இனியொரு விதி செய்ய.. இனியாவது செய்ய...
Tuesday, October 28, 2008
அம்மா
அம்மா
என் மனைவியை மருமகளாய்
ஏற்றுக்கொள்ளவே இல்லை
எனக்குத் தெரிந்து அவளிடம்
எதிர்மறையாகவே நடக்கிறாள்
ஏன் என்றே தெரியவில்லை
ஆனாலும் அம்மாவை
என்னால் எவரிடமும்
விட்டுக்கொடுக்க முடியவில்லை
என்னால் எப்படி முடியும்?
அம்மாவைப் பற்றி இந்த
அறியாத ஒன்றைவிட
தெரிந்தது நிறைய உண்டு
புரிந்தது இன்னும் உண்டு
முந்தா நாள் பார்த்திருந்தாலும்
இன்று புதியதாய் பார்த்ததுபோல
"மெலிஞ்சு போய்ட்டீயே அய்யா"
எனக் கேட்ப்பதில் உள்ள பாசம்
என்னுடன் இருந்து கவனிப்பவரை
கனிசமாய் காயப்படுத்தினாலும்
எனக்குப் புரியும்
சிகை கோதி
சாப்பிடவைக்கும்
சிரித்த முகத்துக்குப் பின்
குடிகார அப்பாவிடம்
அடுக்களையில்
வாங்கிய அடியும்
அடக்கிவைத்த அழுகையும்
எனக்குத் தெரியும்
தவிர்க்கமுடியாமல்
மஞ்சளை கழுத்தில் கட்டி
தாலி கழட்டி அடகு வைத்து
வட்டி மட்டும் மொத்தமாய் கட்டி
கலங்கி நொறுங்கி நின்றதும்
எனக்குத் தெரியும்
ஐம்பது ரூபாய்க்காகவும்
ஐந்து கிலோ அரிசிக்காகவும்
அறுவை சிகிச்சை செய்து
அறுபட்டுக் கிடந்ததும்
எனக்குத் தெரியும்
அந்த அரிசியில்
காய்ச்சிய கஞ்சியின் ருசி
இன்றுவரை என் தொண்டையில்
தொக்கி நிற்பதும்
எனக்கு மட்டுமே தெரியும்
பிறகு எப்படி முடியும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment