
பளீரென சுட்டெரிக்கும் வெயிலில்
பஞ்சை விரித்து உலரவைக்கையில்
கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை
கொடூரமாய் கொட்டியது மழை
தற்செயலாய் தான் கவனித்தேன்
தாண்டிப் போய்க்கொண்டிருந்தாள் அவள்
இலைகள் கூட அசைய மறுக்கும்
இறுக்கமான சூழலில்
மாவு திரித்து பதமாய்
மாடியில் பரப்பிவைக்கையில்
சுழற்றி அடித்து ஓய்ந்தது
சூறாவளியாய் காற்று
சுற்றிலும் தேடினேன் நான்
நினைத்தது போலவே வாசலில்
நின்றுகொண்டிருந்தாள் அவள்
இருமனங்கள் இணையும்
திருமண மண்டபத்தில்
தாலி கட்டப்போகும் நேரத்தில்
தானாக வியற்கிறது மூக்கின் மேல்
என்னவோ நடக்கப்போகிறது
என் மனதுக்குள் பட்சி அலறியது
மளமளவென குடை விரித்து
மணமேடையின் மேலிருக்கும்
மணமக்களுக்குப் பிடிக்கிறேன்
ஒட்டுமொத்தமாய் எல்லோரும்
ஒரு மாதிரியாய் பார்க்கிறார்கள் என்னை
பாவம்! ஒன்றும் புரியாதவர்கள்!!
பரிதாபமாய் நனையப்போகிறார்கள்!!!
எனக்கு மட்டும்தானே தெரியும்
என்ன நடக்கப்போகிறதென்று
வாசல் தாண்டி உள்ளே
வந்து கொண்டிருக்கிறாள் அவள்
No comments:
Post a Comment