Monday, March 23, 2009

ஆடை இருந்தும் அம்மணமாய்.....!


மிருகக்காட்சிசாலை அது

கூண்டுக்குள் காட்சிப்பொருளாய்
கூச்சத்தோடு மிருகங்கள்
வரிசையில் ஆர்வமாய்
வந்துசெல்லும் மனிதர்கள்

சிங்கம்
சுற்றத்தை அடக்கி ஆளும் - அதன்
சொந்தங்களை சேர்த்து வாழும்

நரி
அண்டி ஒண்டிப் பிழைக்கும் - கூடவே
இருந்து குழியும் பறிக்கும்

பாம்பு
பார்த்தால் பயந்ததுபோல ஓடும் - அதன்
நாக்கினில் விசமும் இருக்கும்

நாய்
நன்றியோடு இருக்கும் - சமயத்தில்
நல்லவரையும் கடிக்கும்

குயில்
சொந்த வீடில்லாத ஏக்கத்தை -அதன்
சோகக் குரலில் காட்டும்

யானை
எளிமையாய் இருக்கும் - ஆனாலும்
அதற்கு மதமும் பிடிக்கும்

குரங்கு
குட்டிச் சேட்டைகள் செய்யும் _ அசந்தால்
இருப்பதைப் பிடுங்கித் திண்ணும்

பூனை
கண்களை மூடிக்கொள்ளும் _ உலகமே
இருண்டதாய் எண்ணிக்கொள்ளும்

நெருப்புக்கோழி
தரைக்குள் தலை நுழைக்கும் _ தான்மட்டும்
தப்பியதாய் நினைத்துக்கொள்ளும்

ஐந்தறிவு விலங்குகள் ஒவ்வொன்றிற்கும்
அதற்கென தனித்தனியே சிறப்புக்குணங்கள்

ஆறறிவு மனிதன் நம்மிடம்
அப்படி என்ன சிறப்பு குணம்?

அட,ஆச்சரியமாய் உணர்கிறேன்!
அனைத்து குணங்களும் என்னிடமும்
அப்படியே மாறாமல் இருக்கின்றன!!


ஒருநிமிடம் எனக்குள் யோசிக்கிறேன்
மறுநிமிடம் அதிர்ச்சியாகி நிற்கிறேன்
"மிருகங்களின் மொத்த கலவையா நான்!
குறிப்பிட்டுச் சொல்ல எனக்கென
சிறப்புக்க்குணம் ஏதும் இல்லையா?"


கட்டணம்கட்டி வந்தேன் மிருகக்காட்சிசாலை!
நட்டநடுவில் காட்சிப்பொருளாய் நிற்கிறேன்!!
அனைத்து மிருகங்களும் பார்த்துகொண்டிருக்கின்றன
என்னை இப்போது இலவசமாக!!!

அத்தனைக் கண்களுக்கும் முன்னால்
ஆடையோடு இருந்தாலும் நான்
அம்மணமாய் உணர்கிறேன்

No comments: