Sunday, September 6, 2009

எல்லாம் தெரிந்தவர்கள் ...!


எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!


கைமண்ணளவே படித்து
எல்லாமும் முடித்ததாய் நினைப்பார்கள்
அதற்குள் இலக்கு நிர்ணயித்து
பல இலக்கணம் வகுப்பார்கள்

எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!


ஊர்வலம் என்றாலே அது
தே(கா)ர் ஊர்வலம் மட்டுமே என்பார்கள்
பாதசாரிகள் ஊர்வலம் பற்றி எல்லாம்
அறிந்தும் அறியாதவர் போலிருப்பார்கள்

எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!


பிறக்கும்போதே நாவில் விழுந்தது
சரசுவதியின் கையொப்பம் என்பார்கள்
வரம் வாங்கி வந்ததாய்ப் பல
சுரம் பாடிக் காட்டுவார்கள்

எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!


மழலையின் கிறுக்கலை ஒரு
விரலசைவில் மறுப்பார்கள்
தனது ஆரம்பமும் கிறுக்கலென்பதை
திட்டமிட்டே மறப்பார்கள்

எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!


எல்லாம் எமக்குத்தெரியும் என்ற
ஏகாந்தப் போர்வைக்குள் வசிப்பார்கள்
எல்லையைச் சுருக்கிக்கொண்டு
எதிரேயிருப்பதைப் பரிகசிப்பார்கள்

எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!


போர்வைக்குள் சூழ்ந்திருக்கும்
புதிரான இருட்டுக்குப் பழகியிருப்பார்கள்
பழங்கதைப் பேசி தனியேப்புழங்கி
பலகாத தூரம் விலகியிருப்பார்கள்

எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!


தன்னைத்தாண்டி எதுவுமில்லை என
தனக்குள்ளேயே மூழ்கி இருந்து
தன்னையும் அறியாமல் இதுவரை
தன்னையேத் தாண்டாதவர்கள்

எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!


தன்னைச் சுற்றி அமைத்த
தான் என்ற வேலியை
தன்னையும் தாண்டி வளரவிட்டு
தாண்டிவரத் தெரியாதவர்கள்

எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!

No comments: