இனியொரு விதி செய்ய.. இனியாவது செய்ய...
Friday, January 27, 2012
உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை : ஜெயிக்கப் போவது யாரு ?
அவ்வளவாக தொலைக்காட்சி நான் பார்ப்பதில்லை ... நேற்று சிறிது உடல்வலிபோல இருக்க ..சீக்கிரமாக படுக்கப் போனேன் ..செய்திச் சானலைத் தேடும்போது மிகத்தற்செயலாக ஜெயா தொலைக்காட்சியின் 'செயிக்கப்போவது யாரு ?' நடன நிகழ்ச்சியில் கவனம் பதிந்தது....
கருப்பு கருப்பாக குழந்தைகள் ,இளைஞர்கள் மேடையில் ........ மேகராஜ் தாண்டவன் / பெங்களூரு குழுவினர் .....
'அரவான்' படப் பாடலுக்கான நடனம் ... அரண்டுபோனேன் நான் ...... என்ன ஒரு வெளிப்பாடு ...... கடவுளே ... எனக்குள் ஒருவேகத்தை உருவாக்கிவிட்டார்கள் அந்தக் குழந்தைகள் ........ (படுத்துக் கிடந்தவன் .. நடனம் முடியும் நேரம் ... என்னையும் அறியாமல் நின்று கொண்டிருந்தேன் )
அரவான் படம் இன்னும் வெளியாக வில்லை ...அதன் காட்சி அமைப்புகள் எப்படி இருக்கும் என்று தெரியாது .... ஆனால் அது கண்டிப்பாக இவர்களின் வெளிப்பாடு அளவுக்கு இருக்காது என என்னால் உறுதியாகக் கூறமுடியும் ....
(ஒரு நொடியில் வந்துபோகும் பறவை, பாம்பு ,பல்லி, ஈசன் , எமன் போன்ற வற்றுக்கு அவர்கள் செய்யும் முத்திரை... பெரும் கலைஞர்களையும் மிஞ்சிய வேகம் அது .......
மேகராஜ் முகத்தில் தெரியும் ரெளத்திரம் .... வாய்ப்பே இல்லை ...இன்றைய பெரும் நடிகர்கள்கூட இவரிடம் படிக்க வேண்டும் ........
எனக்காக ஒரு 5 நிமிடங்கள் ஒதுக்கி ... இந்தக் குழந்தைகளை வாழ்த்துங்கள்
http://www.youtube.com/watch?v=iLwv_zK6xxI&feature=player_embedded
(#ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார்கள் ... உங்களின் வாழ்த்துகள் , அவர்களை உயர்த்தட்டும் )
(#என் வாழ் நாளிலேயே உடல் நலக் குறைவு வந்ததற்காக முதன்முதலாக மகிழ்வடைந்த தருணம் இது )
(#காலையிலிருந்து இணையத்தில் பைத்தியம் போல வலைபோட்டுத்தேடி ..இதன் சுட்டி இப்பொழுதுதான் கிடைத்தது )
குடியரசு தின வாழ்த்துகள் ! ..குடியரசு என்றால் என்ன ?
குடியரசுதின நல்வாழ்த்துகள்
குடியரசு என்றால் என்ன ?
குடியரசு நாளே முழுமையாய் நாம்நம்
விடுதலையைப் பெற்றடைந்த நாள்
(#என்குறள்)
ஒருவிளக்கம் :
( #என்போன்ற தெரியாதவர்களுக்கு மட்டும் )
1947 ஆக., 15ல் சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு விடுதலை என்ற பெயரில் டொமினியன் அந்தஸ்து தான் வழங்கியது
(இது விடுதலைக்கான ஆரம்ப அறிவிப்பு வெளியான நாள் )
(#டொமினியன் =ஆங்க்கிலேய மேலாதிக்கத்துக்கு உட்பட்ட சுய ஆட்சி. இதன்படி நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை ஆகியவற்றை அவர்கள் தான் நிர்வகிப்பர். அதன்படி, பிரிட்டிஷார் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருப்பார்).
விடுதலைக்குப் பின், நம்மை நாமே ஆளும் வகையிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு செயல்படும் வாய்ப்புகளைக் கட்டுப்படுத்தவும் ,83 நாடுகளின் அரசியல் சட்டங்களை அராய்ந்து , தேர்ந்து , திருத்தம் செய்து இந்திய அரசியலமைப்பு புதியதாக உருவாக்கப்பட்டது . அந்த அரசியலமைப்பு, 1949 நவ., 26ல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1950, ஜன., 26ல் நடைமுறைக்கு வந்தது. பிரிட்டிசாரின் கவர்னர் ஜெனரல் பதவி நீக்கப்பட்டு, புதிதாக மக்கள் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதி பதவி(மறைமுகமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும்) உருவாக்கப்பட்டது.
இந்தியக் குடியரசு உருவானது
(இதுதான் உண்மையான / முழுமையான விடுதலை நாள் )
வாழ்க உறவுகள்
Sunday, November 6, 2011
வாரீயளா .....சொர்க்கலோகம் கூட்டிப் போறேன் ...... கலர்கலராக் காட்டப் போறேன் ....: 4
ச(ர்)க்கர :( இதுதான்யா சொர்க்கம் - 4)
என்ன செய்யலாம் ????
உச்சந்தலையைத் தடவிய படியே... வண்டி இருக்கையில் அமர்ந்து கண்மூடுகிறேன் ......
மனம்... ஒவ்வொருவருக்கும் உள்ளே இருக்கும் ஓர் உலக அதிசயம் ...
கண்மூடுவதற்காகவே காத்திருந்த்துபோல ...நொடியில் என்னை பின்னோக்கி 20ஆண்டுகள் கடத்திச் செல்கிறது அது.
#தூத்துக்குடி
“அம்மா ..தந்தி வந்திருக்கு”
தந்தி – இந்த வார்த்தையைக் கேட்டவுடன் அம்மாவின் கைகாலெல்லாம் உதறலெடுக்க....
முகம் வெளிறத் தொடங்க ......
இதைப் பார்த்தவுடன் இப்போ தபால்கார்ருக்குப் பதட்டம் ஆரம்பிக்கிறது ..
“ஐய்ய்யோ...எம்மா .... கொஞ்சம் பொறுங்க ...நல்ல சேதிதான் .. நல்ல சேதிதான் “
“கட்டைல போறவனே.. இதை மொதல்லயே சொல்லித் தொலைகிறதுக்கு என்னாவாம் “ சேலை முந்தானையால் முகத்தைத் தொடைத்துக் கொண்டே அம்மா மெல்ல சிரிக்கிறாள் .. அவர்தான் எங்க ஏரியாவின் நிரந்தரப் ‘போஸ்ட்மேன்’ . எல்லாரிடமும் உள்வீட்டு ஆளப்போல பாசமாப் பழகுவார் ...
”என்னத்த சொல்லவிட்டீய ...இப்போ மயக்கம் போட்டிருந்தீயன்னா எஞ்சோலியல்ல உங்க ஊட்டுக்காரரு முடிச்சிருப்பாரு ’’
”சரிசரி ..என்னாவிசயமாம் ..இப்பயாச்சும் சொல்லு தம்பி”
”எம்மா ..மவராசி.. மொதல்ல எனக்குக் கொஞ்சம் நீச்சத்தண்ணியாச்சும் மோராச்சும் கொடுங்க ... போன உசிர திரும்ப வரவசுக்கிறேன் ..”
மெதுவாக தனக்குள் ”மொதல்ல இந்த ‘தந்தி’ கோண்டுபோற வேலைய விடணுமப்பா ”
”உங்க ஊட்டய்யா தங்கச்சி மவா பெரியமனுசி ஆயிருக்குதாம் ...தாதன்குளத்துல கல்வூட்ல விசேசமாம் ..உடனே வரச்சொல்லி தந்தி கொடுத்திருக்காங்க ...”
