Wednesday, March 25, 2009

ஒரு கேள்விக்காவது விடை தெரிந்திருந்தால்......


எனது அப்பா
எண்பது வயது அப்பா
நான் குழந்தையாய் இருக்கும்போது
கோமாவில் விழுந்தஅவர் இப்போது
என்குழந்தையைப் பார்க்க எழுந்திருக்கிறார்

நாற்பது வருட எதிர்பார்ப்பு அது
நான்கு நாட்களாகிறது விடியல் பிறந்து

தனக்குள் முழ்கி இருந்த அவர்
தன்னைச் சுற்றி நடப்பதை அறிய
ஆர்வக் கோளாரில் அவரோடு
நகர் வலம் கிளம்புகிறேன்

இருவரும் தெருவில்
இறங்கி நடக்கிறோம்


பொதி சுமக்கும் கழுதைபோல
ஆள் உயர பையைத் துக்கி
பள்ளி செல்லுகிறார்கள் குழந்தைகள் !
நாற்பது பக்க ஏட்டை
நான்காய் மடித்து அதை
காற்சட்டைக்குள் சொருகி
வெறும் கையை வீசி
கல்லூரி வருகிறார்கள் மாணவர்கள் !!

ஏன்? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை

வழிநெடுக முளைத்து நிற்கும்
குழந்தைகள் நல மருத்துவர்கள்
பிரசவக் கால மருத்துவமனைகள்
"பிறப்பு எல்லாமே எளிதாகி இருக்குமே?" என்கிறார்
"சுகப் பிரசவமே கிடையாது இப்போது!" என்கிறேன்

ஏன்? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை

கருப்புச் சட்டையணிந்து கன்னிச்சாமியார்கள்
கடவுளுக்கு விரதமிருந்து கோவிலுக்கு வருகிறார்கள்
கருப்புச் சட்டையணிந்து கட்சிசார்பானவர்கள்
கடவுளுக்கு விரோதமாக கோசமிட்டுச் செல்கிறார்கள்

ஏன்? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை

"சுதந்திரதினம், விடுதலைதினம் போல
காதலர்தினம் கொண்டாடுகிறார்களே?
காதல்மனம் எதிர்ப்போர் குறைந்து போயினரா??
கலப்புமணம் மறுப்போர் மறைந்து போயினரா???"
என்கிறார்
"உலகம் மாறவில்லை இன்னமும்!" என்கிறேன்

பிறகு ஏன்? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை

குழம்பிப்போய் இருக்கிறார் அவர்
குதூகலமாய் மாற்ற அவரை
புதுத்திரைப்படம் கூட்டிச் செல்கிறேன்

ஆடல் காட்சியில் பனிப் பிரதேசத்தில்
ஆண்கள் அனைவரும் முழு ஆடையோடு
கம்பளியும் சேர்த்து அணிந்திருக்கிறார்கள்!
பெண்கள் வெறும் உள்ளாடையோடு
காலணிகூட இல்லாமல் ஆடுகிறார்கள்!!

ஏன்? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை

ஆண்கள் அனைவரும் பாடல் காட்சியில்
அவரவர் குரலில்அமைதியாகவேப் பாடுகிறார்கள்
பெண்கள் மட்டும் முக்கி திக்கித்திணறி
ஆண் குரலில் ஆர்ப்பாட்டமாய்ப் படுத்துகிறார்கள்

ஏன்? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை

விதியை நொந்து சோர்ந்துபோய் இருக்கிறார்
வீடு வந்து சேர்கிறோம் இருவரும்

"பங்காளி சொக்காரன் சொந்தங்களைவிட
பக்கத்து வீட்டுக்காரன் மிகமிகமுக்கியம்!
என்னை அறிமுகப்படுத்து அவர்களிடம்"
என்கிறார்
"எனக்கே அறிமுகமில்லை இன்னமும்" என்கிறேன்

ஏன்? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை

"குழந்தை குட்டியுள்ள வீடெனில்
குயில் கூவும் தோட்டம்போல
ஆரவாரமாய் இருக்கவேண்டுமே!
ஆனால் இங்கே என்ன இது
கல்லறைத் தோட்டம்போல
அமைதியாய் இருக்கிறதே?"
என்கிறார்
"தொலைக்காட்சி பார்ப்பதால்" என்கிறேன்

ஏன்? என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
எனக்குத்தான் பதில் எதுவும் தெரியவில்லை

"அரசே மதுபானக்கடை நடத்துகிறதா?
அங்கே மதுவும் ஊற்றிக் கொடுக்கிறதா??

கணக்கில் வராத கள்ளப்பணத்திற்கு
காந்திக்கணக்கு என்ற பெயரா?

மதிக்கப்பட வேண்டிய சாலை விதிகள்
மிதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறதே?"


கேள்விகள்? கேள்விகள்?? கேள்விகள்???
கேட்டுக் கொண்டே இருக்கிறார்.........
கொஞ்ச நேரத்தில் யாரையும் கேட்க்காமலேயே
குழம்பிப் போன மனத்தோடும் முகத்தோடும்
கோமாவுக்குள் சென்றுவிடுகிறார் மறுபடியும்

நாற்பது வருடங்கள் நலமாய் இருந்தவர்
நான்கே நாட்கள் திரும்ப வந்து
இதுவரை இருந்த நிம்மதியையும்
இங்கே தொலைத்து சென்றுவிட்டார்

அவர் அப்படியே இறந்திருக்கலாமோ?
மறுபடியும் இங்கே
வராமலேயே இருந்திருக்கலாமோ????

1 comment:

தமிழ்தினா said...

பொதி சுமக்கும் கழுதையாய்
ஆளுயரப் பையினைத் தூக்கிப்
பள்ளி சொல்கிறார்கள் குழந்தைகள்!
நாற்பது பக்க ஏட்டை
நான்காய் மடித்து அதை
காற்சட்டைக்குள் சொருகி
வெறும் கையை வீசி
கல்லூரி வருகிறார்கள் மாணவர்கள் !!

*ஏன்?* என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
[b]பொதிக் கழுதையாய்
மனம் மாறிய பிறகு
வெளிக்குத் தேவையில்லை
என்றேன் நான்!!![/b]

வழிநெடுக முளைத்து நிற்கும்
குழந்தைகள் நல மருத்துவர்கள்
பிரசவக் கால மருத்துவமனைகள்
*"பிறப்பு எல்லாமே எளிதாகி இருக்குமே?" *என்கிறார்
*"சுகப் பிரசவமே கிடையாது இப்போது!" *என்கிறேன்


*ஏன்?* என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
[b]முதலில் பெண்களுக்கும்
பிறகு மருத்துவர்க்கும்
சுகமாய்த் தோன்றாததால்
என்றேன் நான்..!!![/b]

*கருப்புச் சட்டையணிந்து *கன்னிச்சாமியார்கள்
கடவுளுக்கு விரதமிருந்து கோவிலுக்கு வருகிறார்கள்
*கருப்புச் சட்டையணிந்து *கட்சிசார்பானவர்கள்
கடவுளுக்கு விரோதமாக கோசமிட்டுச் செல்கிறார்கள்


*ஏன்?* என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
[b]கன்னிச்சாமியாய் பிரித்துப் பார்க்கும்
சாமி கன்னியாகவே இருக்குமாம்
கருப்புச் சட்டைக்காரர்கள்
வந்து சென்றால்.. அதை அறிந்தவர்
சாமியைக் கன்னியாகவே வைத்திருக்க
எண்ணுவதால் என்றேன் நான்..!!!
[/b]


*"சுதந்திரதினம், விடுதலைதினம் போல
காதலர்தினம் கொண்டாடுகிறார்களே?
காதல்மனம் எதிர்ப்போர் குறைந்து போயினரா??
கலப்புமணம் மறுப்போர் மறைந்து போயினரா???" *என்கிறார்
*"உலகம் மாறவில்லை இன்னமும்!" *என்கிறேன்


*பிறகு ஏன்? *என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
[b]சுதந்தர தினம் கொண்டாடுவதால்
எப்படி கருத்து எழுத்து சுதந்தரம்
கிட்டிவிடுவது இல்லையோ
அப்படியே காதல் சுதந்தரமும்
என்றேன் நான்...!!![/b]

குழம்பிப்போய் இருக்கிறார் அவர்
குதூகலமாய் மாற்ற அவரை
புதுத்திரைப்படம் கூட்டிச் செல்கிறேன்


ஆடல் காட்சியில் பனிப் பிரதேசத்தில்
ஆண்கள் அனைவரும் முழு ஆடையோடு
கம்பளியும் சேர்த்து அணிந்திருக்கிறார்கள்!
பெண்கள் வெறும் உள்ளாடையோடு
காலணிகூட இல்லாமல் ஆடுகிறார்கள்!!


*ஏன்?* என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
[b]ஆணைச் சுமக்கும் பெண்ணுக்கு
ஆடை சுமக்கும் தேவையில்லை
என்ற அற்புத எண்ணத்தால்
என்றேன் நான்..!!![/b]

விதியை நொந்து சோர்ந்துபோய் இருக்கிறார்
வீடு வந்து சேர்கிறோம் இருவரும்


*"பங்காளி சொக்காரன் சொந்தங்களைவிட
பக்கத்து வீட்டுக்காரன் மிகமிகமுக்கியம்!
என்னை அறிமுகப்படுத்து அவர்களிடம்"* என்றார்
*"எனக்கே அறிமுகமில்லை இன்னமும்"* என்றேன்


*ஏன்?* என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
[b]உலகம் சுருங்கிப் போயிற்று
எனக்கு உறவுகள்
அண்டைக் கண்டத்தில்
என்றேன் நான்..!!![/b]

*"குழந்தை குட்டியுள்ள வீடெனில்
குயில் கூவும் தோட்டம்போல
ஆரவாரமாய் இருக்கவேண்டுமே!
ஆனால் இங்கே என்ன இது
கல்லறைத் தோட்டம்போல
அமைதியாய் இருக்கிறதே?" *என்கிறார்
*"தொலைக்காட்சி பார்ப்பதால்"* என்கிறேன்


*ஏன்?* என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார்
[b]தொலைக்காட்சியில் எல்லாம்
அருகில் காட்டுவார்கள்..
அதனால் அருகிருக்க வேண்டியவை
தொலைவுக்குப் போனது
என்றேன் நான்...!!![/b]

*"அரசே மதுபானக்கடை நடத்துகிறதா?
அங்கே மதுவும் ஊற்றிக் கொடுக்கிறதா??


கணக்கில் வராத கள்ளப்பணத்திற்கு
காந்திக்கணக்கு என்ற பெயரா?


மதிக்கப்பட வேண்டிய சாலை விதிகள்
மிதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறதே?"*


கேள்விகள்? கேள்விகள்?? கேள்விகள்???
கேட்டுக் கொண்டே இருக்கிறார்.........
கொஞ்ச நேரத்தில் யாரையும் கேட்க்காமலேயே
குழம்பிப் போன மனத்தோடும் முகத்தோடும்
கோமாவுக்குள் சென்றுவிடுகிறார் *மறுபடியும் *

[b]எல்லாவற்றுக்கும் விடை சொல்வேன்
மெர்சி கில்லிங் கோமாவில் தான்
செய்ய முடியுமாமே...
நாற்பது வருடம் இல்லாதது
அவர் தொடர் கேள்விகளால்
தோன்றிப் போனது..!
பதில் சொல்லாமல் விடுத்தேன்..
மருத்துவரிடம் விரைந்தேன்..!


[/b]