Tuesday, January 27, 2009

என்ன நினைத்திருப்பான்..?


விபத்து !
அப்போதுதான் நடந்திருக்கிறது!!
சிதறியப் பொருட்களால் அந்த இடமே
பதறிப் போய் இருக்கிறது!!!

இரண்டு வாலிபர்கள்
இருசக்கர வாகனத்தில்
நேருக்கு நேர் மோதி
இறந்து போய் கிடக்கிறார்கள்

அரசு மருத்துவமனையில்
அவசரச் சிகிச்சைப் பிரிவில்
முதலுதவிப் பகுதியில்
முதன்மை மருத்துவன் நான்

ஆயிரம் பிணங்களை நான்
அறுத்ததுத் தைத்திருக்கிறேன்
மரத்துப் போயிருக்கிறேன்ஆனாலும்

கண்முன்னே நேரடியாய்க் களத்தில்
காண்பது இதுவே முதல் முறை
என்றாலும் எனக்கு கலவரமாய்
எதுவும் தோன்றவும் இல்லை

தலைக் கவசமும் இடாமல்
தடம் மாறி வந்திருக்கிறான் இவன்
அலைபேசியில் பேசியபடி
அதி வேகமாகவும் வந்திருக்கிறான் அவன்

சாலை விதிகள் மயிராய் மதிக்கப்படதனால்
விலை மதிப்பற்ற உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறது

நின்று நிதானமாய் நான்
நிலமையை கணிக்கிறேன்
இறப்பதற்கு முன்னால் இருவருமே
எதற்காகவோ முயன்றிருக்கிறார்கள்

முதலாமவனைச் சுற்றிலும்
சிதறிய பணத்தைச் சேகரிக்க
முயற்சி செய்து பார்த்திருக்கிறான்
முடியாமல் இறந்து போயிருக்கிறான்

"என்னமாதிரியான உலகம்!
என்றுதான் ஒழியும் பணமோகம்?!"

எனக்குள்ளேயே யோசித்த நான்
எதிர் திசையில் கவனிக்கிறேன்

மற்றவனின் உறைந்த பார்வை
சேர்ந்த இடம் பார்த்த நான்
வாழ்க்கையில்யே முதன்முறையாக
வாய் பேச முடியாமல்
செயல் இழந்து போகிறேன்
கல்லாய் இறுகி இருந்த நான்
மெல்லக் கரைந்து போகிறேன்

"என்ன நினைத்திருப்பான் இவன்?
எங்கே போய்க்கொண்டிருந்தான் இவன்?"

கேள்விகளை கேலி செய்துகொண்டு
கண்முன்னால் சிதறிக் கிடக்கிறது

விரிந்து கிடக்கும் விபூதிப் பொட்டலமும்
திறந்து கிடக்கும் பால் புட்டியும்

No comments: