Wednesday, January 7, 2009

அறுபதாண்டுக் கனவு..!


கார் வாங்கி இருக்கிறேன்..
கார் வாங்கி இருக்கிறேன்...
கார் வாங்கி இருக்கிறேன்....
குளிர் சாதன வசதியுடனான
குளுகுளு குட்டிக் கார் அது

அறுபதாண்டுக் கனவு
ஆறு வயதில் எதிர்வீட்டு மிதிவண்டி மீது
அன்று ஆரம்பமான ஏக்கம் அது
இருபது வயதில் கார் மீது வந்து நின்றது

கோழி பக்கத்தில் வந்தாலும்
கோழியின் இறகு பட்டு
கோடு ஏதும் விழுந்திருக்குமோ என்று
குனிந்து தடவிப் பார்க்கிறேன்
காகம் தாண்டிப் போனலும்
கறை ஏதும் பட்டிருக்குமோ என்று
கவலையோடு கவனித்துப் பார்க்கிறேன்

பேரக் குழந்தைகள் ஆசையோடு
பாய்ந்து வந்து ஏறும்போது
"பாத்து,பாத்து" எனக் கத்தியே
பதறி தவித்துப் போகிறேன்

பழைய நண்பன் ஒருவன்
பக்கத்து தெரு போய்வரக் கேட்டதற்கு
"பையனுக்கே இன்னும் கொடுக்கவில்லை
பரதேசி உனக்கு இப்போது எதற்கு"
என
பதில் கூறிவிட்டு விரைகிறேன்

போக்குவரத்து நெரிசல் இருந்தாலும்
பத்தடி இடைவெளி சுற்றிலும்
சுத்தமாய் இருக்க பார்த்துக் கொள்கிறேன்
பாதுகாப்பாய் ஓட்டிச் செல்கிறேன்

கிண்டலும் கேலியும் என்னைச் சுற்றி
கண்டுகொள்ளவே இல்லை நான் அதனைப் பற்றி
கோழிதானே அறியும் முட்டையிடும் எரிச்சல் பற்றி

இன்று வெளியூர் பயணம்
இரவே வண்டியை எடுத்து
அங்குலம் அங்குலமாய் அலசி
அத்தனையும் துடைத்து
பள பளவென இழைத்து
பளிங்கு போலாக்கி நிறுத்தியிருக்கிறேன்

ஒருவரையும் தொடவிடாமல்
ஒவ்வொரு கதவாய் நானே திறந்து
ஒழுங்காய் அமரவைத்து
ஒருவழியாய்க் கிளம்புகிறோம்

சாலை சந்திப்பு. உச்சி வெயில்.
சன்னலைச் சுற்றி மொய்க்கும்
பிச்சை எடுக்கும் குழந்தைகள்
பார்த்தவுடன் மனது பதறிப் போகிறது
தொட்டு கோடிட்டு விடுவார்களோ?
முட்டிக்கொண்டு வந்த கோபம்
மூக்கின் மேல் நிற்கிறது

அப்போது தான் கவனிக்கிறேன்
அந்தக் குட்டிக் குழந்தை
எனது பக்க சன்னல் கண்ணாடியில்
தனது கன்னம் ஆழப் பதித்து
சில்லிடும் குளிர்சாதனத்தின்
சிலிர்ப்பூட்டும் குளிர்ச்சியை
உள் வாங்கிக் கொண்டு
உலகையே மறந்து நின்றுகொண்டிருக்கிறது


மயான அமைதி வண்டிக்குள்
மறு நிமிடம் நிகழப்போவதை
எதிர்கொள்ளும் தைரியம் இல்லாமல்
என்ன நடக்கும் என்றும் தெரியாமல்
உள்ளம் உறைந்துபோய் என்னையே
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

இதுவரை உறைந்துபோயிருந்த நான்
இப்போதுதான் உருகத்தொடங்கி இருக்கிறேன்
அன்று குழந்தையாய் நான் கொண்ட ஏக்கம்
இந்தக் குழந்தையின் முகத்தில் பார்க்கிறேன்
அறுபது வயது உடல் உள்ளே இருந்தாலும்
ஆறு வயது மனதுடன் வெளியே உணர்கிறேன்

பச்சை விளக்கு ஒளிர்கிறது
பின்னாலுள்ள வாகனங்களின்
ஒலிப்பானின் ஓசை
ஒன்றாய் சேர்ந்து ஓங்கி
ஒலித்துகொண்டே இருக்கிறது............
......................................
......................................

2 comments:

ஆர்.வேணுகோபாலன் said...

அதெல்லாம் சரி! நான் வந்தால் உட்கார வைத்து ஊர் சுற்றிக் காட்டுவீர்களா? :-)

தமிழன் வேணு

ரிதன்யா said...

அருமை நண்பரே
//பச்சை விளக்கு ஒளிர்கிறது
பின்னாலுள்ள வாகனங்களின்
ஒலிப்பானின் ஓசை
ஒன்றாய் சேர்ந்து ஓங்கி
ஒலித்துகொண்டே இருக்கிறது............
......................................
......................................//

மனிதம் தின்று மனிதம் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.