
திடீரென அழுகுரல் கேட்டு
திடுக்கிட்டு விழிக்கிறேன் நான்
விடியவில்லை இன்னமும்
விரலில் நகம் கூடத் தெரியவில்லை
படபடத்து எழுகிறேன் பதறிக்கொண்டு
பக்கத்தில் குழந்தை கதறிக்கொண்டு
பால்க்காரன் இன்னும் வரவில்லை
பசியடக்க என்ன செய்ய தெரியவில்லை
சிரித்தபடி இருக்கிறாள் அவள்
பால்பொடி பெட்டியை திறந்து
பதட்டத்தில் போட்டு உடைத்து
மீதியை அள்ளி எடுத்து
பாத்திரத்தில் சேர்ப்பதற்குள்
பாதி உயிர் போய்விடுகிறது எனக்கு
சிரித்துக்கொண்டிருகிறாள் அவள்
எரிவாயு உருளையையும்
எரியாத அடுப்பையும் பார்த்ததும்
ஏழு உலகம் சுற்றுகிறது எனக்கு
"ஏன் இந்த பொழப்பு நமக்கு?"
சிரித்துக்கொண்டே இருக்கிறாள் அவள்
ஒருவழியாய் பாத்திரத்தில் அடைத்து
ஓடிப்போனவன் ஒடுங்கிப்போய் நிற்கிறேன்
சலனம் ஏதுமின்றி குழந்தை அங்கே
சகலமும் அடங்கிப்போகிறது எனக்கு இங்கே
எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏங்கி ஏங்கிஅழுது குழந்தை
விரல் சப்பி விழி மூடி
தானாகவேத் தூங்கிப் போயிருக்கிறது
சிரித்துக்கொண்டுதான் இருக்கிறாள் அவள்
எனக்கு என் மேலேயே வந்த கோபம்
எதிர்பாராமல் திரும்புகிறது அவளிடம்
"அதற்குள் என்ன அவசரம் உனக்கு?
எதுவுமே தெரியவில்லையே எனக்கு?
என் நிலை பார்த்தபின் சிரிக்கலாமா?
என்னைத் தவிக்கவிட்டு நீ போகலாமா?
நிகழ்காலம் என் கண்ணை மறைக்கிறது
எதிர்காலம் என்னை ஏளனம் செய்கிறது
தனியே இருந்து நான் சமாளிப்பேனா?
நினைவிலாவது துணையாய் இருப்பாயா?"
இன்னும் அவள்
சிரித்துக்கொண்டுதான் இருக்கிறாள்
அந்தப்புகைப் படத்துக்குள் இருந்து.
1 comment:
சொல்ல வார்த்தைகள் இல்லை..அருமை..
Post a Comment