இனியொரு விதி செய்ய.. இனியாவது செய்ய...
Wednesday, December 10, 2008
என் நிலை என்ன..?
சூறாவளியின் மையத்தில் நான்
சுனாமியின் சுழற்சிக்குள் நான்
என் கரு சுமப்பவள்
என்னை கருவில் சுமந்தவள்
இடையில் ஏதும் புரியாமல் நான்
தன் நிலை காக்க ஒருவள்
தன்னை நிலை நாட்ட மற்றவள்
என் நிலை தெரியாமல் நடுவில் நான்
இறுகும் சுருக்கு கயிறு கழுத்தில்
இரண்டு கத்தியின் மேல் நிற்கிறேன்
பிரச்சினையை நிறுத்த
பேசியே ஆக வேண்டும் நான்
எனக்குத் தெரிந்ததை அவர்களிடம்
எடுத்துச் சொல்லி அறிவுரித்தி
வேகமாகக் கோபத்தோடு
வெளியேறிப்போகிறேன் நான்
அந்திசாயும் நேரம்
அமைதியாய் உள் நுழைகிறேன்
ஆரவாரம் ஏதும் இல்லை
ஆள் அரவமும் இல்லை
அந்த அமைதி எனக்கு
ஆயிரம் அர்த்தங்கள் சொல்கிறது
என்னவோ நடந்திருக்கிறது
எதுவோ நடக்கவும் போகிறது
இருவரும் ஒன்றாய் சேர்ந்து
இருதுருவமும் ஒருசேர இணைந்து
எனக்கு எதிரே நிற்கிறார்கள்
எனக்கு எல்லாமே புரிந்துவிட்டது
எற்கனவே சமாதனம் ஆகிவிட்டது
ஏதோ உடன்படிக்கையும் முடிந்துவிட்டது
"எங்களுக்குள் ஆயிரம் இருக்கும்
உங்களை யார் இடையில் வரச் சொன்னது?"
முகத்துக்கு நேரே கேட்டுவிட்டு
முகம் திருப்பி உள்சென்று விட்டார்கள்
எதிர் எதிரே
எதிரியாய் நின்றவர்களுக்கு
எதிர்பாராமல் நான் இப்போது
எதிரியாய் ஆகிப்போனேன்
திருதிருவென விழித்துக்கொண்டு
தன்னந்தனியே நான்
என் நிலை என்னவென்று
எனக்கு இப்போதும் புரியவில்லை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment