Tuesday, April 5, 2011

எனது கோணத்தில் திருக்குறள் :வழக்கு 1 : வள்ளுவன் சொன்னது இதைதானா...?

அறிமுகம் :


வள்ளுவன் வாக்கினை வம்புக்(கு) இழுப்போர்முன்
வந்து தொடுப்போம் வழக்கு

அன்புப் பெரியோர்களே ......

திருக்குறளின்மேல் ஓர் இனம்புரியாத பற்று உருவாகி , எளிய தமிழில், மரபிலக்கணம் மாறாமல், குறள்வெண்பா அமைப்பிலேயே விளக்கக் குறள்கள் படைக்கும் முயற்சியின் இடையில் தொடரமுடியாமல் பல தடங்கள்கள் ,தடைக்கற்கள்.......

தெளிவுபெற வேண்டி சான்றோரின் விளக்கவுரைகளைத் தேடி எடுத்து , என்னைச் சரி செய்து கொள்ள நினைத்த பல இடங்களில் ....

இதேக் குழப்பம் அன்றும் இருந்திருக்கிறதோ ? அல்லது அதை சரிசெய்யாமல் / கவனிக்காமல் இருந்திருப்பார்களோ ?

என்ற ஐயங்கள் தோன்றும் அளவுக்கு மொத்தம் 40 இடங்களுக்கும் மேல் இடறல்கள்....விளக்கக் குளறுபடிகள்.... இருப்பதாகத் தோன்றியது..

அய்யனின் வாக்குக்கும்...சான்றோர்கள் தந்த விளக்கத்துக்கும் என்னளவில் பெரிய மாறுதல்களை உணர்ந்தேன்...,

அகராதிகளின் துணையுடனும் , நான் அறிந்து கொண்ட வரையிலும், நடைமுறை( LOGIC) பார்வையுடனும், எனது விளக்கத்தை ஒருபக்கமாகவும் , சான்றோர்களின் விளக்கத்தை மறுபக்கமும் வைத்து உங்கள்முன் படைக்கிறேன் ....

(இது கொஞ்சம் அதிகப்பிரசங்கித் தனமாகத்தான் எனக்கேப் படுகிறது ...இருந்தாலும் தவறு எங்கிருந்தாலும் சரி செய்யப் படவேண்டும் என்று நக்கீரனின் சீடனாக உங்கள்முன் நிற்கிறேன். எனது வாதத்தில் தவறு இருக்கலாம்...இருக்கும் இடங்களில் உங்களின் மாணவனின் தவறாக நினைத்து மன்னித்து விடுங்கள் )

திருக்குறளிலிலிருந்து அவரவர் எண்ணங்களின் அளவுகோலுக்கு ஏற்ப புதுப்புது விளக்கங்கள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் அதிலிருந்து குறளுக்கு ஒத்த அதிர்வுடைய பழுதில்லாத சிறந்த ஒன்றைத் தேர்ந்து கொள்ளலாமே என்ற எண்ணத்தில் விளைந்த தொடர்

இது ..

ஆதரவு அளியுங்கள் பெரியோர்களே ......

தங்களின் மேலான தீர்ப்புக்காகக் காத்திருக்கிறேன்..

[பி.கு : இது திருக்குறளைப் பற்றிய விவாதத் தொடர் அல்ல....

திருக்குறளைப் புரிவதில் ஏதும்பிழை இருக்குமோ? என்ற ஐயமும் ,அதற்கான விளக்கமுமே இந்தத்தொடரில் தொடரும்..]


வழக்கு 1 :

பொருட்பால் : அங்க இயல் /
அதிகாரம் : குறிப்பறிதல் :
குறள் 701:


கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்

மாறாநீர் வையக் கணி.


உரை 1:

ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்க்கு ஓர் அணிகலன் ஆவான்.


உரை 2:

ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன்உலகத்திற்கே அணியாவான்.


உரை 3:

ஒருவன் வாயால் சொல்லாமல் இருக்க, அவனுடைய முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவன் மனக்கருத்தை அறிந்து கொள்பவன், எப்போதும் வற்றாத கடலால் வளைக்கப்பட்ட இவ்வுலகத்தவர்க்குஆபரணம் போன்றவன்.


உரை 4:

குறிப்பு கூறாமை நோக்கி அறிவான் - அரசனால் குறித்த கருமத்தை அவன் கூறவேண்டா வகை அவன் முகத்தானும் கண்ணானும் நோக்கி அறியும் அமைச்சன்; எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி - எஞ்ஞான்றும் வற்றாத நீரால் சூழப்பட்ட வையத்துள்ளார்க்கு ஓர் ஆபரணமாம்.


