
மூன்றுமாதக் குழந்தையில் பிரிந்து
மூன்றுவருட முடிவில் பார்க்கப்போகிறேன்
மூன்றுமாத விடுப்பு சொர்க்கமதை
மூச்சுவிடாமல் க(ழி)ளிக்கப்போகிறேன்
இன்றா நேற்றா....!
முன்னூறு நாட்களுக்கும் மேலாய்
தினம் தினம் நடக்கும் ஒத்திகையது
கனவிலும் தொடரும் நிகழ்ச்சியது - அதை
இன்று நிகழ்த்தப் போகிறேன்
அவளுக்குப் பிடித்தது கையில் கிடைத்தது
அத்தனையும் வாங்கியிருக்கிறேன்
அதிரடியாய்க் காட்டி - ஆனந்த
அதிர்ச்சியில் ஆழ்த்தப் போகிறேன்
அயலகம் விடுத்து
வானகம் கடந்து
தாயக வாசம் உணர்ந்து
தாய்மண்ணை நுகர்ந்து
அல்லல்பட்டு வெளிவந்து
அவதிப்பட்டு சாலைகடந்து
தலை வாசல் நுழைந்து
தாயவள் பாதம் பணிந்து
தங்கையவள் விழி துடைத்து
என்னவள் உச்சி முகர்ந்து - பின்
தேவதையவளை சந்திக்கத்
திட்டமிட்டபடித் தயாராகிறேன்
மனைவி காட்டிய இடத்திலிருந்த
மகளின் ஆசைப் பையிலிருந்த
அத்தனையையும் அதிலிருந்து
அகற்றிப் பார்க்கிறேன்
குளிர்பான மூடியும் , உடைந்த வளவியும்
கிழிந்த படமும் , கசங்கிய தாளும்
குப்பையும் , கூளமும்
எச்சமும் , மிச்சமுமாய்.....
அத்தனையும் கூட்டி
மொத்தமாய் அள்ளித்
தலையைச் சுற்றி
தெருவில் வீசுகிறேன்
விலை உயர்ந்த பொருளனைத்தையும்
வகையாய் உள்ளே அடுக்கிவைத்துவிட்டு
வசதியாய் ஓளிந்து கொள்கிறேன் - அவளின்
வ்ரவுக்காகக் காத்திருக்கிறேன்
பள்ளியிலிருந்து பறந்து வந்தவள்
சிட்டாக சிறகடித்து வந்தவள்
”அப்பா வந்தாச்சா ?” என்றவள்
அந்தப் பையை ஓடி எடுக்கிறாள்
பையைத் திறக்கிறாள்
பதறிப்போய்த் துடிக்கிறாள்
இடி விழுந்த கொடிபோல
கருகிப்போய் வெடிக்கிறாள்
ஒன்றும் புரியவில்லை எனக்கு
நடந்தது பொதுவாக - பின்
மூளைக்குள் தெளிவாகிறது
உண்மையது மெதுவாக
பையில் இருந்ததெல்லாம்
பாவிமகள் சொத்தல்லவா !
தேடித்தேடி சேகரித்ததெல்லாம்
விலையில்லா வித்தல்லவா !
அவள் வயதுக்கத்தனையும்
அவளின் உயிருக்கும்மேலான
ஆசைப் புதையலல்லவா !
எப்படி மறந்தேன் இதை
உணராமல் போனேன் இதை !
பணமீட்டும் பாதையில் நான்
குணத்தைப் புதைத்து விட்டேனோ ?
பணமென்னும் போதையில் நான்
சின்னமனமதை சிதைத்து விட்டேனோ ?
வாழ்க்கைப் பாடமது
வாழ்வின் கடைசிவரை
வழியிலேயே கிடைக்கும் !
இன்று அது
எனக்குக் கிடைத்திருக்கிறது
வழியில் இல்லை; வீட்டிலேயே !
என் மகளின் மூலமாக !
.
1 comment:
அருமை!வீட்டில் ஆசைமகள் மூலம் கிடைத்த
வாழ்க்கைப் பாடம்!ரசித்து மகிழ்ந்தேன்!
அன்புடன்,
தங்கமணி.
Post a Comment