Wednesday, February 4, 2009

ஆண் பாவம்...!!!


என் வீட்டில் உள்ளோருக்கும்
என் சொந்தங்கள் எல்லோருக்கும்
அம்மாவின் ஒரு வார்த்தைதான்
ஆண்டவனின் திரு வார்த்தை
அம்மாவை சுற்றித்தான் இங்கே
அனைவரும் சுழன்று வருவோம்

அவளன்றி அங்கே ஒரு
அணுவும் கூட அசையாது
அப்பா வெறும் பார்வையாளராய்
ஒப்புக்குத் தனியாகவே இருப்பார்

நடப்பது எதையும் ஒன்றும் சொல்லாமல்
நிகழ்வது எதுவானாலும் கண்டு கொள்ளாமல்
மெலிதாய் சிரித்து விட்டு அவர்
மெல்லக் கடந்து போய்விடுவார்

மாமியாருக்கு ஏற்ற மருமகளாய்
மாறாமல் வந்துசேர்ந்தாள் என்னவள்

குடும்பத்தின் நிகழ்ச்சிகள்
குழந்தைகளின் பராமரிப்பிகள்
பெரியவளின் கல்யாண வேலைகள்
அடுத்தவனின் கல்லூரிக் கனவுகள்
வரவு செலவு விபரங்கள்
வயல் வெளி நிலவரங்கள்
................
................
சொந்தங்களை சேர்த்து
பந்தங்களைப் பாதுகாத்து
அனைத்தையும் முன் நின்று
அவள்தான் பார்த்துக் கொள்கிறாள்

ஊர்கூடி நின்று அவளை
உயர்த்தி வைத்து பேசுகிறது
நான் வலம்வரும் இடமெல்லாம் அவள்
நலம் பற்றித்தான் தான் விசாரிக்கிறது

வருடம் இருபது கடந்தபின் எந்தன்
பொறுமை முழுவதும் இழந்துவிட்டேன்

"இங்கு நான் ஒருவன் இருப்பது
உங்கள் கண்ணுக்குத் தெரியவே இல்லையா?

என் தோளில்மீது அமர்ந்துதான் அவள்
எல்லாவற்றையும் தாங்குகிறாள்
என்பது யாருக்கும் புரியவே இல்லையா?

எனது தைரியத்தால் தான் அவள்
எதிர் நீச்சல் போடுகிறாள்
என்பது யாருக்கும் உறைக்கவே இல்லையா?

மொத்த சுமையையும் தாங்கிக்கொண்டு
சத்தமில்லாமல் நின்று கொண்டிருக்கும்
எங்களையும் கொஞ்சமாவது
ஏறிட்டுத்தான் பாருங்களேன்"


அப்போதுதான் தற்செயலாய்
அப்பாவை கவனிக்கிறேன்

அப்பாவிடம் அங்கே
அம்மாவைப் பாராட்டி
என்னவோ சொல்லிவிட்டு
எழுந்து போகிறார் யாரோ ஒருவர்

மெல்லிய சிரிப்புடன்
மெதுவாய் தலையாட்டியபுடி
எதுவுமே நடக்காதது போல
ஏகாந்தமாய் அமர்ந்து இருக்கிறார் அவர்

நான் அந்த சிரிப்பை கடந்த
நாற்பது வருடங்களாகப் பார்த்திருக்கிறேன்
ஆனாலும் அதன் முழுஅர்த்தத்தை
அப்போது தான் உணர்ந்துகொள்கிறேன்
விட்டுக் கொடுக்கும் வாழ்க்கைப் பாடத்தை
வரிக்கு வரி புதியதாய் தெரிந்துகொள்கிறேன்

நாலே நொடியில் மனதிற்குள் அப்பா
நாலு மடங்காய் உயர்ந்து நிற்கிறார்

Saturday, January 31, 2009

ஏமாந்தது யாரிடம்.?



சாதகப் பொறுத்தம் பார்த்து
சாதகம் பாதகம் பேசி
நல்ல நேரம் பார்த்து
நாலு முறை கூடிப் பேசி
நல்லபடியாய் முடிவு செய்தனர்
நண்பன் அவன் திருமணத்தை

அங்கே.....

அவளை பற்றி அறிய
அவளைப் பின் தொடர்ந்தார்
அலுவலகத்திலிருந்து அவனின் மாமா

அலுவலக வாசல் தாண்டிய
அடுத்த நிமிடம் குனிந்த தலை
ஆறாவது தெருவில் இருக்கும்
அவள் வீடு வரும் வரை
அங்கே இங்கே திரும்பவில்லை
அரை அங்குலம் கூட நிமிரவில்லை

குடும்பத்தில் விளக்கேற்ற
குலமகளைத் தேடிய இடத்தில்
குத்து விளக்கே கிடைத்த மகிழ்ச்சி
குதூகலமாய் கிளம்பிப்போனார் மாமா

இங்கே......

அவன் நிலைமை விசாரிக்க
அவனிருக்கும் இடம் சென்றார்
ஆர்வத்தோடு அவளின் தாத்தா

இடையிலேயே பார்த்துவிட்டார் அவனை
இடைஞ்சலான போக்குவரத்திலும்
இருசக்கர வாகனத்தில் போகும் அவன்

கரம் கூப்ப வழி இல்லாததால்
சிரம் தாழ்த்தி வணங்கிச் செல்லும்
அவனின் சிறந்த பண்பால்
அங்கமெல்லாம் சிலிர்த்து
ஆரவாரமாய் கிளம்பிப் போனார்

எந்தவிதக் கேள்வியும் இல்லாமல்
அந்தத் திருமணம் இனிதே முடிந்தது

நன்று:ஆனாலும்

ஒரு உண்மை எல்லோருக்கும்
தெரிந்தே தான் ஆக வேண்டும்

அன்று அவள்.......

அலுவலக வாசலில் குனிந்து
அனுப்ப ஆரம்பித்தாள் குறுந்தகவல்(SMS)
அவள் வீடு போய்சேரும் வரை
அதுவும் போய் சேரவே இல்லை
அவளின் குனிந்த தலையும்
அதுவரை நிமிரவே இல்லை

அன்று அவன்.......

கழுத்துக்கும் காதுக்கும்
தோளுக்கும் இடையில் அந்த
அழுத்திப் பிடித்து இருந்த
அலைபேசியில் பேச
தலையை சாய்த்த அவன்
தாறுமாரான போக்குவரத்திலும்
தலையை தூக்கவே இல்லை
தாத்தாவையும் பார்க்கவே இல்லை

இரு வீட்டாரும் சேர்ந்து
இணைந்தே ஏமாந்து போனார்கள்
அவர்கள் எதிபார்க்காத ஒன்றிடம்!
அந்த அலை பேசியிடம்!!

இன்று முதல் இரவு...!


சம்பிரதாயங்கள் முடிந்துவிட்டது
சமயமும் இதோ வந்துவிட்டது
தொடங்கிவிட்டது புதிய வாழ்க்கை
தொடங்கப்போகிறது முதல் இரவு

எனக்கான துணை அவனை
எதிரே முதன்முதலாய்ப் பார்க்கிறேன்
எதற்காக என்றே தெரியவில்லை
எனக்கு அவனைப் பிடிக்கவே இல்லை

என் தகுதிக்கு இது சரியான இடமில்லை
எனக்கு இதில் உடன்பாடு இல்லை
என்றாலும் வேறு வழி இல்லை
எனது குடும்பச் சூழல் சரியில்லை

முகம் முழுவதும் பதட்டம்
முதல் அனுபவமும் இதுதான்
முழு இரவும் தூங்காமல்
விழித்திருக்க வேண்டுமோ?

இதுவரை ஒருநாளும் இருந்ததில்லை
இனியும் முடியுமா தெரியவில்லை
துடிக்கும் நெஞ்சோடு காத்திருக்கிறேன்
அனைவரும் தூங்கும்வரைப் பார்த்திருக்கிறேன்

அத்தனை பேரும் தூங்கிய பின்
ஆள் அரவம் ஓய்ந்த பின்
மெல்ல சன்னலைப் பூட்டி
மெதுவாக கதவை சாத்தி
படுக்கையை உதறி விரித்து
படுத்து உறங்கப் போகி....

இருங்கள்,இருங்கள் உங்களிடம்
இதுவரை நான் சொல்லவே இல்லையே!
இரவுக் காவலாளி வேலை!!
இன்றுதான் சேர்ந்து இருக்கிறேன்!!!

Wednesday, January 28, 2009

ஹவ் ஈஸ் தாட்...!!!!!


ஆங்கிலம் பேசும் அந்நியர்கள்
இங்கிலாந்து நாட்டவர்கள்
இந்தியாவை சுற்றிப் பார்க்க
வந்திருக்கிறார்கள் இன்பச்சுற்றுலா

சுற்றிப் பார்க்க வந்த இடத்தில்
சும்மா இருக்கவில்லை அவர்கள்
சுற்றிக் காட்டும் என்னிடம்
சுரண்டியபடியே இருக்கிறார்கள்

"உங்கள் தாய்த் திரு நாட்டை
நாங்கள் அடிமை படுத்தியிருந்தோம்
எங்கள் காலடியில் மிதித்திருந்தோம்
இருநூறு ஆண்டுகளாய் எங்கள்
இரும்புப் பிடிக்குள் வைத்திருந்தோம்
போராடித்தானே உங்களால்
பெறமுடிந்தது விடுதலையை"

திறந்த வாயை அவர்கள்
திரும்பவும் மூடவே இல்லை

விருந்தோம்பல் போற்றும் நம்மிடம்
வீணாய் வீராப்பு பேசி அவர்கள்
உராய்ந்து கொண்டே இருக்கிறார்கள்
பொறுமை இழக்கவில்லை நான்
பொறுப்பை உணர்ந்தும் இருக்கிறேன்

ஆனாலும் பேசியாக வேண்டும் நான்
அவர்கள் வாயை அடைக்க வேண்டும்
பாரம்பரியம் தெரியாத விருந்தினரை
பழிவாங்கலாம் தப்பே இல்லை

"அன்பர்களே! உங்களுக்குத் தெரியுமா?
அறிந்து கொள்ளுங்கள்உண்மை நிலையை!
கனவானகளே! ஒன்றல்ல இரண்டல்ல
கடந்த எழுபதாண்டுகளாய் நாங்கள்

நித்தம் நித்தம் உங்கள் தாய்மொழியை
கொஞ்சம் கொஞ்சமாய் கொன்று கொண்டிருக்கிறோம்
கடித்து கடித்துத் துப்பிக் கொண்டிருக்கிறோம்
கழுவேற்றிக் சிதைத்துக் கொண்டிருக்கிறோம்

இருநூறு ஆண்டுகள் அல்ல!
ஈராயிரம் ஆண்டுகளானாலும் சரி !!
இதிலிருந்து விடுதலை பெற
இயலுமா அய்யா உங்களால்?
முடிந்த வரையில் நீங்களும்
முயற்சி செய்துதான் பாருங்களேன் !!!"


இப்போதும்

திறந்த வாயை அவர்கள்
திரும்பவும் மூடவே இல்லை

ஹவ் ஈஸ் தாட்...!!!!!

Tuesday, January 27, 2009

என்ன நினைத்திருப்பான்..?


விபத்து !
அப்போதுதான் நடந்திருக்கிறது!!
சிதறியப் பொருட்களால் அந்த இடமே
பதறிப் போய் இருக்கிறது!!!

இரண்டு வாலிபர்கள்
இருசக்கர வாகனத்தில்
நேருக்கு நேர் மோதி
இறந்து போய் கிடக்கிறார்கள்

அரசு மருத்துவமனையில்
அவசரச் சிகிச்சைப் பிரிவில்
முதலுதவிப் பகுதியில்
முதன்மை மருத்துவன் நான்

ஆயிரம் பிணங்களை நான்
அறுத்ததுத் தைத்திருக்கிறேன்
மரத்துப் போயிருக்கிறேன்ஆனாலும்

கண்முன்னே நேரடியாய்க் களத்தில்
காண்பது இதுவே முதல் முறை
என்றாலும் எனக்கு கலவரமாய்
எதுவும் தோன்றவும் இல்லை

தலைக் கவசமும் இடாமல்
தடம் மாறி வந்திருக்கிறான் இவன்
அலைபேசியில் பேசியபடி
அதி வேகமாகவும் வந்திருக்கிறான் அவன்

சாலை விதிகள் மயிராய் மதிக்கப்படதனால்
விலை மதிப்பற்ற உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறது

நின்று நிதானமாய் நான்
நிலமையை கணிக்கிறேன்
இறப்பதற்கு முன்னால் இருவருமே
எதற்காகவோ முயன்றிருக்கிறார்கள்

முதலாமவனைச் சுற்றிலும்
சிதறிய பணத்தைச் சேகரிக்க
முயற்சி செய்து பார்த்திருக்கிறான்
முடியாமல் இறந்து போயிருக்கிறான்

"என்னமாதிரியான உலகம்!
என்றுதான் ஒழியும் பணமோகம்?!"

எனக்குள்ளேயே யோசித்த நான்
எதிர் திசையில் கவனிக்கிறேன்

மற்றவனின் உறைந்த பார்வை
சேர்ந்த இடம் பார்த்த நான்
வாழ்க்கையில்யே முதன்முறையாக
வாய் பேச முடியாமல்
செயல் இழந்து போகிறேன்
கல்லாய் இறுகி இருந்த நான்
மெல்லக் கரைந்து போகிறேன்

"என்ன நினைத்திருப்பான் இவன்?
எங்கே போய்க்கொண்டிருந்தான் இவன்?"

கேள்விகளை கேலி செய்துகொண்டு
கண்முன்னால் சிதறிக் கிடக்கிறது

விரிந்து கிடக்கும் விபூதிப் பொட்டலமும்
திறந்து கிடக்கும் பால் புட்டியும்

Sunday, January 18, 2009

நான்., மன்னார் குடா...!!!



நான் மன்னார் வளைகுடா
இரு நாடுகளின் கரையாய் இருக்கிறேன்
ஒரே இன மக்களின் தரையாய் இருக்கிறேன்

ஒரு மணிநேரம் பயணதூர இடைவெளியில்
அறுபதுவருட ஏற்றத்தாழ்வுகள் வாழும் நிலையில்

ஒரு கரையில் எப்போதும் கடல் காற்று வீசும்
மறு கரையில் இப்போதும் கண்ணீரின் வாசம்

கடல் நோக்கிக் காத்திருக்கிறார்கள் மக்கள்
கடல் காற்று வருமா என இங்கே
காக்க படகு வருமா என அங்கே
காதல் வளர்க்க அமர்ந்து இருக்கிறார்கள் இங்கே
காலன் வருவான் சேர்ந்து இருந்தால் அங்கே

மணல்வெளியில் தட்டுப்படுகிறார்கள் மழலைகள்
மணலில் வீடுகட்டி விளையாடுகிறார்கள் இங்கே
மணலே வீடாய் வீழ்ந்துகிடக்கிறார்கள் அங்கே

வான் நோக்கி எதிர்பார்த்திருக்கிறார்கள் சிறுவர்கள்
வானூர்தி பார்த்தவுடன் கையசைத்து
வழியனுப்பி வைக்கிறார்கள் இங்கே
விமான சத்தம் கேட்டவுடன் குழிக்குள்
வாய்பொத்திக் குதிக்கிறார்கள் அங்கே

நடந்து கொண்டிருக்கிறார்கள் பெரியவர்கள்
நல்ல தூக்கம் வரவழைக்க
நடைப் பயிற்சி செய்கிறார்கள் இங்கே
தூக்கத்தையும் சேர்த்து தூக்கி
துக்கத்தோடு நடக்கிறார்கள் அங்கே

வயிறு பிழைக்க படகேறுகிறார்கள் இங்கே
வாழ்க்கையே பிழைக்க கடலேறுகிறார்கள் அங்கே

வீதியில் அலையும் அவர்களின்
விதியின் உள்நோக்கம் புரியவில்லை
உறவை பிரிந்து தவிக்க அவர்கள்
குற்றமென்ன செய்தார்கள் தெரியவில்லை
பகுத்தறிந்து பார்த்தவரையில்
பகுதிக்குகூட விடை இதுவரை கிடைக்கவில்லை

உண்மையை யார் உணர்வார்?
நிலமையை எவர் உணர்த்துவார்?
அவலம் எப்போது தான் தீரும் !
நிலவரமும் எப்படித் தான் மாறும்!!

ரெய்ன்,ரெய்ன் கோ அவே...!!


மாரி மழை பொய்த்து விட்டது
மானாவாரியும் ஏய்த்து விட்டது
வயல் வரப்புக்குள் எங்கும் நிறைந்து
வெறுமையே வியாபித்திருக்கிறது

ஏழை எங்கள் பிழைப்பு எல்லாமே
மழையை நம்பித்தானே இருக்கிறது
வானம் பார்த்த பூமியெல்லாம்
தினம் ஏங்கும் எங்க மனம்போல
வரண்டுபோய்த் தான் கிடக்கிறது
இருண்டுபோய்த் தான் இருக்கிறது

வீட்டிற்குள் இன்றும் இடி மின்னல்
வீதியில் நின்று சத்தமிடுகிறாள்
விதியை நொந்து சமாளிக்கிறேன்

"ஒரு மழை வந்தாலே போதுமே
இரு போகம் நல்லாவே வெளஞ்சிருமே
கொஞ்சம் பொறுமை காத்தா
மிஞ்சும் காசு பாத்திரலாம்
கொஞ்சம் பொறு ஆத்தா"

கெஞ்சி அவள் முன் நிற்கிறேன்

ஆசைமகனை அடுத்த ஊர்
ஆங்கிலப் பள்ளீயில் சேர்க்க
அவதாரமெடுத்து ஆடுகிறாள்

"போதுமே ஒங்க ஒழப்பு
இதுவுமா ஒரு பொளப்பு
என்னன்னுதான் படிச்சீங்க
என்னத்தப் பண்ணி கிழிச்சீங்க"


விசத்தை வார்த்தையாக்கி
வாய்வழியே கொட்டுகிறாள்

"வெசயம் தெரியாம பேசாதீங்க
வெவசாயமே வேணாமுங்கிறேன்
உழவு மாடு மட்டுமெதுக்கு
உடனே வித்திட்டு வந்து சேருங்க"


எளியவன் சொல் எதுவும்
ஏறவில்லை அம்பலத்தில்
எல்லாம் முடிந்துவிட்டது
மாடு விற்ற பணப்பையோடும்
மறு கையில் பையனோடும்
பள்ளி நோக்கி செல்கிறேன்

உச்சிவேளைப் பொழுதில்
உச்சந்தலையின் நடுவில்
நச்சென விழுகிறது ஒரு துளி
உள்ளே சோர்ந்து போயிருந்த
உயிர் உறக்க விழிக்கிறது
மழையோ என எதிர்பார்த்து
மேலே நிமிர்ந்து பார்க்கிறேன்
கறைபடுத்தி விட்டு காகம் ஒன்று
கடந்து போய்க் கொண்டிருக்கிறது
சொர்ப்ப நேரமானாலும்
சொர்க்கத்தைக் காட்டிய
காக்கையிடம் நான்
கடவுளையே உணர்கிறேன்

பள்ளியினுள் நுழைகிறேன்
பாடம் நடந்து கொண்டிருக்கிறது
மொத்தமாய் சேர்ந்து குழந்தைகள்
சத்தமாய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்

"ரெய்ன் ரெய்ன் கோ அவே..
ரெய்ன் ரெய்ன் கோ அவே ..."


என்ன நிகழ்ந்தாலும் சரி
எந்த விளைவுக்கும் தயாராகிறேன்
வந்த வழியே திரும்புகிறேன்
இந்தப் படிப்புமட்டும் என் குழந்தைக்கு
வேண்டவே வேண்டாம்

Saturday, January 17, 2009

அகதி அகற்ற....!


"அங்கு விரைந்துசென்று போரிடலாம் வா" என்று
இங்கு வீரவசனம் பேசி வாதிடலாம்
இளையோர் கூட்டம் சேர்த்திடலாம்-முதலில்
இங்குள்ள நடைமுறையைப் புரிந்து கொள்
இந்த நாட்டுநடப்பை தெரிந்து கொள்

அபயம் தேடி ஆதரவு நாடி
அண்டி வாழ வந்தவர்களை
அகதி என ஒதுக்கி வைத்து
அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறோம்

"அகதிகள் இல்லாத
அகன்ற உலகம் படைக்க
அலைகடலென படை திரண்டு.....
................................."

அர்த்தமற்ற மேடைப் பேச்சுகளை
அவர்கள் பாடை ஏறும் முன்பாவது நிறுத்துவோம்
அகதி என்ற சொல்லையாவது முதலில்
அகராதியிலிருந்து எடுக்க வலியுருத்துவோம்

'வந்தாரை வாழவைக்கும் தமிழகம்' என்று
நம்பி வெம்பி வந்தவர்களில்
இங்கு வந்து படித்தவர்களுக்கும்
அங்கேயே பட்டம் வாங்கியவர்களுக்கும்
கொஞ்சமும் இடமில்லை வேலை வாய்ப்புகளில்

பொறியாளர் பொதி சுமக்கிறார்...
ஆசிரியர் ஆடு மேய்க்கிறார்......
மேளாலர் மண் வெட்டுகிறார்.....
இயக்குனர் கல் உடைக்கிறார்......
.......
.......

வயிற்றுப் பிழைப்புக்காக
வந்த வேலையை தட்டாமல்
விதியை நொந்து செய்து கொண்டிருக்கிறார்கள்

வந்தவர்களை போட்டியாக நினையாமல்
வேலை வாய்ப்பில் தடம் பதிக்க
இட ஒதுக்கீட்டில் இடம் கிடைக்க
இயன்றதைச் செய்ய முயலுவோம்

மாற்று மொழி,இனத்தாரை
மண் ஆளும்வரை உயர்த்தியிருக்கிறோம்
தன் இனம் தேடிவந்த
தொப்புள்கொடி உறவுகளையும்
தூக்கிப் பிடிக்க தன்னாலானதைச் செய்வோம்

Thursday, January 15, 2009

மனம் ஒரு...!!!


இரக்கம் கொஞ்சம் கூட இல்லாத
இறைச்சிக் கடையின் முன்னால் நான்

ஒன்பதுக்கு மட்டுமேயான கோழிக்கூண்டில்
எண்பதை கூட்டி அடைத்திருக்கிறார்கள்
பட்டினியாகத்தான் இருக்கவேண்டும்
பரிதாபமாய் அத்தனை உயிர்களும்

"உணவேதும் போட்டீர்களா?"

உண்மை அறிய கேட்ட கேள்விக்கு
உதாசீனமாகவே வந்தது பதிலும் கேள்வியாகவே

"விரைவில் சாகப்போகும் அதற்கு
வீணாய் உணவெல்லாம் எதற்கு?"


கூண்டிற்குள் இருந்து
ஒன்றைத் தேர்ந்தெடுத்து
மற்றவையின் கண்முன்னாலேயே
கொடூரமாய்க் கொலைசெய்து
உயிர் போகும் முன்னரே
மயிர் பறித்து தோலுறித்து
........................
........................
தராசிலிருந்து இறக்கி
துண்டுகளாக்கி முடிக்கும் வரை
துடித்துக்கொண்டே இருக்கிறது
தரையில் விழுந்த
இரண்டு இதயங்கள்

"ஒரு உயிரின் கண் முன்னே
மற்றதை கொல்லக்கூடாது
சட்டப்படி குற்றச் செயல் அது
கூடியவரை தவிர்க்கவேண்டும் அதை"


ஓங்கி ஒலித்தது எனது குரல்
ஓரவிழியால் பார்க்கிறான் கடைக்காரன்
என் முகத்திலிருந்து அவன்
எதையோ வித்தியாசமாய் உணர்கிறான்
அவசரமாய் பொட்டலம் கட்டி
அடுத்த நொடி கையில் திணிக்கிறான்

'ஆகா! எடை குறைவாகத் தெரிகிறதே?
அளவில் ஏதும் ஏமாற்றியிருப்பானோ!
ஏதேதோ நினைப்பில் நானும்
எடைகல்லை பார்க்க மறந்து போணேனே!!'

Tuesday, January 13, 2009

ஊரான் பிள்ளையை...!!!


மகப்பேறு மருத்துவமனையின் உள்ளே
அவசரச் சிகிச்சைப் பிரிவில்
அறுவை மருத்துவப் பகுதியின் வெளியே

உடல் சோர்ந்துபோய் ஓய்ந்திருக்க
உள்ளம் ஏங்கிப்போய் வாசலில் தவமிருக்கிறது

பதட்டத்தோடு வருகிறார் மருத்துவர்
அவசரமாய் ஏதோ பெயர் எழுதி
அவன் கையில் திணிக்கிறார்
"காலம் கடந்து விட்டது ஆனாலும்
கடைசியாய் ஒரு முயற்சி
கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்
கருணை அவன் வைத்துவிட்டால்
இரண்டில் ஒன்றாவது பிழைக்கும்"


மருத்துவமனையில் இல்லாத
மிக முக்கியமான மருந்தாம்
தொலைவில் தான் கிடைக்குமாம்
தலை தெறிக்க ஓடுகிறான்

இருசக்கர வாகனம் எடுத்து
நூறுமைல் வேகம் கொடுத்துப் விரைகிறான்
நினைவுகள் அவனைப் புறம் தள்ளி
நிலைகொள்ளாமல் பின்னோக்கிப் பறக்கிறது

பத்து வருடக் கனவு
பாதியிலேயே கலைந்து விடுமா?
கூடும் இடத்தில் ஏளனம்
குடும்பத்திற்குள்ளும் அவமானம்
மலடி என்ற மறைமுகப் பேச்சையும்
முடியாதவன் என்ற மனம் வேகும் ஏச்சையும்
மாற்றி அமைக்க வந்த மாமருந்து
முகம் பார்க்காமலேயே மறைந்துவிடுமா?

திடீர் குறுக்கீட்டால்
தொடர்பு தடைபட்டு
தடாலென நிறுத்துகிறான்
நடுசாலையில் உள்ளங்கை வியர்க்க
நடுங்கிப்போய் நிற்கிறான்

மிரண்ட பார்வையோடு
மேலும் தொடர வழி தெரியாமல்
குட்டி பூனை ஒன்று
குறுக்கே நின்றுகொண்டிருக்கிறது

ஒரு நொடியில் போக்குவரத்து நெரிசல்
இரண்டு பக்கமும் நீண்டுவிடுகிறது

"வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா?!"
"சாவுறதுக்கு என் வண்டியா கெடச்சது!"
"உன் அப்பன் ஊட்டு ரோடா இது !"
"பெரிய கடவுள்னுதான் நெனப்பு!"


ஏச்சுகளும் பேச்சுகளும் தொடர்ந்தாலும்
எதுவும் அவன் காதில் விழவில்லை
'அங்கீகரிக்க அவசியமில்லை
ஆதரவுதர தேவையும் இல்லை-ஆனாலும்
அவமானப்படுத்தாமல் இருக்கலாமே'


வேதனையைத் தாங்கிக்கொண்டு
பூனையையும் தூக்கிக்கொண்டு
மன வருத்தத்தோடு அங்கிருந்து
மருந்து வாங்கக் கிளம்புகிறான்

அதே நேரம் அங்கீகாரம்
அவனுக்கு அங்கே கிடைத்துவிட்டது
தலை தப்பிய சுகப்பிரசவம்
தாயும் சேயும் நலம்