Monday, September 20, 2010

என்ன்ன்ன்ன்ன்ன்ன்திறன் ..........!


என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்திறன் :

என்னையும் மதித்து தொடர்பதிவுக்கு அழைத்த நண்பர் சேட்டைக்காரன் அவர்களுக்கு நன்றி. நகைச்சுவை மன்னரின் அழைப்புக்கான பதிலை நான் அவரளவுக்கு இல்லாவிட்டாலும் ஒரளவுக்குத் தந்திருக்கிறேன் .. என நினைக்கிறேன் ...சரியில்லை எனில் மன்னிக்க வேண்டுகிறேன் ..

அனைத்து செயல்களுக்கும் ,விளைவுகளுக்கும் நல்லது ,கெட்டது என்ற இரண்டுமுகம் உண்டு . மூன்றாவது முகமாக நல்லதை மட்டுமே நமக்கு சாதகமாகக் கொள்ளும் முடிவைக் எடுப்போம் . நாளைப் பொழுது நல்லதாகவே விடியும் நமக்கு. நல்லவற்றிலிருந்து நமக்குத் தேவையானவற்றை எடுத்துக்
கொள்ளும் ஒரு தேடல் இது ....

( என் திறன் / நம் திறன் பற்றி எடுத்துச்சொல்ல ’எந்திரன்’ தேவைப்படுகிறார் இங்கு )

•வெண்பா என்பது எளிதென்பதையும் இங்கே சொல்ல முயன்றிருக்கிறேன். கசப்பு மருந்து என ஒதுக்கி வைத்திருப்பதை, இனிப்போடு/எந்திரனோடு கலந்து தரும் முயற்சி இது .. மருந்தின் உண்மை தன்மையை ஒருவராவது அறிந்து கொண்டாலே வெற்றியாகும் எனக்கு அது. ’இனிப்புக்கும்’ என்றும் நன்றியுள்ளவனாய் இருப்பேன் . )

எளிதன்று என்றபிறர் எண்ணத்தை; எல்லாம்
எளிதென்றே எள்ளி எழுது [01]


சில துண்டுச் செய்திகள் :
•இரண்டு வருட திட்டமிட்ட உருவாக்கம்..
தமிழகத்தின் தொழில் நுட்ப அறிவை உலகுக்குக் காட்டப்போகும் படைப்பாக்கம் . இந்தியாவின் ‘அவதார்’ என்ற சிறப்பை பெற்ற படம் . . உலகளாவிய வியாபாரம்..... மிகப் பெரிய வெற்றியை எதிர் நோக்கி இருக்கும் படைப்பு
ஆம் .......

தந்திரத்தை எந்திரத்தால் காலத்தே செய்வார்முன்
மந்திரம்என்(று) ஒன்றும்இல் லை [02]



•’பின்நின்று’ நடத்துநராய் வாழ்க்கையைத் துவங்கியவர் அவர். இன்று ஒருதுறையினை ’முன்நின்று’ வழிநடத்திக் கொண்டு இருக்கிறார் . அயராத உழைப்பின் எடுத்துக்காட்டாக இன்று அவர் ........

விசிலடித்து வாழ்ந்தார்; உழைப்பால் உயர்ந்தார்
விசிலடித்து வாழ்த்துகிறோம் நாம் [03]



•எதற்கும் இயலாதவர் /எதுவும் இல்லாதவர் என வெளியில்/ ஒருகோடியில் ஒதுக்கிவைக்கப் பட்டவர் அவர் . இன்று அவரின் கடைக்கண் பார்வைக்காக வரும்வழியில் ஒதுங்கி நிற்பவர்கள் பலகோடி

கறுப்பைப் பழிப்போரும் வாய்பிளப்பார் தன்னால்;
சிறப்பே இதுதான் அவர்க்கு [04]


•எந்திரம்போல உழைப்பார். எல்லாமுமாய் இருப்பார்
ஆனாலும்... ’தான்’ என்ற அகம் தன்னுள் இல்லாத சிகரம் அவர் .

எந்திரன் போல இருப்பாராம்; தன்திறன்மேல்
சிந்தனை இல்லா(த) அவர் [05]



•ஒருவார்த்தை சொன்னாலும் , உலகம் ...ஓராயிரம் பொருள் கொள்ளும், புண்படுத்திக் கொல்லும் , இல்லாததை சொல்லும் . இருந்தாலும் எதையும் எளிதெனக் கொள்ளும் இனிமையாளர் அவர்...

புலியைப்போல் பாய்வார்; புழுதியையும் ஆய்வார்;
எளிதின் சிகரம் அவர் [06]


•துறைசார்ந்த உலகில் அவரது வாக்கே வேதவாக்கு. இல்லாதவரையும் இருப்பவராக்குவார். தயாரிப்பாளர் ஆக்குவார். தள்ளி நின்று ரசிப்பார் . தயாளன் அவர்

ஒருமுறை தான்சொல்வார்; நூறாக்கி வெல்வார்;
மறுபார்வை இல்லை அவர்க்கு [07]



•அவரது அபிமானிகளை ஒரு பிரிவுக்குள் அடைப்பதென்பது இயலாத ஒன்று .. ஆறிலிருந்து அறுபதுவரை அத்தனை வயது வரம்பிலும் அவரது ஆதரவாளர்கள்......இதுதான் அவரது பலம்...

ஆறும் அறுபதும் மாற்றமெதும் இல்லாமல்
சொந்தமாம் என்றும் அவர்க்கு [08]

•தலையின் மேலிருப்பதை இழந்தாலும் , தன்னை தனது
உயிராகத் தலைக்குள் வைத்திருக்கும் கோடான கோடி ரசிகர்களைக் கொண்ட.... தலைசிறந்த கலைஞர் அவர்

மயிர்போனால் என்ன ; உயிர்தரும் தொண்டர்
உயர்சொத்தாம் என்றும் அவர்க்கு [09]


•இலக்கினை முடிவு செய்து பயணத்தைத் தொடங்கினால்
இலகுவாகும் வெற்றி என்பதை உலகுக்கு உணர்த்தியவர் அவர்.

எந்திரனின் முந்தைய வாழ்க்கை; உணர்த்தியது
என்திறன் பற்றி எனக்கு [10]



(தேவையா இதெல்லாம் ?? என்ற கேள்வி தோன்றும் உள்ளங்களுக்கு............
உழைப்பால் உயர்ந்த யாரையும் ,வழிகாட்டும் உதாரணமாகக் கொள்ளலாம் என்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்...)

தொடரைத்தொடர நண்பர் தேவாவையும் , அக்கா அஷிதாவையும் , தம்பி அச்சுவையும் , மரபுக்கவி ப்ரசாத்தையும் நகைச்சுவை மன்னரின் சார்பில் அழைக்கிறேன் .


.

3 comments:

settaikkaran said...

நீங்கள் சமையல் குறிப்பு எழுதினாலும் அதில் உங்களது தனித்தன்மை தெரியும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்; கவனித்திருக்கிறேன். அதை மீண்டும் நிருபித்து விட்டீர்கள். பாராட்ட வார்த்தைகளைத் தேடித்..தேடி...தேடி...

பிரபாகர் said...

கவிதையால் அருமையாய் உம் திறனை வெளிப்படுத்தி எந்திரனை கொடுத்திருக்கிறீர்! எம் திறன் போதாது உம் திறனை பாராட்ட!

வாழ்த்துக்கள்....!

பிரபாகர்...

எல் கே said...

கலக்கல். கவிதையாய் எந்திரனை பற்றி சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்