பார்வை :

அய்யன் வள்ளுவன் ஒரு செய்தி சொல்லும்பொழுது விளக்கத்திற்காக ஒரு உவமையும் சொல்லிச்செல்வார்.

இங்கே..........அமைதியான முகம்பார்த்து ஆழ்மனத்தின் குறிப்பை அறிபவன் , எதற்காக சம்பந்தமில்லாமல் வற்றாத/ஆழ்கடல் சூழ்ந்த உலகத்துக்கு அணிகலனாக வேண்டும் ?

உலகின் ஆபரணம் என்று சொல்லி இருக்கலாமே ?

தொடர்பில்லாமல் இங்கே எதற்காக கடல்பற்றிய குறிப்பு வருகிறது ??

எதையும் போகிறபோக்கில் சொல்லிச் செல்ல அய்யன் எதற்கு???


’மாறாநீர் வையக் கணி’. = ’வற்றாத நீரால் சூழப்பட்ட வையத்துள்ளார்க்கு ஓர் ஆபரணமாம்.’ என்று தவறாகக் கணித்து விட்டோமோ?


வழக்குத் தொடர்வோம் வாருங்கள் :

தமிழில் ஒரு சொல்லுக்கு பல பொருட்கள் உண்டு (கடலுக்கு மட்டும் 100 வகையான பெயர்கள் இருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன் .....

கீழுள்ள சாட்சிகள் ...தேடலில் இருந்து கிடைக்கப் பெற்றவை

  • மாறாநீர் māṟā-nīr =. Sea, ocean; கடல்.
  • வையம் vaiyam : (page 3856) =தொழுக (புறநா. 8). 2. Chariot drawn by horses; குதிரை பூண்டிழுக்கும் இரதம் (சிலப். 6, 120.) (பிங்.) 3. Covered cart; கூடாரவண்டி. மானமர் நோக்கி யும் வைய மேறி (சிலப். 6, 120). 4. Palanquin; சிவிகை. (சூடா.) 5. Conveyance; ஊர்தி. (பிங்.) 6. Bullock; எருது. (பிங்.) 7. The 4th nakatra. See உரோகிணி. (பிங்.) 8.cf.வையம் (p. 902) [ vaiyam ] , s. the earth பூமி; 2. the 4th lunar mansion, உரோகிணி; 3. a palankeen, பல்லக்கு; 4. a car, தேர்; 5. a carriage, வண்டி; 6. a bullock-cart, மாட்டுவண்டி; 7. a conveyance in general, வாகனம்.
  • அணி³ ai = ஆபரணம் ., Array of an army; படைவகுப்பு. 2. Forepart of a vessel, stem, prow; கப்பலின் முன்பக்கம்.


இதிலிருந்து

  • மாறா நீர் = கடல்
  • வையம் = ஊர்தி /வாகனம் எனவும் கொண்டால்
  • மாறாநீர் வையம் = கடல் ஊர்தி /வாகனம் = கப்பல் / படகு எனக் கொள்ளலாம்
  • அணி = கப்பலின் முன்பக்கம் எனக் கொள்வோம் (முன்இரண்டு வார்த்தைகளுடன் [மாறாநீர் வையம்] தொடர்பு இல்லாமையால் ஆபரணமும் ,அணிவகுப்பும் இங்கே பொறுந்தாது )


மொத்தமாக

மாறாநீர் வையக் கணி = ஆழ்கடலைக் கிழித்துச் செல்லும்/ வெல்லும் படகின் முன்பாகம் .


எனது தீர்வாகவும் உங்களின் ஒப்புதலுக்காகவும் உங்கள்முன் :


விளக்கவுரை :

முகத்தைப் பார்த்தே ஆழ்மனதைக் கிழித்து உள்ளிருக்கும் குறிப்பை அறிபவன் , ஆழ்கடலைக் கிழித்து வெல்லும் படகின் முன்பகுதிக்கு ஒப்பானவன்

( இங்கு உவமை பொறுந்தி வருவதாக எனக்குப் படுகிறது )


எனது விளக்கக் குறள் :

முகக்குறிப்பால் உண்மை உணர்ந்துகொள்வோர்; ஆழ்கடல்

நீர்க்கிழித்து வெல்லும் படகு


பெரியவர்களின் தீர்ப்புக்காக காத்திருக்கிறேன் .....No comments: