Wednesday, December 22, 2010

பெண்ணியத்தைப் போற்றடா....!



பாதி(50%) கேட்டு

நீதியை நிலைநாட்ட

நாளை நடத்தப்போகும்

மாபெரும் ஆர்ப்பாட்டம்

ஒரு வருங்கால

வரலாறாகப் போகிறது.......


போராட்டமாய்த் தொடங்கி

ஒருபுரட்சியாய் முடியப்போகிறது

நாளைய பொழுது.....


பெண்ணியத்தைப் போற்றவும்

பெண்ணினத்தின் முன்னேற்றவும்

தலைவன் நானே தெருவிலிறங்கி

என்னுயிரையும் தாரைவார்த்து

தீக்குளிக்கவும் தலைமை

ஏற்பேன் அப்பொழுது.......


நாளைய எனது உரை....

ஆண்களின் சுயநல முகத்திரையை

அகற்றும்படி அமையப் போகிறது...

ஒவ்வொரு வார்த்தையிலும்

பொறி பறக்கப் போகிறது...

கூடி இருக்கும் கூட்டத்துள்

தீப் பிடிக்கப் போகிறது....


இதோ.....

33%தான் தருவோமென

வேசமிட்டிருக்கும் ஆண்முகத்தை

ஆவேசமாகக் கிழித்து வெளிப்படுத்தும்

வாசகங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும்

அந்திசாய்ந்த வேளையில்.........


மெல்லக் கதவுதிறந்து

உள்ளே வருகிறாள் அவள்...!


முன்னாலிருந்த அந்த

பாதி மீதியிருந்த கோப்பையை

ஓரத்திற்கு ஒதுக்கி வைக்கிறேன் நான் ...


இனி

தேவையிருக்காது இதற்கு ....!!

Saturday, December 11, 2010

பாரதியின் வளர்ப்பாகிய நான் ...!


பாரதியின் பிறந்த நாளுக்கு ஒரு சமர்ப்பணம் :



வேரோடு மண்மீதில் வீழ்த்தியதாய் எண்ணியே
பாரா(து) இருக்காதீர் பாரோரே - யாருமெதிர்
பாராத நேரமதில் பாரதிரச் சூழ்வேன்;நான்
பாரதியின் அக்கினிக் குஞ்சு ..








(வெண்பா : நேரிசை)
.

Thursday, December 9, 2010

எங்கே போனது மனிதம்.......?


தாண்டிச் செல்வோரெல்லாம்

சொல்லிவைத்தார்ப் போன்று

கவனிக்காதது போல தவிர்த்துவிட...


சாலையைக் கடக்க

வழியற்ற நிலையில்

விழியற்ற ஒருவர்..........


ஒருகரம் கொடுத்தால்

மறுபுரம் சென்றிடுவாரே நொடியில்...!


ஒருமணி நேரமாகியும்

ஓராயிரம்பேர் கடந்தும் - அதில்

ஒருமனிதன் கூட வரவில்லையே...?


என்னாயிற்று மனித நேயம் ??


விடையைக்

கணிக்க இயலாமல்

நிகழ்வைக்

கவனித்து கொண்டிருக்கிறேன்


நான் எனது

சன்னலின் வழியே ........

.

Tuesday, December 7, 2010

என்னவாயிற்றாம் அவருக்கு ?


இன்னல்கள் தீர

இருக்கும் நிலை உயர

நிலைத்த செல்வம் பெற

நீண்ண்ண்ண்ட ஆயுள் அடைய

கடவுளை நோக்கி

கடும் தவமிருக்கிறேன் நான்....


அவர்

இதுவரையிலும் வரவில்லை....

என்னவாயிற்றோ தெரியவில்லை...


பொறுமை இழந்து

விசாரித்த எனக்கு

இடியாய் வந்து சேர்ந்தது

நம்பகமான தகவலொன்று......

ஊரானுக்கு உதவிட

ஓயாமல் உழைத்திடும்

உதவாக்கரை ஒருவன்...


தன்னைப் பற்றியும்

ஒரு நொடியாவது

நினைக்க வேண்டுமென்று

அவனை நோக்கி

கடும் தவத்திலிருக்கிறாராம் அவர் ..


அட..........!

என்னவாயிற்றாம் இவருக்கு ?

Sunday, December 5, 2010

இருக்குமோ.............!

கருந்துளையின் ஆழத்தில்

நிகழ்ந்த பெருவெடிப்பின் ஓரத்தில்

நகர்ந்த பதினோராம் கிரகத்தில்....


பதிமூன்றாம் மாதத்தின்

முப்பத்திரண்டாம் நாளின்

இருபத்தைந்தாம் மணியின்

அறுபத்தொன்றாம் நிமிடத்தில்....


தமது ஏழாம் அறிவால்

எதையோ உணர்ந்து

உதட்டைச் சுழித்து

மெல்ல சிரிக்கிறது...



பிறந்து சில

நொடிகளேயான

அந்தக் குழந்தை ......

Wednesday, December 1, 2010

ஒரு யானையும், ஒரு பூனையும் , நானும்.....:!



எளியவன் இவனிடம்

வலியவன் அவன் தனது

வலிமை மொத்தத்தையும்

வல்லமையாய்க் காட்ட...


இயலாமையால்

இவன் சிரம் குனிந்தே இருக்க..

வன்மத்தோடு

அவன் கரம் உயர்ந்தே இருக்க....


ஒருபக்கமாகவே

ஊசலாடிக் கொண்டிருக்கிறது தராசு


பொறுத்துப் பொறுத்துப் பார்த்து

பொறுமை அத்தனையும் இழந்து


இவனைக் களத்திலிருந்து ஒதுக்கி

அவனுக்கு எதிராய் இறங்கி

நிமிர்ந்து நிற்கிறேன் நான்.......


இவனாகிக் கொண்டிருக்கிறான்

அவன் எனக்கு முன்னால்...............


.

Sunday, November 28, 2010

உங்களுக்கும் தெரியாத ஒன்று....! உங்களின் காலடியில்......!!


தண்ணீரில்லா அந்தக்

கிணற்றிலிருந்து

மீடகப் படுகிறது

ஒரு உப்பிய உடல்.......


சுற்றிலும் சுற்றங்கள்....

கண்ணீர் தேங்கிய கண்கள் ...

கவலை தோய்ந்த கணங்கள்...


எல்லாம் முடிந்து

எங்கோ.....

அது எரியூட்டப்பட்டு

காற்றில் கரைந்தபின்பும்


இங்கே......

வெறுமையால் நிறைந்த

அந்தப் பாழும் கிணற்றின்

கைப்பிடி சுவரையும் தாண்டி


கவனிப்பாரில்லாக் கவலையுடன்

பொங்கிவழிந்து கொண்டிருக்கின்றன .........

‘அதோடு

சேர்ந்து விழுந்த

கரைசேராத சோகங்களும்..

அவிழாத முடிச்சுகளும்...


கொஞ்சம் கவனியுங்கள்...


உங்களின் காலடியிலும்

இருக்கக்கூடும்

இதுபோல

ஏதாவது ஒன்று ......!

Friday, November 26, 2010

தேவையொரு உடனடித் தீர்வு.......!


அரித்த முதுகினைச்

சொறிந்த விரல்களின்

நகக் கண்களில் சேர்ந்திருந்த

அழுக்கினைக் கண்ணுற்ற உடன்...


அகம் கலங்கியதனை

எனக்கு நேர்ந்த மிகப்பெரிய

இழுக்கெனவேக் கருதுகிறேன் நான்....


எப்படியிதுவரை கணிக்காமல் இருந்தேன்?

எதனாலிதை கவனிக்க மறந்தேன்?


குற்ற உணர்வென்னைக்

விடாமல் குதறியெடுக்க


நடந்த தவறை இனியொருமுறை

நிகழாமல் தடுக்கும்

முயற்சியில் என்னை

முழுமூச்சில் இறக்குகிறேன்......


இதோ

தேடி எடுத்துவிட்டேன்...


தொலைந்துபோன அந்த

நகவெட்டியை....


.

Wednesday, November 24, 2010

இதுவும் ஒரு தொடர்கதையாகக் கூடும்..........!


ஊரடங்கிய நடுஇரவில்

முகம்தெரியாத நள்ளிருளில்

தலையணையுள் முகம்புதைத்து

அழுகையுள் அமிழ்ந்து

கொண்டிருக்கிறேன் நான்...


எதிர்பாராத வேளையில்

என்முதுகைத் தடவிவிட்டு

தலையை வருடிவிட்டு.......


துக்கம் கரைந்தபின்


ஏன் ? என்று கேட்ப்பாள்

எனநான் எதிர்பார்த்த வேளையில்

கைகளை மடித்து

தலைக்கு வைத்து

தூங்கிப்போகிறாள் அம்மா...


ஆச்சரியமாய் அவளைப்

பார்த்துக் கொண்டிருக்கிறேன்...


கொதிக்கும் ஆவியில்

வேகும் இட்டிலியை

ஆள்க்காட்டி விரலால்

குத்தி சோதித்து

வெறும் கையால் எடுத்து

எனது தட்டில் வைக்கிறாள் அம்மா


ஆச்சரிமாய் அவளைப்

பார்த்துக் கொண்டிருக்கிறேன்...


தட்டிலதை

துண்டாக்கும் வேளையில்.....

விரல்களைத் தாக்கிய சூட்டில்

கைகளை உதறி பதறியதைத்

தவறவிட்ட அந்த நொடியில்....

உச்சியில் அடித்தார்போல ஒன்று

நச்சென்று உறைக்கிறது எனக்குள்......


அதுவரையிலும்

ஆச்சரியமாகவே தெரிந்த

அமைதியான அம்மாவை.......

இப்போது முதல்

அதிர்ச்சியோடு

பார்க்கத் துவங்குகிறேன் நான்....


"காயங்களால்

உள்ளும் புறமும் காய்த்து

எல்லாமும்

மரத்துப் போயிருக்கிறாளோ

அம்மா..........?!"


( நன்றி : கரு:- ப்ராங்ளின்குமார், நாணற்காடன்)

.

Tuesday, November 23, 2010

தேடுகிறேன் ... தேடுகிறேன் ...தேடிக்கொண்டே.........!


காடெல்லாம் தேடியும்

மேடெல்லாம் ஓடியும்

தவத்தினை நாடியும்


கோவிலைச் சுற்றியும்

ஆலயத்தைத் தட்டியும்

பள்ளியில் முட்டியும்


கடவுளைக் காணும்

வழியெதுவும் தெரியாமல்

நித்தமும் எனது

சித்தம் கலைந்து சிதறவே...


எல்லாம் உதறி

போதுமென்ற நிலையில்

வெளியேறும் வேளையில்

எதிர் நிலையிலுள்ள

கண்ணாடியில் தெரிந்து

மறைகிறது......


எனது பிம்பம்.......

.
(பி.கு : படம் நானில்லை :)