Monday, March 16, 2009

பரிதாபத்துக்குரியவனின் கடைசி ஆசை....


இன்று ஒருநாள் எப்படியும் தாண்டிவிட்டால்
இனிய பிறந்தநாள் கொண்டாடிவிடுவேன்
இனி அதற்கு வழியே இல்லை
இன்று தாங்குவேனோ தெரியவில்லை

என் நூறாவது பிறந்தநாள்
ஏன் நூலிழையில் தவறியது
என்ற கதையைக் கேளுங்கள்

வீட்டிற்கு வடகிழக்கு மூலையில்
வாகாய் வளர்ந்து நிற்கும்
வாகை மரம் நான்

ஆயிரம் பேர் தங்கிச்செல்ல
அருமைநிழல் கொடுத்த நான்
அங்கே ஆயிரம் கருசுமக்க
அகன்றகிளை கொடுத்த நான்

கொளுத்தும் வெயிலைத் தாங்கி
கடும் குளிரில் தூங்கி
அடிக்கும் மழையில் நனைந்து
துடிக்கும் புயலில் நெளிந்து

இயற்கையை இதுவரை வென்று
இன்றுவரை நிமிர்ந்து நிற்கும் நான்
இந்த மனிதனின் சூழ்ச்சிவலையில்
இதோ வசமாய்ச் சிக்கிக்கொண்டேன்

விதி எனக்கு வந்துசேர்ந்தது
விருந்தினர் என்ற வடிவத்தில்
ஆச்சரியமாய் பார்த்தார் என்னைச் சுற்றி
ஆர்வமாய் விசாரித்தார் என்னைப் பற்றி

"வாஸ்த்துவின்படி வடகிழக்கில் மரம்
வீட்டின் நலத்திற்கு அகாது-அதிலும்
வாகைமரம் ஆகவே ஆகாது"


மெதுவாக பற்ற வைத்துவிட்டு
சாதுவாகக் கிளம்பிச் சென்றுவிட்டார்

இதோ..........

என்னை வெட்டி சாய்க்க
எனது நிழலில் நின்றுகொண்டு
கூட்டம் கூட்டி அமர்ந்துகொண்டு
திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்

நாளை விடியும்போது
நான் விறகாகி இருப்பேன்
நீங்கள் மனது வைத்தால்
நான் உயிரோடு இருப்பேன்

இறந்தநாளா? பிறந்தநாளா??
இனி உங்கள் கையில் தான்!
இரக்க மனம் உள்ளோர்களே!!
யாராவது உதவி செய்வீர்களா?

13 comments:

Anonymous said...

கவிஞரே! மு.மேத்தாவின் ஒரு கவிதையை நினைவூட்டியிருக்கிறீர்கள். நன்றி!

மரங்களை நட்டது போதும் -இனிமேல்
மனிதர்களை நடுங்கள்
இவர்களை
விட்டு வைப்பதை விட
நட்டு வைப்பதே நலம்

சில சூறாவளி சூழ்நிலைகளில் நாமும் மரமாகி, வேரோடு சாய்ந்து விடக்கூடாதா
என்று தோன்றும். ஆனால், நாம் சாய்ந்தாலும் பிறிதொரு மரத்தின் விறகு தானே
தேவைப்படும் என்ற புரிதல் வந்து மீண்டும் காற்றில் அகப்பட்டுக்கொண்டு
அல்லாடும் கடமையைச் செய்யத் தொடங்கும் மனம்.

சொல்ல வேண்டுமா? அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள்!


தமிழன் வேணு
--~--~---------~--~----~------------~-------~--~----~
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
-~----------~----~----~----~------~----~------~--~---

Anonymous said...

அச்சோ பாவம் அந்த மரம்

குள்ள நரி வெட்டக்கூடாது
குள்ளநரி வெட்டக் கூடாது
குள்ள நரி வெட்டவே கூடாது

இனி வெட்ட மாட்டாங்கல்லமரங்களை ஏன் எம்மால் நேசிக்க முடிவதில்லை சரியாக ?

Anonymous said...

அட.! ! எங்கள் அலுவலக அசோக (நெட்டிலிங்க) மர கதை மாதிரியே இருக்கிறதே...வாஸ்துபடி அலுவலக முன் வரிசையாக நின்ற ஏழு நன்கு வளர்ந்த மரங்களை வெட்டி விட்டனர். அது தந்த நிழலின் வரவேற்பரை சூடாகமல் இருந்தது. இப்போது :(((((((((((

Anonymous said...

அன்பின் துரை

அழகான கருத்து - அருமையான கவிதை

இயற்கையினை வென்று பல காலம் வளர்ந்து - பல வகையில் மனிதர்களுக்கு உதவி - கடைசியில் எவனோ ஒருவன் பற்ற வைத்த திரியினால் இயற்கைச் செல்வத்தினை அழிக்க முற்படும் கூட்டத்தினால் அழிக்கப்படும் அபாயத்தினை எதிர் நோக்கும் வாகை மரமே ! கவலை வேண்டாம் - இயற்கையை நேசிக்கும் ஆர்வலர்கள் இன்னும் இருக்கிறார்கள் இப்புவியினில்.

நட்புடன் ..... சீனா

Anonymous said...

மரம் அல்ல 'மரன்" என்று கவிஞர் வைரமுத்து வேப்பமரத்தைப்பற்றி எழுதிய ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது.

மரத்திற்காகவும் அழுகின்றவர்கள் நாம். கண்ணீர் துளிர்த்தது துரை. எங்கள் வீட்டுப்பொன்னொச்சி மரத்தை நினைவுக்கு கொண்டுவந்தன உங்கள் வரிகள் துரை.
--
என்றென்றும்
சுதனின்விஜி

Anonymous said...

அன்புமிகு துரை அவர்களுக்கு,

இந்த வாஸ்து கடந்த 25 வருடங்களுக்குள் தமிழகத்தை பிடித்துக்கொண்டு ஆட்டுகின்றது.ஆந்திரா மிகவும் மோசம். வாஸ்து சரியில்லை என்ரால் இடித்துக்கட்டவேண்டும்.வாடகைக்குக்கூட ஆள் வரமாட்டார்கள்.சூரிய ஒளி, சூரிய வெப்பம், பருவக்காற்று,ச்சுரியனின் வடக்கு தெற்கு பயணம்
போன்றவற்றீன் அடிப்படையில் நல்ல நோக்குடன் வந்த வாஸ்துவை கடவுளாக்கி நிறையப்பேர் பிழைக்கிறார்கள். பொறியாளர்கள் வாஸ்துவை ஏற்றுக்கொள்வதுதான் தொழிலுக்கு அழகு என்று வந்துவிட்டார்கள்.

நாங்கள் ஊர் ஊராக சென்று மரம் வைப்பதன் அருமையைக்குறிவருகிறோம். வாகையாவது நூறு
ஆண்டுகள் வாழ்ந்தது. மனித இனம் இன்னும் நூறு ஆண்டுகள் வாழ்ந்துவிடுமா??

அன்புடன்
அரசு

Anonymous said...

நல்ல கவிதை ..நண்பரே ....

இப்படி பரிதாபமாய் தினம் பலர் ..மரணத்தின் வாசலில் ...

நம்மால் முடிந்தவரை கருணை காட்டுவோம் ...

--
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு ...

Anonymous said...

கவிதையில் நல்ல சுவாரசியம் (சஸ்பென்ஸ் அல்லது விறுவிறுப்புக்கு இப்படி சொல்லலாமா?)

அன்புடன் பாலமுரளி
ஆசிரியர், 'வெற்றிநடை' மாத இதழ்,
துணிவு மட்டும் இருக்குமென்றால்... எதுவும் கைக்கெட்டும் தூரமே

Anonymous said...

ஐய்யோ ஏதும் உதவ முடியவில்லையே என்ற தவிப்பைத் தருகிறது. இயற்கையை
நேசிப்பவள் நான். மரங்களை வெட்டக் கூடாது என்று ஆணித்தரமாக நினைப்பவள்,
ஏதும் செய்ய இயலாமல் தவிக்கிறேன்.

என்னால் முடிந்தது எங்கள் வீட்டில் ஐந்தாறு மரங்களை வளர்க்கிறோம்.

:-( கல்பகம்

Anonymous said...

அட, கடவுளே!! பாவம் வாகை மரம், வாகாய் அகப்பட்டுக் கொண்டு திண்டாடும் மரத்தைக் காப்பது யார்? அப்புறம் அதில் குடி இருக்கும் பறவைக் கூட்டங்கள்?? எங்கே போகும்? :((((((((

-கீதா சுப்ரமண்யம்

Anonymous said...

அட, கடவுளே!! பாவம் வாகை மரம், வாகாய் அகப்பட்டுக் கொண்டு திண்டாடும் மரத்தைக் காப்பது யார்? அப்புறம் அதில் குடி இருக்கும் பறவைக் கூட்டங்கள்?? எங்கே போகும்? :((((((((

-கீதா சுப்ரமண்யம்

Anonymous said...

முதலிலேயே சொல்லி விடுகிறேன்.. இவை கவிதை அல்ல... வெறும் எண்ணங்களின்
விதை

விதைக்கு நீர் ஊற்றும் திரு. துரை போன்ற உள்ளங்களுக்கு நன்றி, ஏதோ நாலு
பேர் இப்படி நினைத்து வாழ்வதால் நானூறு மரங்கள் தப்பிக்குமே!!!மரங்கள் பூமியை வளமாக்குகின்றன!
மிருகங்கள் கூட தன் உடலில் விதை சுமந்து மரம் நடுகின்றன..
புழு பூச்சிகள் தன் கழிவையே உரமாக்குகின்றன!
மனிதன் என்ன செய்தான் அந்த மரத்தை வெட்டுவதைத் தவிர??"மரம் மாதிரி நிக்காதே!"
திட்டிய தாயாருக்கு என் சிரிப்பு சிந்தனையூட்டியது..

அவர்களுக்குத் தெரியாது
மனிதர்களை விட மரத்தோடு ஒப்பீடு
எனக்கு மகிழ்ச்சி அளிக்கும்

-கல்பகம்

balu said...

good much