Saturday, June 20, 2009

சமஉரிமை என்பது......


"மிருகவதை செய்யும் மனிதர்களை
மாறுகை மாறுகால் வாங்குவோம்

பறவைகளை கூண்டில் வளர்க்கும்
கயவர்களை கூண்டில் அடைப்போம்"

கடையின்முன் மறியல் செய்து
கூட்டமாய்க்கூடி ஆர்ப்பாட்டம் செய்து
கூடுகளை உடைத்து பறவைகளை
கூண்டோடு பறக்க விட்டோம்

கிளியும் மைனாவும் திசைக்கொன்றாய்
களிப்புடனே பறந்து மறைந்துபோயின
கைதட்டி ஆரவாரமாய் ஆர்ப்பரித்தோம்

புறாவெல்லாம் கூட்டமாய்ப் பறந்து
திறந்துவிட்டக் கூட்டுக்கேத் திரும்பிவந்தன
திறந்தவாய் மூடாமல் திகைத்து நின்றோம்

குருவிகள் சிலநொடி நேரத்திலேயே
பருந்திடம் சிக்கி பரதேசம் போயின
இருண்ட முகத்துடன் உறைந்து நின்றோம்

காதல்பறவைகள் கண்முன்னாலேயே
கழுகிடம் மாட்டி சிதைந்தே போயின
அதிர்ந்துபோய் முழுதும் மூர்ச்சையாகி நின்றோம்

நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த
நடுநிலையாளர் மெதுவாய்ச் சொன்னார் :
"கூண்டிலாவது அது உயிரோடிருந்திருக்கும்"

தலைகுனிந்து அத்தனைபேரும்
நிலைகுலைந்து கலைந்து சென்றோம்

"எல்லோருக்கும் சமமான அளவுகோல்
எல்லாசமயத்திலும் சரியாய் வராதோ ?
வகைப் படுத்திப் பார்ப்பதுதான்
வாழ்க்கைக்கு உதவும் பாடமோ ??"

No comments: