
அதிகாலைச் சூரியனின்
அற்புத தரிசனத்திற்காக
கிழக்குக்கடற்கரை மணல்வெளியில்
கீழ்திசைநோக்கிக் காத்திருக்கிறேன்
குருதிப்புனலில் முகிழ்கும்
இறுதி நீர்க்குமிழ்போல
மெல்ல வெளிவரும்
காலைக் கதிரவனின்
சென்நிற கிரகணக்கரங்கள்
காத்திருக்கும் என்னிடம்
மொத்தமாய் அள்ளிக்
கொண்டுவந்து சேர்க்கின்றன
உணவில்லா வயிற்றின் ஓலத்தையும்
மருந்தில்லா காயத்தின் ஒப்பாரியையும்
உறுப்பிழந்த உடல்களின் கதறலையும்
உறவிழந்த உள்ளங்களின் உளரலையும்
ஒழுகும் குருதியின் ஓசையையும்
அழுகும் பிணங்களின் வாடையையும்
அழுதோய்ந்த குழந்தைகளின் விசும்பலையும்
கருகிமடிந்த காவல்தெய்வங்களின் சாம்பலையும்
அரைமணி பயணக் கீழ்திசையில்
அத்தனையும் அப்படியே தலைகீழாய் !
எனக்கான அதிகாலை போல
எப்போதங்கே விடியல் வரும் !!
அதிகாலை உதய சூரியனே !
அதிகாரம் படைத்தோரின்
குளிர்சாதன அறைக்குள் சென்று
தயங்குவோருக்கு உண்மை உணர்த்த
தூங்கும் உணர்வுகளை தட்டியெழுப்ப
உன்னால் மட்டுமே
உடனே முடியும் !
உன்னால் உயர்ந்தோரை
உன்சொல் கேட்கவைக்க
உன்னால் மட்டுமே
உடனே முடியும் !!
யுத்தமில்லாமல் பூமிகாக்க
ரத்தமில்லாமல் தேசம்பார்க்க
உன்னால் மட்டுமே
உடனே முடியும் !!!
2 comments:
அரைமணி பயணக் கீழ்திசையில்
அத்தனையும் அப்படியே தலைகீழாய் !
எனக்கான அதிகாலை போல
எப்போதங்கே விடியல் வரும் !!
//
விடியல் நிச்சயம் வரத்தான் வேண்டும்!!
powerful words
Post a Comment