Monday, February 16, 2009

எங்கே ஆரம்பமானது...?


"கம்பங்கூழும் நீச்ச தண்ணியும்
கஞ்சிச் சோறும் கடிக்க மிளகாயும்
கேப்பை களியும் சோள தோசையும்
கருவாடோடு முந்தாநாளு கூட்டிவச்ச
கறிக் குழம்பும் கொடிக் கறியும்
சகட்டுமேனிக்கு சாப்பிட்ட தாத்தா

நூறுவயசத் தாண்டிய பின்னாலும்
மருந்துக்குக் கூட மருந்து வாங்க
மருத்துவமனை வாசல மிதிச்சதில்லை
மலை போல இன்னும் இருக்கிறார்"


குக்கர் சாதமும் பீசா ரொட்டியும்
உடனடிக் குழம்பும் தடாலடி உணவும்
சத்து மாவும் சக்தியூட்டும் பானமும்
திட்டமிட்டு தினமும் சாப்பிடும் அப்பா

மறந்துபோய் நூறுநாள் தாண்டியும்
மருந்து வாங்க மருத்துவம் பார்க்க
மருத்துவமனை வாசல் மிதிக்காவிட்டால்
தடுமாறித் திணறிப்போய் விடுகிறார்

"சாதாரணமாய் சாப்பிட்ட தாத்தா நல்லா
சம்முன்னுதானே இருக்காரு
கணக்குப் பண்ணி சாப்பிடும் அப்பா ஏன்
கசங்கிப் போயி கிடக்காரு"


தவறு எங்கே நிகழ்ந்தது?
தடம் எப்போது மாறியது?
ஆரம்ப புள்ளியாய் அது
ஆரம்பித்த இடம் எது?

No comments: