இனியொரு விதி செய்ய.. இனியாவது செய்ய...
Saturday, March 7, 2009
அவன்,அவள்,நான்.......
கையில் விஷத்தோடும்
கண்களில் கலவரத்தோடும்
கையும் களவுமாய்
தலை குனிந்து அவன்
தரை பார்த்து நிற்கிறான்
தற்கொலை முயற்சி அது
தடைபட்ட வருத்தத்தில் அவன்
தலைவிறிக் கோலத்தில் அவள்
அண்ணன் என்றும் பாராமல்
அவள் அனலை வாரி வீசுகிறாள்
"சாகவேண்டும் என முடிவெடுத்தபின்
சாதிக்க வாய்ப்பு இருந்த போதும்
அமைதிச் சாவுதான் வேண்டுமெனில்
ஆணாய் பிறந்ததன் அர்த்தமென்ன ?
உன் சாவு சந்தேகத்தோடுதானே
உரசப்படும் இந்த உலகத்தால் !
எதனால் இது நிகழ்ந்தது ?
எப்படி இது நடந்தது ?
மருந்து குடித்தாலா ?
மாரடைப்பு வந்ததாலா ?
பயம் பிடித்ததாலா ?
பாசம் மிகுந்தலா ?
நோய் நொடியாலா ?
நொந்து போனதாலா ?
ஆளாளுக்கு ஒன்று கூறி
அசிங்கத்தின் ஒட்டு மொத்த
அடையாளமாகவே நீ
ஆக்கப் பட்டுவிடுவாயே!
மறந்து விட்டாயா அல்லது
மன்னித்து விட்டாயா ?
அம்மாவையும்
அப்பாவையும்
பொறுக்கி எடுத்து
எரியூட்டி முடித்து
எட்டுநாள் தானே ஆகிறது
அக்காவும் மாமாவும்
அவளது குழந்தையும்
சென்ற இடம் பற்றிய விபரம்
இன்றுவரைத் தெரியவில்லை!
உயிரோடாவது இருக்கிறார்களா ?
உண்மை இன்னும் புரியவில்லை!
எட்டத்தில் உள்ள சொந்தங்கள்
என்னவானார்கள் எனப் புரியவில்லை
பக்கத்தில் உள்ள பந்தங்கள்
பதுங்கிய இடம் தெரியவில்லை
உன்னால் முடியும்!
உண்மை உணர்!!
காயம்பட்ட இதயங்களுக்கு
களிம்பு தடவ முயற்சி செய்!
ஆயிரத்துக்குள் ஒன்றாய் இருந்துவிடாமல்
ஆயிரத்து ஒன்றாய் தனித்து நில்!
மண்ணோடு புதைந்த பின்னும்
உன்னோடு முடிந்து விடாமல்
உன்னுடய தடம் பதித்து செல்!
எதிரியின் மனதில் ஆழமாய்
என்றும் மறையா பயம் விதைத்து செல்!
வாழ்த்தி உன்னை நானே
வழி அனுப்பி வைப்பேன்"
வயதுக்கு மீறிய ஆவேசத்தோடு
வார்த்தைகளைக் கொட்டி விட்டு
இடுப்பில் கட்டியிருந்த என்னையும்
இடை மறைவிலிருந்த பொத்தானையும்
இதமாய் வருடிக்கொடுத்து விட்டு
ஏதோ முடிவோடு
எங்கோ கிளம்புகிறாள் அவள்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நல்ல கவிதை - நல்ல நடை - எளிய சொற்கள் - இயல்பான கருத்துகள்
- தற்கொலைப்படையினைச் சார்ந்த பெண்ணின் மன நிலை அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது
நல்வாழ்த்துகள் துரை
Post a Comment