Tuesday, January 13, 2009

ஊரான் பிள்ளையை...!!!


மகப்பேறு மருத்துவமனையின் உள்ளே
அவசரச் சிகிச்சைப் பிரிவில்
அறுவை மருத்துவப் பகுதியின் வெளியே

உடல் சோர்ந்துபோய் ஓய்ந்திருக்க
உள்ளம் ஏங்கிப்போய் வாசலில் தவமிருக்கிறது

பதட்டத்தோடு வருகிறார் மருத்துவர்
அவசரமாய் ஏதோ பெயர் எழுதி
அவன் கையில் திணிக்கிறார்
"காலம் கடந்து விட்டது ஆனாலும்
கடைசியாய் ஒரு முயற்சி
கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்
கருணை அவன் வைத்துவிட்டால்
இரண்டில் ஒன்றாவது பிழைக்கும்"


மருத்துவமனையில் இல்லாத
மிக முக்கியமான மருந்தாம்
தொலைவில் தான் கிடைக்குமாம்
தலை தெறிக்க ஓடுகிறான்

இருசக்கர வாகனம் எடுத்து
நூறுமைல் வேகம் கொடுத்துப் விரைகிறான்
நினைவுகள் அவனைப் புறம் தள்ளி
நிலைகொள்ளாமல் பின்னோக்கிப் பறக்கிறது

பத்து வருடக் கனவு
பாதியிலேயே கலைந்து விடுமா?
கூடும் இடத்தில் ஏளனம்
குடும்பத்திற்குள்ளும் அவமானம்
மலடி என்ற மறைமுகப் பேச்சையும்
முடியாதவன் என்ற மனம் வேகும் ஏச்சையும்
மாற்றி அமைக்க வந்த மாமருந்து
முகம் பார்க்காமலேயே மறைந்துவிடுமா?

திடீர் குறுக்கீட்டால்
தொடர்பு தடைபட்டு
தடாலென நிறுத்துகிறான்
நடுசாலையில் உள்ளங்கை வியர்க்க
நடுங்கிப்போய் நிற்கிறான்

மிரண்ட பார்வையோடு
மேலும் தொடர வழி தெரியாமல்
குட்டி பூனை ஒன்று
குறுக்கே நின்றுகொண்டிருக்கிறது

ஒரு நொடியில் போக்குவரத்து நெரிசல்
இரண்டு பக்கமும் நீண்டுவிடுகிறது

"வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா?!"
"சாவுறதுக்கு என் வண்டியா கெடச்சது!"
"உன் அப்பன் ஊட்டு ரோடா இது !"
"பெரிய கடவுள்னுதான் நெனப்பு!"


ஏச்சுகளும் பேச்சுகளும் தொடர்ந்தாலும்
எதுவும் அவன் காதில் விழவில்லை
'அங்கீகரிக்க அவசியமில்லை
ஆதரவுதர தேவையும் இல்லை-ஆனாலும்
அவமானப்படுத்தாமல் இருக்கலாமே'


வேதனையைத் தாங்கிக்கொண்டு
பூனையையும் தூக்கிக்கொண்டு
மன வருத்தத்தோடு அங்கிருந்து
மருந்து வாங்கக் கிளம்புகிறான்

அதே நேரம் அங்கீகாரம்
அவனுக்கு அங்கே கிடைத்துவிட்டது
தலை தப்பிய சுகப்பிரசவம்
தாயும் சேயும் நலம்

1 comment:

Anonymous said...

tramadol no prescription ways get high tramadol - tramadol dosage liquid