கொள்க.. அவர் மதிக்கும் வகை அவரினும் வெண்மையுடையராக என்பார், 'வான் சுதை வண்ணம் கொளல்' என்றார்.

மேலோட்டமாக ஒரு முதல் தகவல் அறிக்கை :

வெண் சுண்ணாம்பு, பால், வெள்ளை, வெண்மை என பல பெயர்கள் வந்துள்ளதே விளக்கவுரையில்....!. உவமைக்காக சுண்ணாம்பு பற்றி எல்லாமா அய்யன் சொல்லி இருப்பார்......?

வழக்கைத் தொடர்வோம் வாருங்கள் :

முக்கியமாக இடறுவது போலத் தோன்றும் இரண்டு சொற்களின் பொருளை ( ஒள்ளியர் , வான் சுதை ) முதலில் காண்போம்


ஒள்:

adj.பிரகாசமான;நல்ல; அழ குள்ள;அறிவுள்ள. In combination the ன் may change into ட் or ண் see ஒட்பம் ஒண்மை etc. , adj. bright, பிரகாசமான;


ஒள்ளி oḷḷi

, n. 1. Red gold; செம்பொன். 2. Šukra; சுக்கிரன்


சுதை cutai :

, n. < sudhā. Ambrosia; தேவாமிர்தம்.. Milk; பால்.

Whiteness; வெண்மை. (சூடா.) . Star; நட்சத்திரம். (அக. நி.) . Lightning; மின்னல். (சங். அக.), n. < sutā. Daughter; மகள். (பிங்.), n. Kicking cow; உதைகாற்பசு., n. < cyuta. Destruction; கேடு.

. சுதைக்குன்று cutai-k-kuṉṟu :, n. < சுதை¹ +. An artificial hillock plastered with chunam; சுண்ணாம்பு பூசிய செய்குன்று

கிடைத்த சான்றுகளில் இருந்து :

ஒள் = நல்ல ,அறிவுள்ள ,பிரகாசமான

ஒள்ளி = செம்பொன், தேவாமிர்தம் எனவும்

சுதை = அமுதம் , சுண்ணாம்பு

என்றிருந்தாலும்

வான்சுதை = வானமுதம்

= வானிலிருந்து வரும்அமுதம்

=மழை என்பதே பொருந்துவதால்......சுண்ணாம்பு விலக்கிக்கொள்ளப் படுகிறது

வான்சுதை வண்ணம் = மழை நீரின் வண்ணம்

=நிறமற்ற தன்மை என்பதுதான் பொருத்தமாக இருக்கும் .

வான்சுதை = வெண்சுண்ணாம்பு என்பதற்கான வாய்ப்பு இல்லை

வானமுதம் என்பது மழைதான் என்பதற்கான சான்றை அய்யனின் வான்சிறப்பு அதிகாரத்தில் இருந்தும் பெறலாம் .

அதிகாரம் 02 : வான் சிறப்பு

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று [02:01]

விளக்கக் குறள் :

மண்ணுயிரின் வாழ்வுயர வானிருந்து மண்புகும்

நல்லமுதம் என்றும் மழை

எனது தீர்வாகவும் உங்களின் ஒப்புதலுக்காகவும் உங்கள்முன் :

விளக்கவுரை :

அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக, மின்னும் பொன்போல் / தேவாமிர்தம்போல் நடந்து கொள்ள வேண்டும், பிறர் / அறிவில்லாதவர் முன் தாமும் வானமுதம்போல் / மழைநீர்போல் வண்ணமில்லாத் தன்மையுடன் அறிவில்லாதவர் போலிருக்க வேண்டும்.

எனது விளக்கக் குறள்:

அறிஞர்முன் மின்னும்பொன் போலிரு; மற்றோர்முன்

வான்மழைநீர் வண்ணம்கொள் வாய்



தீர்ப்புக்காகக் காத்திருக்கிறேன்

No comments: