Tuesday, March 24, 2009

கடவுளே ஆனாலும் காத்திருக்க வேண்டும் !....


ஒரு 'SPLIT PERSONALITY' யாக என்னை உருவகம் செய்து கொள்ளுங்கள்:
------------------------------------------------------

பிஞ்சபாய சுருட்டி மூலைல வச்சுட்டு
கரையுர காக்காவ சேலையால வெரட்டிட்டு
அரை இருட்டுல குளிச்சு முடிச்சிட்டு
கெடச்ச கஞ்சிய குடிச்சி தொடச்சிட்டு

ஆட்டையும் குட்டியையும் பத்திக்கிட்டு
மாட்டையும் கன்னையும் கூட்டிக்கிட்டு
எருமைய குட்டையில எறக்கி விட்டுட்டு
எல்லாத்தையும் மொத்தமா மேச்சுகிட்டு

வெறகு சுள்ளிய சேர்த்துகிட்டு
காட்டு வேலைய முடிச்சிட்டு
வீட்டப் பாக்க வந்து சேர்ந்துட்டேன்

புண்ணாக்க எடுத்துப் போட்டுட்டு
கழனித் தண்ணிய கலக்கி விட்டுட்டு
மூஞ்சி மோரைய நல்லா கழுவிட்டு
கைய காலயும் கொஞ்சமா அலசிட்டு

ஆத்தா மொகத்த அன்னாந்து பார்த்துகிட்டே
முத்தத்தில வந்து உக்காந்து இருக்கேன்

கைல கெடச்சத அள்ளி சேத்து
கொஞ்சமா தண்ணியயும் அதுல ஊத்தி
தட்ட என்முன்னால தரையில
தள்ளி வச்சிட்டுப் போறா என்ஆத்தா

தெளிஞ்ச தண்ணிக்கு உள்ளார
குனிஞ்சு நல்லா பாத்தேன் பாரு
ஒத்த ஒத்தப் பருக்கையா
முத்து முத்தாத் தெரியுது சோறு

"உத்து உத்துப் பாக்காத புள்ள
உள்ளே என்ன இருக்கும்ன்னு
அள்ளிப்போட்ட எனக்குத் தெரியும்
உள்ளத குடிச்சிட்டுப் போய்த் தூங்கு"

முடிய அள்ளிச் சொருவிக் கிட்டு
முனங்கிக் கிட்டே போறா ஆத்தா

என்னுள் இருந்த அவள்
கொஞ்சம் புரண்டு படுக்கிறாள்


"இரு கொஞ்சம் பொறு
இருட்டு நல்லா விலகட்டும்
முரட்டு மேகமும் களையட்டும்"


"கஞ்சியக் குடிக்கச் சொன்னா
கண்டதையும் பேசுதே இந்தக்
கிறுக்குப் பய புள்ள"

குறுகுறுவென பாத்திட்டே போறா ஆத்தா

காத்திருக்கிறேன் கண்கொட்டாமல்
கலைந்தது அந்த மேகக் கூட்டம்
கணநொடிக்குள் நிகழ்ந்தது மாற்றம்
எனக்கு உள்ளும்,புறமும்

எனக்குள் அவள் எழுந்து நிற்கிறாள்
எனது தட்டுக்குள் இப்போது
எல்லாமே வந்து சேர்ந்துவிட்டன
"வானத்து பால் நிலாவும்
வண்ண வண்ண வின்மீன்களும்
சிதறிக் கிடந்தன என்
சின்னஞ்சிறியத் தட்டுக்குள் !

இரவு உணவுக்கு இதோ
பால் சோறும்! மீன் கூட்டும்!
இதற்கு மேல் என்ன வேண்டும் !!
கடவுளும் கூட இதற்காகக்
காத்திருக்கத்தான் வேண்டும்!!!"


எல்லாம் முடிந்து விட்டது
எனக்குள் அவள் தூங்கிவிட்டாள்

பாய ஒதறி போட்டுட்டு
படுக்கப் போறப்போ மெதுவா
பயந்துகிட்டே சொல்லுதேன்
"நாளைக்காவது ஒருவேளைக்கு
நல்ல சோறு தா ஆத்தா"

No comments: