Wednesday, June 24, 2009

பாவப்பட்டோரின் வாழ்வு..?!



இரவில் இறுக்கும் மின்தடையில்
இருட்டு இருக்கும் தன்உடையில்

கருப்பையும் விரட்டும் இருட்டு
கருப்பையையும் மிரட்டும் கும்மிருட்டு

இறைவன் நோக்கிய தீவிர தவம்
இரு தீக்குச்சிகள்தான் கேட்க்கும் வரம்

இறுதியில் செயித்தது தவம்
ஒருவழியாய் கிடைத்தது வரம்

இருட்டை விரட்டும் பொருட்டு
ஒரு தீக்குச்சி தன்னையிழந்தது
தற்கொலைக்குத் தள்ளப்பட்டது - முடிவில்
தலைசுற்றி வெளியே வீசப்பட்டது

பற்றிக்கொண்டது தீ - தன் தலையில்
ஏற்றுக்கொண்டது மெழுகுவர்த்தி
இருட்டைக் கொஞ்சம் ஒதுக்கிவைத்தது
இருதயம் சுவாசிக்கும் வகைசெய்தது

வந்தது திடீரென மின்சாரம்
வந்துபாய்ந்தது ஒளி வெள்ளம்

கவிழ்ந்த பகட்டு வெளிச்சத்தில்
கவனிப்பாரின்றிக் காணாமல் போயிருந்தது
தற்கொலை செய்த தீக்குச்சியும்
தன்னையே உருக்கிய மெழுகுவர்த்தியும்

அற்புதமாய்த் தோன்றியது ஒருநொடியில்
அற்பமானதாய் மாறிப் போனது

மீண்டுமவை பரிவோடு தேடப்படும் - அங்கே
மறுமுறை மின்தடை வரும்போது

No comments: