இனியொரு விதி செய்ய.. இனியாவது செய்ய...
Wednesday, February 4, 2009
ஆண் பாவம்...!!!
என் வீட்டில் உள்ளோருக்கும்
என் சொந்தங்கள் எல்லோருக்கும்
அம்மாவின் ஒரு வார்த்தைதான்
ஆண்டவனின் திரு வார்த்தை
அம்மாவை சுற்றித்தான் இங்கே
அனைவரும் சுழன்று வருவோம்
அவளன்றி அங்கே ஒரு
அணுவும் கூட அசையாது
அப்பா வெறும் பார்வையாளராய்
ஒப்புக்குத் தனியாகவே இருப்பார்
நடப்பது எதையும் ஒன்றும் சொல்லாமல்
நிகழ்வது எதுவானாலும் கண்டு கொள்ளாமல்
மெலிதாய் சிரித்து விட்டு அவர்
மெல்லக் கடந்து போய்விடுவார்
மாமியாருக்கு ஏற்ற மருமகளாய்
மாறாமல் வந்துசேர்ந்தாள் என்னவள்
குடும்பத்தின் நிகழ்ச்சிகள்
குழந்தைகளின் பராமரிப்பிகள்
பெரியவளின் கல்யாண வேலைகள்
அடுத்தவனின் கல்லூரிக் கனவுகள்
வரவு செலவு விபரங்கள்
வயல் வெளி நிலவரங்கள்
................
................
சொந்தங்களை சேர்த்து
பந்தங்களைப் பாதுகாத்து
அனைத்தையும் முன் நின்று
அவள்தான் பார்த்துக் கொள்கிறாள்
ஊர்கூடி நின்று அவளை
உயர்த்தி வைத்து பேசுகிறது
நான் வலம்வரும் இடமெல்லாம் அவள்
நலம் பற்றித்தான் தான் விசாரிக்கிறது
வருடம் இருபது கடந்தபின் எந்தன்
பொறுமை முழுவதும் இழந்துவிட்டேன்
"இங்கு நான் ஒருவன் இருப்பது
உங்கள் கண்ணுக்குத் தெரியவே இல்லையா?
என் தோளில்மீது அமர்ந்துதான் அவள்
எல்லாவற்றையும் தாங்குகிறாள்
என்பது யாருக்கும் புரியவே இல்லையா?
எனது தைரியத்தால் தான் அவள்
எதிர் நீச்சல் போடுகிறாள்
என்பது யாருக்கும் உறைக்கவே இல்லையா?
மொத்த சுமையையும் தாங்கிக்கொண்டு
சத்தமில்லாமல் நின்று கொண்டிருக்கும்
எங்களையும் கொஞ்சமாவது
ஏறிட்டுத்தான் பாருங்களேன்"
அப்போதுதான் தற்செயலாய்
அப்பாவை கவனிக்கிறேன்
அப்பாவிடம் அங்கே
அம்மாவைப் பாராட்டி
என்னவோ சொல்லிவிட்டு
எழுந்து போகிறார் யாரோ ஒருவர்
மெல்லிய சிரிப்புடன்
மெதுவாய் தலையாட்டியபுடி
எதுவுமே நடக்காதது போல
ஏகாந்தமாய் அமர்ந்து இருக்கிறார் அவர்
நான் அந்த சிரிப்பை கடந்த
நாற்பது வருடங்களாகப் பார்த்திருக்கிறேன்
ஆனாலும் அதன் முழுஅர்த்தத்தை
அப்போது தான் உணர்ந்துகொள்கிறேன்
விட்டுக் கொடுக்கும் வாழ்க்கைப் பாடத்தை
வரிக்கு வரி புதியதாய் தெரிந்துகொள்கிறேன்
நாலே நொடியில் மனதிற்குள் அப்பா
நாலு மடங்காய் உயர்ந்து நிற்கிறார்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Good! Greetings from Norway!
Post a Comment