எங்கிட்டே திரும்பி ‘தொரே...உங்க அயித்த பொண்ணாம் ..ம்ம்ம் ..ஜமாய்” என்கிறார்
”ஓ..”அம்மாவுக்குக் கொஞ்சம் சுதி எறங்கிப்போச்சு ...( அப்பா வீட்டு உறவுன்னா கொஞ்சம் அம்மாவுக்கு ஆகாது ... கலயாணமான புதுசுல ஏதோ பிரச்சினையாம் )
அப்பா வந்தவுடன் தடபுடலாய் டேப்ரெக்கார்டர்வச்ச வெள்ளை அம்பாஸ்ட்டர் கார் பிடிச்சு கெளம்பினோம் .
முக்கியமான ஒரு கேரக்டரை இங்கே அறிமுகப்படுத்தியே ஆகணும் .. என்னோட பிரண்டு ‘ராசாமணி’ .திருப்பூர்காரன் . ஸ்கூல்லீவுக்காக அவங்க சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்திருந்தவன்.. எங்களோடத் தொத்திக் கொண்டான் ...கொஞ்சமா வாய்மட்டும் ஜாஸ்தி ஆவனுக்கு...
அதான் மொதல்லயே அவன்கிட்டே சொல்லிவச்சுட்டேன்
”எலேய் ..ஒங்கூரு மாதிரி இங்கே பேசிக்கிட்டிருக்காதே .... பாத்துக்கோ ...எல்லாப் பயலும் கத்தி வச்சிருப்பான்”
பயந்துட்டேன் போல ... ரொம்ப அமைதியாகவே வந்தான் ...
#தாதன்குளம் :கிராமம்:
வண்டியில வந்த அலுப்புல..எல்லாரும் அடிச்சுப்போட்டாப்ல தூங்கீட்டோம் போல ..காலைல லேட்டாத்தான் எந்திரிச்சோம் நாங்க 2 பேரும் ... வீட்ல கொஞ்சம் பேருதான் இருக்காங்க .. வெளியே திண்ணைல பெரியாத்தா ... கூடத்துல புள்ளைங்க பல்லாங்குழி ,கலஞ்சி (தட்டாமாலை) வெள்ளாண்டுக்கிட்டு இருக்க ..பல்லுவெளக்காம நாங்க மட்டும்தான் போல ...
”அம்மா ..காப்பி கொடு” ந்னு சவுண்டு வுட்டுட்டு ( எப்படியும் அயித்த மகதான் கொண்டுவரப் போறாJ)
ராசாமணிகிட்டே ”கூச்சப்படாம கேட்டுவாங்கி சாப்பிடுல” ந்னு சொன்னேன்..
நெனச்சாப்லயே அவதான் கொண்டுவந்தா...
காப்பியக் கையிலவாங்கி வாயிலவச்சவன் ..ஊருக்குள்ள வந்ததுல இருந்து மொதமொதலா வாயத் தொறந்தான்.
“எனக்கு சக்கர கம்மி .. கொஞ்சம் தாரீங்களா ”
திடீர்ன்னு அங்கே ஒரு அமானுஷ்ய அமைதி.......
அயித்தமக கைய ஒதறி வாயப்பொத்திக்கிட்டே உள்ளே ஓட.....
சளசளன்னு சளம்பிக்கிட்டிருந்து பொடுசுக எல்லாம் கப்புன்னு வாயமூடீட்டு ..அவன ஒருமாதிரியா குறுகுறுன்னு பாத்துட்டு..
”அய்ய்ய்ய..ஆத்தா...இந்த அண்ணன் ஆயிஆயியாப் பேசுது” ன்னு ஆத்தாகிட்டே கோத்துவுட்டுட்டு ... கத்திக்கீட்டே வெளியே ஓடுதுக
திண்ணைல இருந்து ஒரு கும்பா ராசாமணியப் பாத்து பறந்துவந்த்து முன்னே ...
பெரியாத்தா ஆவேசமா வந்தாள் பின்னே ....
“எடு வெளக்குமாற .. பொண்டுபுள்ளங்க இருக்குற எடத்துல யார்ல அவன் ..வாயப்பாரு ...ஏலே மாரி ..ஓடியால ..இந்தப்பயலப் புடிச்சுக் கட்டுல புளியமரத்துல.. பத்தலையாமுல்ல ...அந்தப் படுக்காளிப் பயலுக்கு கொஞ்சம்நஞ்சம் இருக்குறதையும் இழுத்துவச்சு ஒட்ட நறுக்கி காக்காய்க்குப் போடு“
ஈரத்துண்டால மூடிப்போட்ட கோழியப்போல நாடிநரம்பெல்லாம் ஒடுங்கிப்போச்சு அவனுக்கு ..........
மெதுவா என்கையைச் சொரண்டி ”டேய் ..என்னாடா நடக்குது இங்கே ... என்னை ஏண்டா இந்த்த் திட்டு திட்டுது .... நான் என்னடா பண்ணேன்...எதையோ அறுக்க வேற சொல்லுது பாட்டி ?”
”எலேய் ..கொஞ்சம் சும்மாத்தான் இறேன் ... அதான் ஒரே வார்த்தைல ஒருமாசத்துக்கு சனியன இழுத்திட்டீயே”
”ஏண்டா..உங்க ஊர்ல சக்கரைக் கேட்டாத் தப்பாடா,,கம்மியா இருக்கப்போயிதானடா கேட்டேன் ”
”இங்கே சக்கரன்னா வேற அர்த்தம் மக்கா ...”
”அய்யோ ..எனக்குத் தெரியாதே ..அப்படீன்னா என்னடா ”
”விடு விடு..இப்போ வேணாம் ..பொறவு சொல்றேன் ..”
”டேய் ...சொல்லுடா... எனக்கு இப்பவேத் தெரிஞ்சாகணும் ..”
”ம்ம்ம்...நீ சாவணுமுன்னு முடிவு பண்ணீட்டே ...நான் என்ன செய்ய .. ‘சக்கர’ன்னா இங்கே ’குஞ்சுமணி’ன்னு அர்தமுடியோய்.. ... அந்தப்புள்ள கீட்டே பத்தலன்னு நீ கேட்டது அதைத்தான்”
இப்போ நான் சொன்னதக் கேட்டதும் நாக்கு மேலன்னத்தில் ஒட்ட...கண் சொருக ஆரம்பித்தது அவனுக்கு ...
நல்லவேளயா அப்பாவும் அந்தநேரத்துல அங்கே வர அவன் தப்பிச்சான் .
என்ன! ..ஆத்தாவச் சமாதானம் பண்னத்தான் நேரமாகிப் போச்சுது ........
20வருடங்கள் ஆகிவிட்டன ...
ராசாமணி இன்னும் சமாதானமாகவில்லை.. எப்போ சந்தித்தாலும் அவனோட மொதக்கேள்வி இதுதான் ...
”டேய் ..உங்க பெரியாத்தா அன்னிக்கு எதையோ இழுத்துவச்சு அறுக்கணுமுன்னு சொன்னாங்களே ..அது என்னடா “
’‘ நாக்கைத்தான் அவங்க சொன்னாங்கன்னு எத்தனை தடவைதான் உங்கிட்டே சொல்றது”
அவன்தான் இன்னும் இன்றுவரையிலும் என்னை நம்பியதுபோலத் தெரியவில்லை ..
நீங்களாவது நம்புறீங்களா ????
(போய்க்கிட்டே இருப்போமா ............)
Tuesday, November 1, 2011
பெரியாத்தா : -- இதுதான்யா சொர்க்கம் -3
வாரீயளா .....சொர்க்கலோகம் கூட்டிப் போறேன் ...... கலர்கலராக் காட்டப் போறேன் ....:3


அவனை தோள்சேர்த்து பற்றிக்கொண்டேன் ...ம்ம்ம் .. தோட்டத்திலிருந்து வருகிறான் போலும் ...மண்வாசம் ...
Saturday, October 29, 2011
வாரீயளா .....சொர்க்கலோகம் கூட்டிப் போறேன் ...... கலர்கலராக் காட்டப் போறேன் ....: 2

Friday, October 28, 2011
வாரீயளா .....சொர்க்கலோகம் கூட்டிப் போறேன் ...... கலர்கலராக் காட்டப் போறேன்

Saturday, August 20, 2011
கொள்ளை போகுதே எம் பிள்ளைகளின் எதிர்காலம் ....!
ஆற்றுப் படுகையிலிருந்து ஒரு மரண வாக்குமூலம் :
‘கல்தோன்றி, மண் தோன்றா......’ என நம் மக்கள் பேசும்போதெல்லாம் , நம்மையும் ஒரு பொருளாக எடுத்துப் பேசுகிறார்களே என்று மணல் பெருமைபட்டிருக்கும் முன்பு..
ஆனால்........
தொடரும் அடுத்த 10ம் ஆண்டின் முடிவில்
‘கல்தோன்றி, மண் தோன்றா......’ என மேடை போட்டுப் பேசுபவரிடமே கேட்டுக் கொண்டிருப்பவர் எதிர் கேள்வி கேட்பார்
‘எல்லாம் சரிதான் ..மண்ணு, மண்ணுங்கறீங்களே ..
அப்படீன்னா என்ன ?’
கடந்த 20 ஆண்டுகளில் , ஆற்று மணலின் இருப்பில் பாதியை கொள்ளையடிக்கப் பட்ட அவலம் கண்டு ,பொங்கி எழுவோர் யாருமில்லை... தவறி யாரும் எழுந்தாலும் அவருக்கு துணைவருவோர் யாருமில்லை .. நம் குழந்தைகளின் வருங்காலம் நம் கண்முன்னே கொள்ளை போய்க் கொண்டிருப்பதை யாரும் உணர்ந்ததுபோலவேத் தெரியவில்லை .
உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா ?
ஆற்றுப் படுகையில் 1 அங்குலம் உயரத்திற்கு மண் சேகரமாகிப் படிய ஆகும் காலம் 5000 ஆண்டுகள் ..
நமது அரசு ஆற்றில் மணல் அள்ளுவதற்கு அளித்திருக்கும் அளவு 3 அடி ..அதாவது 36 அங்குலம் தோண்டிக்கொள்ளலாம் ...
அதாவது 1,80,000 ஆண்டுகள் சேமிப்பை அரசாணை என்ற பெயரில் அபகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது ...
ஆனால் ... நடப்பது என்ன ???
இயந்திரங்களின் உதவியோடு 20 அடி ஆழம் தாண்டியும் மணல் தோண்டி எடுக்கப் படுகிறது ....அனுமதிக்கப்பட்ட அளவைவிடவும் பல்லாயிரம் மடங்கு அதிகமாக......
என்னவாகும் ஆற்றுக்குப் பக்கத்திலுள்ள இடங்களில் நிலத்தடி நீரோட்ட நிலைமை ?
ஆற்றின் நீர்மட்ட அளவைப் பொறுத்தே அமையும் கிணற்றின் நீர்மட்டங்களும் ....ஏற்கனவே 20 அடியில் கிடைத்த தண்ணீர் இப்பொழுது 40 அடியைத் தாண்டியும் கிடைப்பதில்லை.
கடல் மட்டம் உயரும் பொழுது உள் நுழையும் நீர் பள்ளங்களில் தேங்கி பக்கவாட்டில் நீரோட்டங்கள் மூலமாக விளை நிலங்கள் , கிணறுகளில் கலந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் குலைக்கிறது ... குடிமக்களின் குடி நீர் ஆதாரங்களை அழிக்கிறது
இனி அணைகளில் திறந்துவிடப்படும் நீர்.... இடையிலேயே இந்தப் பள்ளங்களில் தேங்கி, கடைமடையை அடையாமலேயே போகக் கூடும்..
கேரள ஆறுகளில் மணல் எடுக்க அங்கே தடை உள்ளது.அந்த அரசுக்கு மணலின் தேவை புரிந்திருக்கிறது ...ஆனால் இங்கோ...!!
இரவு,பகல் பாராமல் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இங்கிருந்து நம் மணல் வளங்களை கேரளாவுக்குக் கடத்தி கொண்டிருக்கிறோம்....
ஏன் ..நமக்கந்த விழிப்புணர்ச்சி இல்லை...எங்கே போனது நம் சுயபுத்தி .... எப்போதிரிந்து இப்படி சுயநலமாகவே சிதிக்கத் தொடங்கினோம் ?
பழமொழிகளின் பெருமையே அது காலத்தைத் தாண்டியும் நிலைத்து நிற்பதுதான்...
ஆனால் நம் முன்னால் அது தோற்கப் போகிறது ... ஆம் பழமொழிகளின் பெருமையை சிதைத்த பெருமையை நாமே முதன்முதலில் அடையப் போகிறோம்
RIVERS NEVER GO REVERSE
--இந்தப் பழமொழி விரைவில் காணாமல் போகும்...ஆம் ..கடல் ஒருநாள் பொங்கும் போது .. நாம் தோண்டி வைத்திருக்கும் பள்ளங்களின் வழியே கடல்நீர் ஆறாக பின்னோக்கி ஓடத்தான் போகிறது ...
வாழ்க நமது திறமை !...வளர்க அதன் புகழ் ..!!
Monday, August 15, 2011
இன்றே / இன்றாவது பதியமிடுவோம் ......!
இன்றே / இன்றாவது பதியமிடுவோம் .....!
இருவண்ணம் சிறப்படைய
ஒரு வண்ணம் சிந்தி
மூவண்ணம் உயரச் செய்த
முகவண்ணம் தெரியாத
மூத்த உறவுகளின்
தியாகச் சுவடுகளை
இன்றைய இனிப்பையும்
ஒருநாள் விடுப்பையும்
’உலகத் தொலைக்காட்சியில்
முதல்முறையாக’வைத் தாண்டியும்
இன்று
ஒரு தளிர் இதயத்தில்
பதமாய்ப் பதியமிடுவோம்..
அங்கொன்று இங்கொன்று
என்றாலும் ஒருநாள்
ஒன்றாய் சேர்ந்தே தீரும்...
புதிய தலைமுறை
ஒன்று நம்முன் உருவாகும்....
சேர்ந்தே
உருவாக்குவோம்.....
தாய்மண்ணே வணக்கம் !
( நன்றி :படம் :இணையம் )
Friday, August 12, 2011
குழந்தையும் , கோடுகளும்...!
குழந்தையும் , குப்பையும்....!
உணவூட்டும் வரையில்
அங்கிங்கு அசையாமல்
பார்த்துநின்ற நிலவையும்
விளையாடும் ஆசையில்
ஓடிவந்து வாசலிலேயே
காத்திருக்கும் கடவுளையும்
நொடிப்பொழுதில்
விலக்கி விட்டு
விரல் சப்பித்
தூங்கிப்போகிறது குழந்தை....
இதுவரையிலும்
சேர்த்துவைத்தக் குப்பைகளை
கண்காணித்துக் கொண்டும்
இனிமேலும்
சேரப்போகும் சொத்தைகளை
கணக்கிட்டுக் கொண்டும்
விடியவிடிய
தூங்காமல் இருக்கிறேன் நான்......!
,