இனியொரு விதி செய்ய.. இனியாவது செய்ய...
Saturday, December 13, 2008
உள்ளே, வெளியே !
"புத்திகெட்ட மனுசனுக்கு
எத்தனை சொன்னாலும் புரியாது"
வாசலில் நுழைந்தவுடன்
வந்து விழுகின்றன வசவுகள்
எதற்காகவோ என்னை
ஏசிக்கொண்டே இருந்தாள்
கவனித்துவிட்டேன் ஆனாலும்
கவனிக்காமல் உள்சென்றேன்
பேருந்தில் இடம் பிடிக்க ஓடி
படியில் இடறி தடுமாறி
இடம் கிடைக்காமல் நின்றேன்
"இதுகூட முடியலின்னா
எதுக்கு மீசைன்னு ஒன்னு"
அவளின் கேலிப்பேச்சு
ஆழமாய்க் குத்தினாலும்
சட்டை செய்யாமல்
சன்னல் வழியே
வெளியே பார்த்தேன்
திரையரங்க வாசலில்
தெருவரையுள்ள வரிசையில்
முட்டி மோதும் சிறுவர்களுக்கு
ஓரம் ஒதுங்கி இடம் கொடுத்து
கொஞ்ச நேரம் கழித்து
கசங்கிப்போய் வெளியேவந்தேன்
"சின்னப் பசங்களக்கூட
சமாளிக்க முடியல
என்னத்த சாதிப்பிங்களோ?
என்னதான் பன்னுவீங்களோ?"
எப்போதும் போலவே
இந்தக்காதில் வாங்கி
அந்தக்காதில் விட்டு
அடுத்த வேலைக்குத் தயாரானேன்
கடற்கரையில் கால் நனைக்கையில்
"கொஞ்ச நேரம் இருங்க
குழந்தையை பாத்துக்கோங்க"
பதில் எதிர்பாராமல்
பரபரவென விலகிப்போனவள்
பதட்டத்தோடு திரும்பிவருகிறாள்
"வாங்க போயிறலாம் இங்கேயிருந்து
வம்பு செய்ராங்க ஏங்கிட்ட அங்கேயிருந்து"
அவளைக் கடந்து பார்க்கிறேன்
அங்கே திருட்டுப் பார்வையோடு
திடகாத்திரமாய் நால்வர்
தொடர்ந்து வந்திருக்கிறார்கள் அவளை
அடுத்த நான்கு நிமிடங்களில்
அங்கே யாரும் எதிர்பாராமல்
ருத்திரத் தாண்டவம் ஆடி அடங்குகிறேன்
யுத்தக் காண்டமே நடத்தி முடிக்கிறேன்
அந்த நால்வரும்
அவள் முன்னால் மண்டியிட்டு
மன்றாடி வேண்டி மன்னிப்புக் கேட்டு
மறு விநாடி மறைந்து போகிறார்கள்
"எந்தப் பிரச்சினையும் இல்லை
எல்லாம் முடிஞ்சு போச்சு
எங்கே போகலாம் அடுத்து?"
எதுவுமே நடக்காதது போல
அவள் முகம் பார்த்து கேட்டு
அப்பாவியாய் நிற்கிறேன்
அவளோ என்முகம் பார்த்து
அனைத்தும் உறைந்து நிற்கிறாள்
குழம்பிய முகத்தோடு
கலங்கிய சிந்தனையோடு
குற்ற உணர்ச்சியோடு
குறுகுறு பார்வையோடு
இதுவரைப் பார்த்துதற்கும்
இப்போது பார்ப்பதற்கும்
உள்ள வித்தியாசம்
உள்ளபடியே உணர்கிறேன்
மெதுவாய் என் கை பிடிக்கிறாள்
இதமாய் வாய் திறக்கிறாள்
"நீங்க போங்க முன்னாடி!"
மறுநாள் மாலை
மதிமயக்கும் வேளை
வரவேற்பு எதிர்பார்த்து
வீட்டுக்குள் நுழைகிறேன்
"புத்திகெட்ட மனுசனுக்கு....
..........................."
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment