Wednesday, July 8, 2009

இது என்னக் கொடுமை..!?


சிரபுஞ்சியில் என்னைச் சுற்றி
....கடும்வெயில் அடிக்கிறது
சஹாராவில் எனக்கு மட்டும்
....சாரல்மழை பெய்கிறது
சிம்லாவில் என்னைச் சுற்றி
....வெக்கையாய் இருக்கிறது

தலைக்கனம் பிடித்துத் திமிராய்
தன்னையே சுற்றிக் கொள்ளும்
பூமி இப்போதெல்லாம்
என்னவோ தெரியவில்லை
என்னையே சுற்றி வருகிறது

நெருப்பு பனியாய்க் குளிர்கிறது
நீரும் அனலாய்ச் சுடுகிறது
இரவு வெளிச்சமாய் இருக்கிறது
பகல் இருண்டுபோய்க் கிடக்கிறது

வெறும் காற்றில் உறைகிறேன்
கொட்டும் மழையில் உலர்கிறேன்
கடும் பனியில் உருகுகிறேன்
சுடும் வெயிலில் நனைகிறேன்

ஏனோ தெரியவில்லை
என்னவென்று புரியவில்லை
என்னைச் சுற்றிலும் எல்லாமே
எதிர்மறையாகவே நடக்கிறது

வா வா என எந்தன்
வாழ்க்கையின் வசந்தம் அவளை
வாழ்க்கைக்குள் வரவேற்க
வாய்நிறைய ஆசைதான் எனக்கும்

ஆனாலும் இப்போதைய சூழ்நிலையில்
அதற்கான வழிதான் ஏதுமில்லை
பெரியோரே புரிந்துகொள்ளுங்கள்
அறியோரே அறிந்துகொள்ளுங்கள்

அடுத்து வரும் வரவேற்புக்காக
அடியேனை மன்னித்தருளுங்கள்
அவளுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்
ஆனவரை சமாதானம் செய்யுங்கள்

"வராதே வசந்தமே !
நீ வரவே வராதே !!
என் வாழ்க்கைக்குள் வரவே வராதே !!!"

Tuesday, July 7, 2009

கடப்பாரை ஊசி ....!


ஆலமரத்தடி திண்ணைக்கு
ஆயாவோட மருத்துவரும்
அம்மைத் தடுப்பூசி போட
அமர்க்களமாய் வந்து இறங்கினார்

"திருக்கூசி டாக்டரு டோய் !
தெருவில நிக்கான் டோய் !!
தப்பிச்சு போயிருங்க டோய் !!!
தனியா மாட்டீராதீங்க டோய் !!!!"


சத்தம் கேட்ட மறுநொடியில
சந்து பொந்துல நொழஞ்சோமே !
வேட்டு கேட்ட கொக்கப்போல
எட்டு திக்குல பறந்தோமே !!

எப்படி எல்லாம் ஒடுனோமுன்னும்
எங்கே எங்கே ஒழிஞ்சோமுன்னும்
எதுக்குள்ள பதுங்குனோமுன்னும்
எங்களுக்கே கூடத் தெரியாதே !!

பரணு தட்டிக்கு மேலே......
பலக கட்டிலுக்குக் கீழே.....
குதிலு பானைக்கு உள்ளே.....
மதிலு படலுக்கு வெளியே.....ன்னும்

ஆலமரத்து மேலே ஒண்ணு....
அய்யனாருக்கு கீழே ஒண்ணு....
கொளத்துக் கரையில ஒண்ணு....
கெணத்து உறையில ஒண்ணு....ன்னும்

ஒண்ணொன்னா இழுத்துப் புடிச்சி
ஒட்டுமொத்தமா போட்டு முடிக்க
ஒருநாப் பொழுதும் அங்கே
ஒருவழியா முடிஞ்சே போச்சுதே !

பத்து வயசு வரைக்கும் ஊசிய
பக்கத்தில கூட பாக்காததால
பதட்டத்துல வந்த குளுரும்
பயத்தில வந்த காய்ச்சலும்

அஞ்சுநாளாகியும் பயபுள்ளைங்களுக்கு
கொஞ்சங்கூட அடங்கலியே அன்னிக்கு !
அந்தஊசிக்கு அப்பொறமா எனக்கு
எந்தஊசியும் போடலியே உண்மைக்கும் !!

ஊசியக் காமிச்சாதான இன்னிக்கு
கொழந்த கூட பொறக்குது !
ஊசியிலும் மருந்திலும் தான - இப்போ
ஒலகமே இங்க இயங்குது !!

Monday, July 6, 2009

காட்டுக்குள் காத்திருக்கும் கரும்புலி ....!


06-07-09
--------

காட்டுக்குள்...
--------------
வரிப்புலியென்றால்
வலுவிருக்கும் உறுதியில்,
உயிர் எடுக்கும் காட்டில்
உறவுகாக்க மறைந்திருந்து - எதிரியின்
உயிர் பறிக்கும் இறுதியில்

கரும்புலியென்றால்
கடும் சினமிருக்கும் உறுதியில்,
உயிர் கொடுத்துப் போரில்
உறவு காக்க வெளியே வந்து - எதிரியின்
உயிர் பறிக்கும் சடுதியில்

நீண்ட போராட்டத்தின் இறுக்கத்தில்
உண்டான மயக்கத்தின் கிரக்கத்தில்
சோர்ந்து கிடக்கும் புலியைச்சுற்றி

சேர்த்து மூடிவிட்டனர் வலைக்குள் - கொண்டாட
சார்ந்தோர் மூழ்கிவிட்டனர் போதைக்குள்

ஆம்.,

சிலந்திகளால் பிண்ணி முடிக்கப்பட
சிலுசிலு பகட்டு வலைகள் அவை

புலி விழித்து மீண்டும்
வாலசைந்தாலே சிதைந்துபோகும் - அந்த
வலுவில்லாத வலைகளும்
வலைபிண்ணிய சிலந்திகளும்

கரும்புக்குக் கூலியா? என
கானகம் அழித்துச் செல்லும்
காடையருக்குத் தெரியாது - உள்ளே
கரும்புலி காத்திருக்கும் சேதி

Sunday, July 5, 2009

வெடித்து வா என் இளைஞனே.....!



இன்று (ஜுலை,4),
சுவாமி விவேகானந்தரின் நினைவுநாளில்,
அவரது பாதங்களில் சமர்ப்பணம் :



துவண்டு கிடக்கும் இளைஞனே - நீ
துடித்துக் கிளம்பும் நேரமிது !

விரிந்த வானத்துக்கு அடியில் - இந்த
பரந்த பூமியின் வெளியில் - உனக்கும்
கிழக்கு திசையுண்டு - அங்கே
விடியல் என்பது தினமும் உண்டு

நீருக்குள் திணறும் மீனும் உண்டா ?
தண்ணீருக்குள் மூழ்கும் தாமரை உண்டா ?
தரைநோக்கி எரியும் நெருப்பு உண்டா ?
தன்நிலை உணர நீ ஏன் மறுக்கிறாய் !

பல லட்ச அணுக்களை நீ
பந்தயத்தில் செயித்ததனால் தான்
பாரினில் பிறந்து இருக்கிறாய் !
வெற்றிக் கணக்கில்தானே உன்
வாழ்வையே தெடங்கி இருக்கிறாய் !!

கடந்தகால நினைவுகள் ஏமாற்றம் தரும்
எதிர்கால எண்ணங்கள் ஏக்கம் தரும்
நிகழ்காலம் மட்டுமே உனக்கு ஏற்றம் தரும்

கடந்தகால பாடத்தோடு
எதிர்காலத் திட்டத்தோடு
நிகழ்காலத்தில் நடை போடு
நாளைய கனவு மெய்ப்படும்-அந்த
வானம் உனது வசப்படும்


வாசல் மூடி உள்ளே இருக்கும்வரை
உனக்கு இங்கு வானமே இல்லை
கதவு திறந்து வெளியே வந்துபார்
உனக்கு அந்த வானமே எல்லை

'இனியொரு விதி செய்வோம்'
சொல்லிக் கடந்தது ஒரு நூறாண்டு
வெடித்து வா வெளியே - நாம்
இணைந்து இனியாவது செய்வோம் !

Thursday, July 2, 2009

தேவதை அவளைக் காண......


காலம் கனிந்து விட்டது
கனவு பலித்து விட்டது
ஒலியின் வீச்சையும் தாண்டி
ஒளியின் வேகத்தையும் தூண்டி

காற்றாய் விரைந்து கொண்டிருக்கிறேன் !

கண்ணாமூச்சி ஆடிய அவளை
கனவில் கண்ட கனவு அவளை
கண்முன்னால் காணப் போகிறேன்
கைகளில் தூக்கிக் கொஞ்சப் போகிறேன்

இதோ வந்து கொண்டிருக்கிறேன் !

குட்டிச் சுவற்றில் அமர்ந்துகொண்டு
வெட்டியாய் சுற்றி வந்தவனை
பொறுப்பு அதனை உணர்த்தி - என்னை
திருத்த வந்த தேவதை அவள்

இதோ வந்து கொண்டிருக்கிறேன் !

சல்லிப் பயலென என்னை
சொல்லிக் கழித்த அனைவரும் வந்து
வெட்கி மகுடம் சூட்டி - என்னை
தட்டிக் கொடுக்க வைக்கப்போகிறாள் அவள்

இதோ வந்து கொண்டிருக்கிறேன் !

திண்ணையின் ஓரம் வந்தாலே
திட்டி ஒதுக்கும் சொந்தங்களிடையே
நடுக் கூடத்தில் அமரவைத்து -எனக்கு
நல்மரியாதை வாங்கித் தரப்போகிறாள் அவள்

இதோ வந்து கொண்டிருக்கிறேன் !

உனது மூச்சுபடக் காத்திருக்கிறது
எனது நுரையீரல் மூச்சடக்கி !
உனது மூச்சாசுடக் காத்திருக்கிறது
எனது முழுஉடல் சூடாகி !!

இதோ வந்து கொண்டிருக்கிறேன் !

தங்கையவள் தாயாகி இருக்கிறாள் - என்னைத்
தாய்மாமன் ஆக்கி இருக்கிறாள் - எனது
மருமகள் அவளைப் பார்க்க மாமன் - புள்ளி
மானாக விரைந்து கொண்டிருக்கிறேன்

இதோ........!!!!!

Wednesday, July 1, 2009

உள்ளூரிலிருந்து உலகம்வரை ...!


தெரிந்துகொள்வோமா சனநாயகம் ?
================================
உள்ளூர் :
----------------

மரத்தடியில் ஒரேமேடையில் சாதியொழிக்கப் பேசுகிறான்
மய்யாவாடியில் சாதிக்கொருமேடையில் பிணம் எரிக்கிறான்

முதல்நாள் சாதிஒழிப்புப் போராட்டம் என்கிறான்
மறுநாள் உள்ஒதுக்கீடு ஆர்ப்பாட்டம் செய்கிறான்

சாமானியனுக்கு உதவிட மானியம் என்கிறான்
சாமானியனோ என்னவென்றே தெரியாமல் முழிக்கிறான்


தமிழ் நாடு :
--------------------
காலையில் சாகும்வரை உண்ணாவிரதம் என்கிறான்
மாலையில் சர்ப்பத்தை குடித்து முடித்துக்கொள்கிறான்

களையப்படும் இனம்காக்க புறப்படுவோம் என்கிறான்
கடையடைத்து வீட்டில் போய்ப் படுத்துக்கொள்கிறான்

மாலையில் அய்யாவிடம் அடிபணிந்து நிற்கிறான்
காலையில் அன்புச்சகோதரியின் ஆணையே போதுமென்கிறான்

ஒருமுறை போரென்றால் சாவுதான்வரும் என்கிறார்
மறுமுறை போராடினால்தான் தனிநாடுவரும் என்கிறார்

இந்தியா :
-----------------

அழிவைத் தடுக்க ஆனதைச்செய்வோம் என்கிறான்
அறிக்கை விடுவதோடு அமுங்கிப்போய் விடுகிறான்

இங்கிருந்து குடிக்கத் தண்ணீர் கொடு என்கிறான்
அங்கிருந்து கூட்டு குடிநீர் கூடாது என்கிறான்

தேவையா இந்தக் கூட்டணி மாற்றம் என்றால்
தேர்தலுக்குப்பின் மீண்டும் மாறிடலாம் என்கிறான்

மும்பை பணக்காரர்களுக்கு பாதுகாப்பு தருகிறான்
மன்னார் மீனவர்களை மயிராய்த்தான் மதிக்கிறான்

அண்ட நாடுகள் :
----------------------------

உயிரிழக்கிறார்கள் உண்ண உணவின்றி என்றால்
உயர் மருத்துவம் கொடுக்கிறோம் என்கிறான்

உயிர்பிழைக்க வருவோரை கொல்கிறாயே என்றால்
உள்ளே யாராவது போராளிஇருப்பான் என்கிறான்

பாதுகாப்பு வலையத்துக்குள்ளும் படுபாதகம் செய்கிறான்
பதுங்கு குழிகளுக்குள்ளும் பலவகைக்குண்டு வீசுகிறான்

மும்பை தாக்குதலுக்கு பதில் என்னாச்சு என்றால்
லாகூர் தாக்குதல் அதில் சரியாப்போச்சு என்கிறான்

போராடினால் சட்டம்தன் கடமையை செய்யுமென்கிறான்
ஆர்ப்பாட்டம் செய்தால்தானே அடங்கிப்போய் விடுகிறான்

திருட்டு வழக்கிலிருந்து விடுதலை ஆகிக்கொள்கிறான்
தலைமை ஏற்று வழிநடத்தும் நீதிமானாகிவிடுகிறான்

உலகம் :
----------------------

அணுகுண்டு சோதித்தாலே அழித்துவிடுவேன் என்கிறான்
ஆயிரம் அணுகுண்டு அவனிடமே வைத்திருக்கிறான்

தீவிரவாதியை ஒழிக்க தொடர்நடவடிக்கை என்கிறான்
தீவிரவாத நாட்டுக்கு தொடருதவி செய்துவருகிறான்

உலக நாடுகளுக்குள் உற்றுஉற்றுப் பார்க்கிறான்
உள்நாட்டுக்குள் உள்ளநிலை தெரியாமல் தவிக்கிறான்

அட
அவசரத்தில் சொல்லமறந்து போனேனே
இதற்குப் பெயர்தான் இங்கே சனநாயகமாம்

Monday, June 29, 2009

காதல் சா(சீ)க்காளன்...!


மெதுவாய் உயரும் மின்தூக்கியில்
மேல்தளத்துள் வெளியேறி வருகையில்
மேல்மூச்சு இறைக்கிறது எனக்கு ? - எங்கோ
மேடையில் படிஏறியிருப்பாள் அவள் !

குளுகுளுவென இருக்கும் எனது
குளிர்சாதன அறைக்குள்ளும் லேசாக
வியற்க ஆரம்பிக்கிறது எனக்கு ? - அங்கே
மின்தடையாய் இருக்கும் அவளிடத்தில் !

வாசனை மூக்கு துளைக்க
ரசனையோடு சாப்பிட அமர்ந்ததும்
பசி மறத்துப்போகிறது எனக்கு ? - முன்னமே
ருசியாய் சாப்பிட்டு முடித்திருப்பாள் அவள் !

இன்னும் வேலை மீதமிருக்க
இரவு கண் மூட நேரமிருக்க
கனவாய் வருகிறது எனக்கு ? - அப்போதே
நன்றாகத் தூங்கிப் போயிருப்பாள் அவள் !

பாதிகாலையில் முகம் கழுவாமல்
படுக்கையில் இருந்தபடியே சூடாய்
பானம் குடிக்கப்போகிறேன் ! - எப்படியும்
பல் விளக்கியிருப்பாள் அவள் !!

Thursday, June 25, 2009

முன்னேற்றமா? (அ) முட்டுக்கட்டையா?


கணினிக்குள் நுழைந்திருக்கிறான் அவன்
கண்ணிமைக்காமல் அமர்ந்திருக்கிறேன் நான்

அறிவியலின் முன்னேற்றம் பற்றி
அது செய்யும் மாயாசாலம் பற்றி
அது உருவாக்கும் வாய்ப்புகள் பற்றி
அதனால் உருவாகும் வசதிகள் பற்றி

கண்களைக் கணினிமேல் பதித்தபடி
கருத்தினைக் கண்டம்தாண்டி விதைத்தபடி
எதைஎதையோ இணையத்துள் தேடியபடி
இடையிடையே என்னிடன் பேசியபடி அவன்

"நமது ஊரின் வானிலை வேண்டுமா ?
நல்ல ஓசையில் வானொலி வேண்டுமா ?
அன்னைதேச நிலவரம் புரியவேண்டுமா ?
அண்டைதேச கலவரம் தெரியவேண்டுமா ?

இணையத்துக்குள் நுழைந்தால்
இப்போதே கிடைத்து விடும்

அன்னைக்கு அன்புமடல் - இங்கே
அமெரிக்காவிலிருந்து அனுப்பினால்
அரைநொடியில் அங்கு போகும்

அப்பாவின் கணக்கில்
இங்கே பணம் செலுத்தினால் - அங்கே
அரைமணியில் வங்கியில் சேரும்

அற்புதக் கணினி இல்லாத உலகமது
அதிகாலைக் கிழக்கு இருள் போல
அரைநொடியில் கலைந்து போகும் "

மிகத் தெளிவாக இருக்கிறான் அவன் !
ஏகக் குழப்பத்தில் இருக்கிறேன் நான் ?

அறிவியலோடு சேர்ந்து முன்னோட வேண்டும் - இதற்கு
மாற்றுக் கருத்து முன்மொழிய வேண்டாம் - அதற்காக
அதனுள் வீழ்ந்து மூழ்கிட முடியுமா ?

சன்னல் திறந்தாலே காற்றின் இதம்
உனக்கு வானிலை கூறாதா ?
சாலையில் நடந்தாலே சூரியனின் பதம்
உனக்கு வெப்பநிலைக் காட்டாதா ?
வானம் நோக்கினாலே நகரும் மேகம்
உனக்கு வரும்மழையினைச் சொல்லாதா ?

நால்வரோடு கலந்தால் தானே
நாட்டு நிலவரம் தெரியும் !?
நல்லவரோடு இணைந்தால் தானே
நல்லது கெட்டது புரியும் !?

'நண்பனே ,
அரைப் பக்கத்தில் கடிதம் எழுது
கரைத் தாண்டி சுமந்து செல்லுமது
உனது விலையில்லா பாசத்தையும்
உனது உயிரின் வாசத்தையும்

அன்புமகனின் மடல்தனை
வாசித்து அறிவோரைவிட
உச்சி முகர்ந்து உள்ளம் சேர்த்து
சுவாசித்து உணர்வோரே அதிகம்

உனது எழுத்தில்
உனது முகம் தெரியும்
அதிசயம் அங்கேதான் நிகழும்
அதுஇங்கே உனக்கெப்படிப் புரியும்'

மெதுவாய் விலகி நடக்கிறேன் வீட்டுக்கு
மெல்லத் தழுவிக் கடக்கும் குளிர்காற்று
அன்றைய வானிலையை எனக்கு
அழுத்தமாய்ச் சொல்லிச் செல்கிறது !

Wednesday, June 24, 2009

பாவப்பட்டோரின் வாழ்வு..?!



இரவில் இறுக்கும் மின்தடையில்
இருட்டு இருக்கும் தன்உடையில்

கருப்பையும் விரட்டும் இருட்டு
கருப்பையையும் மிரட்டும் கும்மிருட்டு

இறைவன் நோக்கிய தீவிர தவம்
இரு தீக்குச்சிகள்தான் கேட்க்கும் வரம்

இறுதியில் செயித்தது தவம்
ஒருவழியாய் கிடைத்தது வரம்

இருட்டை விரட்டும் பொருட்டு
ஒரு தீக்குச்சி தன்னையிழந்தது
தற்கொலைக்குத் தள்ளப்பட்டது - முடிவில்
தலைசுற்றி வெளியே வீசப்பட்டது

பற்றிக்கொண்டது தீ - தன் தலையில்
ஏற்றுக்கொண்டது மெழுகுவர்த்தி
இருட்டைக் கொஞ்சம் ஒதுக்கிவைத்தது
இருதயம் சுவாசிக்கும் வகைசெய்தது

வந்தது திடீரென மின்சாரம்
வந்துபாய்ந்தது ஒளி வெள்ளம்

கவிழ்ந்த பகட்டு வெளிச்சத்தில்
கவனிப்பாரின்றிக் காணாமல் போயிருந்தது
தற்கொலை செய்த தீக்குச்சியும்
தன்னையே உருக்கிய மெழுகுவர்த்தியும்

அற்புதமாய்த் தோன்றியது ஒருநொடியில்
அற்பமானதாய் மாறிப் போனது

மீண்டுமவை பரிவோடு தேடப்படும் - அங்கே
மறுமுறை மின்தடை வரும்போது

Tuesday, June 23, 2009

நல்லதொரு குடும்பம்...:)


ஒரேஒரு கேள்வி !
இருவேறு பதில்கள் ?

குழம்பிப்போய் நிற்கிறாள் குழந்தை
குழப்பிவிட்டவர்கள் பெற்றவர்கள்

'மனிதப் பிறப்பின் ரகசியம்' என்னவென்று
மனப்பாடம் செய்யவேண்டும் இன்று

அம்மாவிடம்
ஆசையாய் கேட்கிறாள்

"ஆண்டவன் படைத்தான்
ஆதமையும் ஏவாளையும்
மண்ணில் அவர்கள் உருவாக்கினர்
மனிதர்கள் நம் அனைவரையும்"


அப்பாவிடமும்
ஆர்வமாய்க் கேட்கிறாள்

"குரங்கிலிருந்து பிறந்தான்
கூடிக்காடுகளில் வாழ்ந்தான்
நாகரீகம் கற்றான்
நாட்டுக்குள் வந்தான்
தன்நலம் கற்றான்
தனித்தனியே வாழ்கிறான்"


தெளிவில்லாத பதில்களால்
தலை சுற்றுகிறது அவளுக்கு

அம்மாவை நாடுகிறாள் மீண்டும்
அப்பாவின் கூற்றைக் கூறுகிறாள்

ஒருநொடி தாமதிக்கவில்லை அம்மா
இரண்டடியில் தீர்வைச் சொல்லுகிறார்

"அவரும் சரியாய்தான் சொல்லியிருக்கிறார்-ஆனால்
அவரது 'குடும்பம்' பற்றி சொல்லியிருக்கிறார் !"


சந்தேகம் நீங்கி துள்ளியபடி - குழந்தை
சந்தோசமாய் விரைகிறாள் பள்ளிநாடி


நன்றி :கரு / கு.த.ந