Wednesday, November 24, 2010

இதுவும் ஒரு தொடர்கதையாகக் கூடும்..........!


ஊரடங்கிய நடுஇரவில்

முகம்தெரியாத நள்ளிருளில்

தலையணையுள் முகம்புதைத்து

அழுகையுள் அமிழ்ந்து

கொண்டிருக்கிறேன் நான்...


எதிர்பாராத வேளையில்

என்முதுகைத் தடவிவிட்டு

தலையை வருடிவிட்டு.......


துக்கம் கரைந்தபின்


ஏன் ? என்று கேட்ப்பாள்

எனநான் எதிர்பார்த்த வேளையில்

கைகளை மடித்து

தலைக்கு வைத்து

தூங்கிப்போகிறாள் அம்மா...


ஆச்சரியமாய் அவளைப்

பார்த்துக் கொண்டிருக்கிறேன்...


கொதிக்கும் ஆவியில்

வேகும் இட்டிலியை

ஆள்க்காட்டி விரலால்

குத்தி சோதித்து

வெறும் கையால் எடுத்து

எனது தட்டில் வைக்கிறாள் அம்மா


ஆச்சரிமாய் அவளைப்

பார்த்துக் கொண்டிருக்கிறேன்...


தட்டிலதை

துண்டாக்கும் வேளையில்.....

விரல்களைத் தாக்கிய சூட்டில்

கைகளை உதறி பதறியதைத்

தவறவிட்ட அந்த நொடியில்....

உச்சியில் அடித்தார்போல ஒன்று

நச்சென்று உறைக்கிறது எனக்குள்......


அதுவரையிலும்

ஆச்சரியமாகவே தெரிந்த

அமைதியான அம்மாவை.......

இப்போது முதல்

அதிர்ச்சியோடு

பார்க்கத் துவங்குகிறேன் நான்....


"காயங்களால்

உள்ளும் புறமும் காய்த்து

எல்லாமும்

மரத்துப் போயிருக்கிறாளோ

அம்மா..........?!"


( நன்றி : கரு:- ப்ராங்ளின்குமார், நாணற்காடன்)

.

No comments: