Tuesday, November 25, 2008

நண்பனுக்கு ஒரு கடிதம்...


அன்பு நண்பன் இளங்கோவனே
அன்பு செலுத்த புது நாய்க்குட்டி தேடும்
இனிய அன்பனே
இன்றும் என்றும் நீ
இளம் கோ வாகவே
இருக்க விரும்புகிறேன்
இருக்கவேண்டும் நம் நட்பும்
இளமையாகவே
இதுபோல இனிமையாகவே

கவனிக்க....!

நீடிக்கும் நட்புக்குத் தடை போட
ஆர்ப்பரிக்கும் அன்புக்கு அணை கட்ட
படை திரட்டி வந்திருக்கிறார்கள்
பல திட்டம் தீட்டி இருக்கிறார்கள்
போட்டிகள் பலவும் வைத்திருக்கிறார்கள்

அவர்கள் வென்றால்
நட்புக்கு நிரந்தரத் தடையாம்
அவர்கள் வீழ்ந்தால்
நான் வெல்வேன்
நாம் வெல்வோம்
நம் நட்பு வெல்லும்
அந்தத்த் தடைக்குத் தான்
இனிமேல் என்றும் தடை

சில எளியக் கேள்விகளை
அவர்கள் முன்
எடுத்து வைத்திருக்கிறேன்
சரம் சரமாய்த் தொடுத்திருக்கிறேன்

"தொலைவில் தெரிகிறதே
தொடு வானம்,
அதை சீக்கிரம்
தொட்டு வா பார்க்கலாம் ! "

துரத்திக் கொண்டு போய் இருக்கிறார்கள்

"தூரத்தில் இணைகிறதே
தண்டவாளம்,
அது சேரும்
புள்ளீயின் தூரம்
இங்கிருந்து அளந்து வா பார்க்கலாம் !"

அளந்து கொண்டு போய் இருக்கிறார்கள்

"பெரியது எது?
புவியின் ஈர்ப்பு விசையா?
பூவின் ஈர்ப்பு விசையா?
புவியின் ஈர்ப்பு வென்றிருந்தால்
பூவிலிருந்து காய் வீழ்ந்திருக்கும் .
காய் இல்லையெனில் கனி இல்லை,
நீ இல்லை நான் இல்லை,
இப்போது சொல்,
எது பெரியது ?
அறிந்து வா பார்க்கலாம் !"

மரத்தின் கீழ் அமர்ந்து
மேல் நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

"பயங்கர அழகு:
கொஞ்சம் கூடுதல்:
ரொம்ப குறைச்சல்:
எதிர் எதிர்ச் சொற்கள்
ஒன்றாய் கூடி
ஒரே அர்த்தம் தரும்
வார்த்தைகள் இன்னும்
பத்து கொண்டு வா பார்க்கலாம் !"

பல திசைகளுக்கும் பறந்து போய் இருக்கிறார்கள்

எனக்குத் தெரியும்
அவர்களில் யாரும்
திரும்பவேப் போவதில்லை

உனக்குத் தெரியும்
இதோ நான்
வந்து கொண்டிருக்கிறேன்
அந்த அழகான
புது நாய்க் குட்டியாக.....

No comments: