
இனியொரு விதி செய்ய.. இனியாவது செய்ய...
Friday, October 28, 2011
வாரீயளா .....சொர்க்கலோகம் கூட்டிப் போறேன் ...... கலர்கலராக் காட்டப் போறேன்

Saturday, August 20, 2011
கொள்ளை போகுதே எம் பிள்ளைகளின் எதிர்காலம் ....!
ஆற்றுப் படுகையிலிருந்து ஒரு மரண வாக்குமூலம் :
‘கல்தோன்றி, மண் தோன்றா......’ என நம் மக்கள் பேசும்போதெல்லாம் , நம்மையும் ஒரு பொருளாக எடுத்துப் பேசுகிறார்களே என்று மணல் பெருமைபட்டிருக்கும் முன்பு..
ஆனால்........
தொடரும் அடுத்த 10ம் ஆண்டின் முடிவில்
‘கல்தோன்றி, மண் தோன்றா......’ என மேடை போட்டுப் பேசுபவரிடமே கேட்டுக் கொண்டிருப்பவர் எதிர் கேள்வி கேட்பார்
‘எல்லாம் சரிதான் ..மண்ணு, மண்ணுங்கறீங்களே ..
அப்படீன்னா என்ன ?’
கடந்த 20 ஆண்டுகளில் , ஆற்று மணலின் இருப்பில் பாதியை கொள்ளையடிக்கப் பட்ட அவலம் கண்டு ,பொங்கி எழுவோர் யாருமில்லை... தவறி யாரும் எழுந்தாலும் அவருக்கு துணைவருவோர் யாருமில்லை .. நம் குழந்தைகளின் வருங்காலம் நம் கண்முன்னே கொள்ளை போய்க் கொண்டிருப்பதை யாரும் உணர்ந்ததுபோலவேத் தெரியவில்லை .
உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா ?
ஆற்றுப் படுகையில் 1 அங்குலம் உயரத்திற்கு மண் சேகரமாகிப் படிய ஆகும் காலம் 5000 ஆண்டுகள் ..
நமது அரசு ஆற்றில் மணல் அள்ளுவதற்கு அளித்திருக்கும் அளவு 3 அடி ..அதாவது 36 அங்குலம் தோண்டிக்கொள்ளலாம் ...
அதாவது 1,80,000 ஆண்டுகள் சேமிப்பை அரசாணை என்ற பெயரில் அபகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது ...
ஆனால் ... நடப்பது என்ன ???
இயந்திரங்களின் உதவியோடு 20 அடி ஆழம் தாண்டியும் மணல் தோண்டி எடுக்கப் படுகிறது ....அனுமதிக்கப்பட்ட அளவைவிடவும் பல்லாயிரம் மடங்கு அதிகமாக......
என்னவாகும் ஆற்றுக்குப் பக்கத்திலுள்ள இடங்களில் நிலத்தடி நீரோட்ட நிலைமை ?
ஆற்றின் நீர்மட்ட அளவைப் பொறுத்தே அமையும் கிணற்றின் நீர்மட்டங்களும் ....ஏற்கனவே 20 அடியில் கிடைத்த தண்ணீர் இப்பொழுது 40 அடியைத் தாண்டியும் கிடைப்பதில்லை.
கடல் மட்டம் உயரும் பொழுது உள் நுழையும் நீர் பள்ளங்களில் தேங்கி பக்கவாட்டில் நீரோட்டங்கள் மூலமாக விளை நிலங்கள் , கிணறுகளில் கலந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் குலைக்கிறது ... குடிமக்களின் குடி நீர் ஆதாரங்களை அழிக்கிறது
இனி அணைகளில் திறந்துவிடப்படும் நீர்.... இடையிலேயே இந்தப் பள்ளங்களில் தேங்கி, கடைமடையை அடையாமலேயே போகக் கூடும்..
கேரள ஆறுகளில் மணல் எடுக்க அங்கே தடை உள்ளது.அந்த அரசுக்கு மணலின் தேவை புரிந்திருக்கிறது ...ஆனால் இங்கோ...!!
இரவு,பகல் பாராமல் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இங்கிருந்து நம் மணல் வளங்களை கேரளாவுக்குக் கடத்தி கொண்டிருக்கிறோம்....
ஏன் ..நமக்கந்த விழிப்புணர்ச்சி இல்லை...எங்கே போனது நம் சுயபுத்தி .... எப்போதிரிந்து இப்படி சுயநலமாகவே சிதிக்கத் தொடங்கினோம் ?
பழமொழிகளின் பெருமையே அது காலத்தைத் தாண்டியும் நிலைத்து நிற்பதுதான்...
ஆனால் நம் முன்னால் அது தோற்கப் போகிறது ... ஆம் பழமொழிகளின் பெருமையை சிதைத்த பெருமையை நாமே முதன்முதலில் அடையப் போகிறோம்
RIVERS NEVER GO REVERSE
--இந்தப் பழமொழி விரைவில் காணாமல் போகும்...ஆம் ..கடல் ஒருநாள் பொங்கும் போது .. நாம் தோண்டி வைத்திருக்கும் பள்ளங்களின் வழியே கடல்நீர் ஆறாக பின்னோக்கி ஓடத்தான் போகிறது ...
வாழ்க நமது திறமை !...வளர்க அதன் புகழ் ..!!
Monday, August 15, 2011
இன்றே / இன்றாவது பதியமிடுவோம் ......!
இன்றே / இன்றாவது பதியமிடுவோம் .....!
இருவண்ணம் சிறப்படைய
ஒரு வண்ணம் சிந்தி
மூவண்ணம் உயரச் செய்த
முகவண்ணம் தெரியாத
மூத்த உறவுகளின்
தியாகச் சுவடுகளை
இன்றைய இனிப்பையும்
ஒருநாள் விடுப்பையும்
’உலகத் தொலைக்காட்சியில்
முதல்முறையாக’வைத் தாண்டியும்
இன்று
ஒரு தளிர் இதயத்தில்
பதமாய்ப் பதியமிடுவோம்..
அங்கொன்று இங்கொன்று
என்றாலும் ஒருநாள்
ஒன்றாய் சேர்ந்தே தீரும்...
புதிய தலைமுறை
ஒன்று நம்முன் உருவாகும்....
சேர்ந்தே
உருவாக்குவோம்.....
தாய்மண்ணே வணக்கம் !
( நன்றி :படம் :இணையம் )
Friday, August 12, 2011
குழந்தையும் , கோடுகளும்...!
குழந்தையும் , குப்பையும்....!
உணவூட்டும் வரையில்
அங்கிங்கு அசையாமல்
பார்த்துநின்ற நிலவையும்
விளையாடும் ஆசையில்
ஓடிவந்து வாசலிலேயே
காத்திருக்கும் கடவுளையும்
நொடிப்பொழுதில்
விலக்கி விட்டு
விரல் சப்பித்
தூங்கிப்போகிறது குழந்தை....
இதுவரையிலும்
சேர்த்துவைத்தக் குப்பைகளை
கண்காணித்துக் கொண்டும்
இனிமேலும்
சேரப்போகும் சொத்தைகளை
கணக்கிட்டுக் கொண்டும்
விடியவிடிய
தூங்காமல் இருக்கிறேன் நான்......!
,
Monday, August 1, 2011
இங்குமா/ இன்னுமா இனபேதம்???????????

ஆம்..
அதனால்தான் எனக்குப்
பிடிக்காமல் போனது அதை.....
நூற்றாண்டுகள் பலகடந்தும்..
சூழ்நிலைகள் திட்டங்கள்
சூழ்ச்சிகள் நகர்தல்களுக்கேற்ப...
தொடர்ந்து நடந்து
கொண்டிருக்கும் போராட்டம்தான் - ஆனாலும்
வெற்றி தோல்வி பின்வாங்குதல் என
பல முடிவுகளைக் கண்டும்
முடியாமல் தொடர்ந்து கொண்டிருக்கும்
போர்க் களம்தான் - ஆனாலும்
இரு பக்கமும்
சரி சமமான அளவில்
படைத்தளம் தான் – ஆனாலும்இரு பக்கமும்
சரி சமமான எண்ணிக்கையில்
படைபலம்தான் – ஆனாலும்
கறுப்பு வெள்ளை எனப்பெயரளவில்
முன்மொழிந்து உயர்த்துவதுபோல
அழைக்கத்தான் செய்கிறார்கள் - ஆனாலும்
முதல் நகர்த்தலுக்கான வாய்ப்பு
இன்னும் வழங்கப்படவே இல்லை
சதுரங்கத்தில்..........
அந்தக் கருப்புக் காய்களுக்கு மட்டும்...!!!!!
Friday, July 22, 2011
கடமையாற்ற விடுங்களேன்...கனவான்களே...!
அதிகாலையிலேயே நகரம்
பரபரவென அதிர ஆரம்பித்து
மிககிக வேகமாக
சரசரவென நரகமாக
உருமாறத் தொடங்கியிருக்கிறது..
தனது கடமையில் தோல்வியுற்று
இருக்குமிடத்திலிருந்து பதறி வெளியேறி
பகலெல்லாம் எங்கெங்கோ ஒளிந்திருந்து ....
பின்னிரவில் வெளிப்பட்டு
இறுக்கமான அடுக்குமாடிகளை
நெருங்கும்வேளையில்....
ஆங்காங்கே துருத்திக்கொண்டு
மூடியக் கதவுக்கு வெளியே
வெறிநாயெனக் காத்திருக்கும்
குளிரூட்டும் மிருகங்களின்
சன்னமான உறுமலால் மிரண்டு...
சரேலென தரை நோக்கி இறங்க..
அங்கும்
சாத்திய சன்னல்களே வரவேற்க
வேறுவழியின்றி......
சாலையியோரத்தில்
முடங்கிக் கிடக்கும்
தெருநாயின் தலையை
வருடத் தொடங்கும் வேளையில்...
திடுமென...
அதிகாலையிலேயே
அதிர ஆரம்பிக்கிறது நகரம்....
மீண்டும்..
பதறி விலகியோடத்
தொடங்குகிறது தென்றல்......
[நன்றி;கரு :யாழிசை/தங்கராஜ்]
Tuesday, July 5, 2011
க(தை)விதை : அந்தக் கட்டை விரல் ........!

குருதட்சணை என்றபெயரால் குரூரமாய்க்
குறிவைத்து வெட்டி எறியப்படுகிறது
கட்டைவிரல் ஒன்று ........
கற்றுத்தர மறுத்த குருவின் தேவையை
நிறைவேற்றிய மகிழ்ச்சியில் திளைக்கிறான்
விரலை வெட்டிக் கொடுத்தவன்...
தானே கற்றறிந்த மாணவனின் கலையை
வேரறுத்த களிப்பில் மிதக்கிறார்
விரலைக் கேட்டுப் பெற்றவர்...
குருதட்சணை கொடுப்பதற்காக
அந்தத் துரோணரினரின் கட்டைவிரலுக்குக்
குறிவைத்துக் காத்திருக்கிறேன்.....
ஏகலைவனை குருவாகக் கொண்டு
வித்தை பயின்று கொண்டிருக்கும்
நான்........
Wednesday, May 25, 2011
அழகர் சாமியின் குதிரையும்,எங்கேயும் காதலும்...!

எங்கேயும் காதல்
இந்த வருடத்தின் மிகச்சிறந்த பாடல்கள் உள்ள படம் மற்றும் ப்ரபுதேவாவின் நடனம் என்ற குறைந்த பட்ச உத்திரவாதத்துடன் உள்ளே நுழைந்தோம்..
ப்ரான்ஸ்-ல் ப்ரபுதேவா..... காதல் பற்றிய ஒர் அற்புத அறிமுகத்துடன் படத்தைப் பாடலுடன் வித்தியாசமாய் ஆரம்பிக்க...ஆகாவென்று நானும் இருக்கையில் நன்றாக நிமிர்ந்து உக்கார... எழுத்துப் போட ஆரம்பித்த உடனேயே இடி இறங்க ஆரம்பித்தது தலைக்குள்...
..ப்ரான்ஸில் காதலென்றால் ‘உதட்டோடு உதடு' முத்தம் கொடுப்பது மட்டும்தான்...அதுவும் தொடர்ந்து மணிக்கணக்கில் நாள்கணக்கில்...பார்க்கில், பாதையில், பஸ்ஸில், பைக்கில், சாலையில் , கைகோர்த்துப் போகும்போது...இவ்வளவு ஏன்????...’ஆய்’ போகும்போதுகூட விடாமல் முத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்களாம் அங்கே .......
(இந்தப் படம் அங்கே வெளியாகாமல் இருக்க ஆண்டவனை வேண்டுவோம்.....அவர்களை இந்த அளவுக்குக் கேவலப் படுத்தியதற்காக நம்மேல் போர்த்தொடுத்தாலும் ஆச்சரியமில்லை )
தீராத விளையாட்டுப்பிள்ளை நம் கதா நாயகன் ...தினம் ஒரு பெண் வேண்டும் அவர்க்கு...ஆனால் காதல் என்றால் மட்டும் காத தூரம் ஓடுவாராம் ....கதா நாயகியை மட்டும் சீண்ட மாட்டாராம்...
வெளி நாட்டில் வாழ்ந்தாலும் தமிழ்ப்பண்பாட்டின் சிகரம் நம் கதாநாயகி ...... நாயகன் அவளைத் தினமும் தவிர்த்து அவள் கண் முன்னாலேயே வேறு வேறு பெண்களை படுக்கைக்கு அழைத்துக் கொண்டு சென்றாலும் .....அவனைத்தான் காதலிப்பாளாம்........அரைவேக்கா
நிற்க : ஒரு உண்மையை நம்பித்தான் ஆக வேண்டும் . இந்தப்படமும் ’மன்மதன் அம்பு’ம் ஒட்டி உருவான இரட்டைக் குழந்தைகளாகத்தான் இருந்திருக்க வேண்டும் . ஆனால் ஒன்று முந்திப் பிறந்து விட்டது ...
எ.கா: ம.அம்புவில் கமலின் அறிமுகக் காட்சி....அந்தத் துரத்தல்...சண்டை ..எல்லாம் அப்படியே காட்சி / ப்ரேம் மாறாமல் ...இதிலும் இருக்கிறது ..கமலுக்குப் பதிலாக ரவி ..:)
காமெடி என்ற பெயரில் ’கேஸ் ட்ரபுளை’ மையமாக வைத்துக் கேவலமான/ஒரு பெரிய ஆராய்ச்சியே நடத்தி இருக்கிறார் இயக்குனர் ...... இன்னும் தீராத அவரது கலைத்தாகம் அடுத்த படத்திலும் தொடர வாழ்த்துகள்.
ஒரு கட்டத்தில் என்னைப் பார்க்க ...எனக்கே பாவமாய்ப் போக ..ஆண்டவன் இருக்கிறான் என்பதை உறுதி செய்யும் விதமாக வந்தது இடைவேளை ....
ஒரு 10 நிமிடப் பெயிலுக்குப் பின் மீண்டும் ஜெயில் ஆரம்பம் ...
(எனக்கு)
சாலையில் கதாநாயகி சேலையில் அழகாக வந்து நிறக....அங்குள்ள வெளி நாட்டு இளைஞர்கள் ...ஓடிவந்து ‘வாவ்’ சொல்ல , கதா நாயகன் அவர்களிடம் ‘இவள் தமிழ்ப் பொண்ணு’ என்று தமிழில் அறிமுகப் படுத்த...
அதைப் புரிந்து கொண்டு அவர்கள் ”ஓ..5 மினிட்ஸ் ப்ளீஸ்” என்று அவகாசம் கேட்டுவிட்டு
‘அரைமணி நேரத்தில் தமிழ் கற்கலாம்’ என்னும் புத்தகத்தோடு திரும்பிவர..ஆரம்பமாகிறது ஒரு அதகலப் பாடல்
’மங்காய்..... நிலாவின் தங்காய்’
வெளி நாட்டு நாக்குகளின் உச்சரிப்பில் அழகுத் தமிழில் பாடல்..வலுக்கட்டாயமாய் ஆங்கிலப்பாடல்களைச் சொருகும் சூழலில்...இப்படி ஒரு அருமையான சிச்சுவேசன்...அதுவும் மிகப் புதுமையாக.....சேர்ந்த சோர்வெல்லாம் கலைந்து மீண்டும் நிமிர்ந்து உட்க்கார்ந்தேன்....அருமையான நடனம் ...பாதிப்பாட்டில் எல்லாம் கெட்டு ஒழிந்து குட்டிச் சுவராகி விட்டதுL
அந்த லூசுக் கதாநாயகி இங்கேயும் நடுரோட்டில் நின்னுக்கிட்டே கனவுகான ...அந்த வாலிபர்களை ஒதுக்கிவிட்டு...கதா நாயகன் வந்து ஆட ஆரம்பித்துவிட்டான் ...சே.....இந்த எழவைத்தான் ஏற்கனவே பார்த்துக்கிட்டுத்தானே இருக்கோம் .......
என்னடா இது???? எப்படா முடியும் ??? என எனக்குள்ளேயே ஏங்க ஆரம்பித்தேன் ...( அட ..இப்படி ஏங்கித்தான் எவ்ளோ நாளாச்சுது !)
ஒரு காட்சி...கதாநாயகன் சோகத்தில் பேப்பரை / சோபாவைக் கிழித்து வீசும் காட்சி....அட..சொல்லவே இல்லையே விளம்பரத்தில் கூட !!!....ஆச்சரியமாக படத்தில் இந்த ஒருகாட்சி மட்டும் 3Dல் வைத்திருக்கிறாரா இயக்குனர் ?? என வியந்த என் எண்ணத்தில் உடனே மண்/குப்பை/பஞ்சு எல்லாம் விழுந்தது ....எனக்கு முந்தைய வரிசையிலிருந்து ஒரு மிதவாதி எதையோ (எதையோ என்ன எதையோ...சீட்டைத்தான்) கிழித்தி
வீசிக்கொண்டிருந்தார் .....அவரை ஆமோதித்து ஆதரவாகக் கைதட்டல்கள் ...
உள்ளே வந்ததிலிருந்து முதல் முறையாய் ஒரு சின்ன சந்தோசம் எனக்குள் துளிர்ந்தது
” அட.. நாம மைனாரிட்டி இல்ல ..மெஜாரிட்டித்தான்... !”
திடீரென எல்லாரும் எழுந்து நிற்கும் போதுதான் கவனித்தேன்...
படம் முடிந்துவிட்டதாம் ....கடவுளுக்கு நன்றி
(ஒரு நல்ல சுற்றுலா .... இப்படியாக முடிந்து போனது L
ஒரு முக்கிய வேண்டுகோள் :
திருட்டு விசிடி/டிவிடியில் படம் பார்க்காதீர்கள் !
இந்தப்படத்தை......திருட்டு விசிடி/டிவிடியில் கூடப் பார்க்காதீர்கள் !!
முடிவாக :
வீடு வந்து , திட்டு வாங்கிக்கொண்டே ஊருக்கு வந்து சேர்ந்த வேளையில்...ஆட்சி மாற்றத்திற்கு இடையே நடந்த ஒரு பயணம் முடிந்து போனது ......
வழக்கம்போலவே இப்பொழுதும் ...கண்விழித்து...பல்துலக்கி...