Monday, January 17, 2011

முப்பாலுடன் முதல்காலை..........(1)

திருவள்ளுவர் தினம் :

அய்யனின் குறளுக்கு விளக்கம் தரும் இந்தப் ’பையனின்’ விளக்கக் குறள்களைப் பதியும் (பாதியில் விட்ட ) இந்த இழையை மீண்டும் தொடர இதைவிடச் சிறந்த நாள் இருக்க முடியாது என நினைக்கிறேன் :) ...

இடையில் ஏற்பட்ட இடைவெளிக்காக மன்னிக்க வேண்டுகிறேன் .


அறம் / அதிகாரம் : 2 வான்மழை:

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் [02:07]
விளக்கக் குறள் :

பெரும்கடலும் வற்றும்;நீர் மேகமாய் மாறி
வரும்மாரி நின்றுபோ னால்


பொருள் / அதிகாரம் : 40 கல்வி :

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில் [40:04]

விளக்கக் குறள் :

மகிழப் பழகுதல்; நெஞ்சம் நெகிழ

விலகுதல் சான்றோர் இயல்பு


இன்பம் / அதிகாரம் : 110 குறிப்பறிதல் :

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்

சிறக்கணித்தாள் போல நகும். [110:05]

விளக்கக் குறள் :

குறிக்கோள் எதுவுமின்றி; கண்சுருக்கி என்னைக்

குறிவைத்துப் பார்ப்பாள் மகிழ்ந்து



தொடரும்......கருத்துகளுக்காகக் காத்திருக்கிறேன்......

Friday, January 14, 2011

கற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(2) விரல்களுக்குள் எல்லாம்..



அ]எளிய வழிமுறை( சார்ட்கட்)

3) நான்கிலக்க எண்ணை 11ஆல் பெருக்குதல் : 3 இடைவெளிகள் கொடுத்து வலப்பக்கத்தில்(கடைசி இலக்கத்தில்) இருந்து கூட்டிப் போட வேண்டியதுதான்.....(செய்முறைக்கு முந்தைய இடுகை (1)ஐப் பார்க்கவும்)

இதுபோலவே ஐந்திலக்கத்திற்கு ... நான்கு இடைவெளிகள்........................................:)


விரல்களுக்குள் கணக்கு :

4) 1 முதல் 9 வரை 9 ஆல் பெருக்குதல் : (குழந்தைகளுக்கு (எனக்கும்) மிக பயன்படும் :)

செய்முறை : 4x9

10விரல்களையும் முன்னால் விரித்து வைத்துக் கொள்ளவும்

9 ஆல் பெருக்கப்பட வேண்டிய எண்விரலை மடக்கவும் (4வது விரல்)

இப்போது மடக்கப்பட்ட விரலுக்கு இடப்பக்கம் 3 விரல்; வலப்பக்கம் 6விரல் ;
விடை = 36............... அவ்ளோதான் :))



5)

5 லிருந்து 10 வரையிலான எண்களின் பெருக்கல் :

எடுத்துக்காட்டு = 9 x 7

செய்முறை :

#]வலப் பக்க 10 விரல்கள் (கால் 5 விரல்கள், கை 5 விரல்கள்) ஒரு இணையாகவும், இடப்பக்க 10 விரல்கள் ஒரு இணையாகவும் கொள்ளவும் .

#]முதல் எண்ணை (9) விரல்களில் ஒரு பக்கமாக எடுக்கவும்

காலில் 5 + கையில் 4 ( 4 நேராக, 1 மடக்கிய நிலையில்)

#]இரண்டாம் எண்ணை (7) விரல்களில் மறு பக்கம் எடுக்கவும்

காலில் 5 + கையில் 2 ( 2 நேராக, 3 மடக்கிய நிலையில்)

#]அடுத்து கை விரல்களை மட்டும் கவனத்தில் கொள்வோம்

maths single multification.jpg

நிமிர்ந்த விரல்கள் 10 இலக்க எண்கள்

இவற்றைக் கூட்டவேண்டும் ie., .40+20 = 60


#]மடங்கிய விரல்கள் ஒற்றை இலக்க எண்கள்

இவற்றைப் பெருக்க வேண்டும் ie., 1x3 = 3 இரண்டும் சேர்ந்து மொத்தம் / விடை = 60+3 = 63


6)

10 லிருந்து 15 வரையிலான எண்களின் பெருக்கல் :

எடுத்துக்காட்டு = 14 x 12

செய்முறை :

#]இரு 10 இலக்க எண்களையும் பெருக்கவும் = 10 x 10 = 100

#]மீதமுள்ள ஒற்றை இலக்க எண்களை கைகளில் எடுக்கவும் .

ஒரு கையில் 4 ,மறு கையில் 2

maths double multification.jpg

#]நிமிர்ந்த விரல்கள் 10 இலக்க எண்கள்

இவற்றைக் கூட்டவேண்டும் ie., .40+20 = 60

#]நிமிர்ந்த விரல்களே ஒற்றை இலக்க எண்களுமாய்க் கொள்க ...

இவற்றைப் பெருக்க வேண்டும் ie., 4 x 2 = 8

மூன்றும் சேர்ந்து மொத்தம் / விடை = 100 + 60 + 8 = 168

கொஞ்சம் புரிந்துகொள்ள கடினமாக இருந்தால் ...விடாமல் மறுமுறை படிக்கவும் :)

Wednesday, January 12, 2011

பயம் கொல்வேன்..பதறாமல் வெல்வேன்.....!

சுற்றிலும் வியூகம் அமைத்துச்

சூழ்ந்திருக்கிறார்கள் அவர்கள்....


இடுப்பிலிருக்கும் கத்தியின்உறையை

ஒருகையால் இறுக்கியபடி..........

உருவுவதற்குத் தயாராய்

உறையின் முனையில்

மறுகையை இறக்கியபடி............

வருவது எதுவென்றாலும்

எதிர்கொள்ளும் எண்ணத்துடன்

எதிர்த்துக் கொல்லும் திண்ணத்துடன்.......

கண்கள் சிவக்க

உதடுகள் துடிக்க

தசைகள் உருள

தோள்கள் திரள

தன்னந் தனியனாய்

திறமாய் நிற்கிறேன் நான்........


துளியும்

அசையாமலிருக்கும்

எனது கைகளின் மேல்

மொத்த கவனத்தையும்

இமைக்காமல் குவித்தபடி...


இதுவரை

உருவப்படாதிருக்கும்

கத்தியின் உருவத்தையும்...


வெளியே வந்தபின் அது

சொருகப்போகும் வேகத்தையும்

உதிரப்போகும் உதிரத்தையும்

கருகப்போகும் உயிர்களையும்

சருகாகப்போகும் உடல்களையும்

மனதுக்குள் உருவகப் படுத்தியபடி....


பயத்தை மறைத்து

பாதுகாப்பாய் மறைந்தபடி...

தமது வாள்களைத்

தொடர்ந்து கூர்தீட்டியபடியே

இருக்கிறார்கள் அவர்கள்........


குறையத் தொடங்கியிருந்த

அவர்களது வாளின் அளவு...

தொடர் தீட்டுதலில்

திடம் குலைந்து

மேலும் கரைந்து

கைப்பிடிகள் மட்டுமே

மீதமாகும் வரையிலும்...


நிலை நிறுத்தியிருக்கும்

எனது பிம்பத்தை

கலைக்கப் போவதில்லை நான்


இடையிடையே

சூழ்நிலையை புரியாமல்.....


எனது இடையிலிருந்தபடி

என்னைக் கேலிசெய்த படியே

கத்திச் சிரித்துக் கொண்டிருக்கிறது...



'கத்தி' இல்லாத

அந்த வெற்று உறை.......


[நன்றி : கரு; ப்ராங்க்ளின்குமார்]

Monday, January 10, 2011

யுகம் கடந்தும் இருக்கிறான் உயிரோடு..........




உள்காமம் மறைத்து

கிடைக்கும் இடைவெளியில்

வசரகதியில் அத்துமீறி

கண்ட பாகங்களில் பாய்ந்து

மேய்ந்து திரும்பும் கண்கள்....


குறுநகைப் போர்வையுள்

குதறும் வாய்ப்புக்காக

மறைந்து காத்திருக்கும்

வெறிகொண்ட பற்கள்....


நம்பவைக்கும் நோக்கில்

நாசுக்காய் வலைவீசி

எண்ணியதை சாதிக்கும்

வண்ணம் பூசிய வார்த்தைகள்....


தம்மில் சிறியோரை

தலை நிமிரவிடாது

தட்டியபடியே இருக்க

பரபரக்கும் கைகள்.....


ம்ம்ம்..............


யுகங்கள் கடந்தும்

ஆழ்மனதின் அடியில்

அடர்இருளின் மடியில்

தற்பொழுதும் உயிரோடு

மிச்சமிருக்கத்தான் செய்கிறது....

அந்த.......

கற்கால மனிதனின் எச்சம்...........

.

Sunday, January 9, 2011

கற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(1) விளையாட்டாய் வெல்லுவோம்.


மிக சமீபத்தில் குழந்தைகளின் தேர்வு சமய சந்தேகங்களைத் தீர்த்துவைக்க விளையாட்டாகத்தான் கணக்கு என்ற கடலுக்குள் இறங்கினேன் ...
கணிப்பொறி (CALCULATOR) இன்றி... ஒரு அடி கூட எடுத்துவைக்க இயலவில்லை என்னால்.

குழந்தைகள் சிரித்து / கிண்டலடித்து... மீண்டும் என்மன வேதாளத்தை முருங்கைமரம் ஏறச் செய்துவிட்டனர்...

ஏதாவது செய்தாக வேண்டுமே ...கணக்கு சம்பந்தப்பட்ட எளிய வழிமுரைகளைத் தேட ஆரம்பித்தேன்....

கூட்டல்/வகுத்தல்/பெருக்கல், ரூட், ஸ்கொயர் ரூட், பின்னக் கணக்குகள் - இவற்றில் ’கால்குலேட்டர்’ இல்லாமல் மிக வேகமாய் விடைகாண மிக எளிய முறைகள் இருப்பதை ‘ப்ரைனெட்டிக்ஸ்’ முறையில் அறிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன் ..

எத்தனை இலக்க எண்ணையும் எத்தனை இலக்க எண்ணால் பெருக்கவோ , வகுக்கவோ ..10 நொடிக்குள் முடியும்....


கணக்கில் எல்லாம் செய்ய முடியும் என்ற நிலைவரை போக முடியும் .......

முக்கியமாக குழந்தைகளுக்கான மிக முக்கியமான தூண்டுதல் / செய்திகள் உள்ள இழையாக இது இருக்கப் போகிறது என நம்புகிறேன் ...
இந்த இழை முடியும் தருவாயில் வாய்ப்பாடுகளே தேவை இல்லை ..என்ற நிலை கூட உருவாகலாம் (எனக்கு:)....

[அவங்களுக்கு ‘சார்ட் கட்’ சொல்லிக் கொடுத்து ...பேர் வாங்கிக்கலாம் :))))) ]


தொடக்கம் :
இது தெரிந்துகொள்லலாம் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கும் / தெரிந்ததை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கலாம் என்ற எண்ணம் கொண்டோருக்குமான இழை :))...

இப்போது ஆரம்பப் பாடங்கள் எல்லாம் ‘ இதான்..எனக்குத் தெரியுமே...!’ என்று சொல்லச் சொன்னாலும் ....
தொடர்ந்து வருவோருக்கு ...’அட..ஆமாம்..இவ்ளோ எளிதா....!’ என சொல்லவைக்கும் அளவுக்கு இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது ....

உங்களின் ஆதரவு மிக முக்கியம் ..

கணிதத்துறை சார்ந்த பெரியோரே.....ஒரு வேண்டுகோள்.. தவறுகள் வரும் இடத்தில் ...தவறாமல் சுட்டிக் காட்டுங்கள் ...
உடனடியாகத் திருத்தம் செய்துகொள்ளலாம் ....

தொடங்கி வைக்கிறேன் ... இது ஆரம்பம்தான் ..அனைவருக்கும் தெரிந்திருக்கலாம் .... ‘ப்ரைனெட்டிக்ஸ்’ பின்னர்வரும் :)

அ]எளிய வழிமுறை( சார்ட்கட்)

1) இரண்டு இலக்க எண்ணை 11ஆல் பெருக்குதல் :
a) . 62 x 11
செய்முறை :

# முதல் எண்ணையும் , இரணடாம் எண்ணையும் ஒரு இடைவெளி
விட்டு எழுதுங்கள் ....................................................................................................... 6 _ 2

# இரு எண்களையும் கூட்டி நடிவில் இடுங்கள் ( 6+2= 8) .......................................6 8 2

விடை = 682


b) .

73 x 11
# முதல் எண்ணையும் , இரணடாம் எண்ணையும் ஒரு இடைவெளி
விட்டு எழுதுங்கள் ...................................................................................................... 7 _ 3

# இரு எண்களையும் கூட்டி நடிவில் இடுங்கள் ( 7+3= 10) ... ...............................7+1 0 3
(ஒற்றை இலக்கம் தாண்டி வரும் பத்திலக்க எண்ணை
முந்தைய எண்ணுடன் கூட்டவும் ) .............................................................. = 8 0 3

விடை = 803


2)மூவிலக்க எண்ணை 11ஆல் பெருக்குதல் : 234 x 11

செய்முறை :

# முதல் இலக்கத்தையும் , கடைசி
இலக்கத்தையும்
இரு
இடைவெளி விட்டு எழுதுங்கள் .................................................................................... 2 _ _ 4

(முன்பு ...ஈரிலக்க எண்ணிற்கு ஒரு இடைவெளி கொடுத்திருந்தோம்... இங்கே மூவிலக்கம் என்பதால் இரு இடைவெளிகள் )


#இனி வலமிருந்து இடமாக (கடைசியிலிருந்து ) வரவேண்டும் .
கடைசி இரு எண்களையும்(3வது ,2வது) கூட்டி கடைசியிலிருந்து
முதல் இடத்தில் இடுங்கள் ( 4+3= 7) ...............................................................................2 _ 7 4

2வது ,1வது இலக்க எண்களைக் கூட்டி அடுத்த இடத்தில் இடுங்கள் (3+2=5)........2 5 7 4

விடை = 2574

கொஞ்சம் புரிந்துகொள்ள கடினமாக இருந்தால் ...விடாமல் மறுமுறை படிக்கவும் :))
எனக்கு இந்ததுறை புதியது ...சில வார்த்தைகள் தவறாக இருக்கலாம்... மன்னித்து திருத்திவிடுங்கள் ...

Thursday, January 6, 2011

புலம் பெயர்ந்ததோர் உடலின் புலம்பல்


அது ஒரு

ஐப்பசியின் மழைக் காலம்….

தூங்கும் நம்குழந்தை..

அவளைத் தாங்கியபடி நீ..

உன்னைத் தொங்கியபடி நான்


உலகமே ஒரு நொடியில்

எனது காலடிக்கும் கீழாகிப்போனது


என்னை மறந்தேன் நான்..மிதந்தே

எங்கெங்கோ பறந்தேன் நான்


இது ஒரு

வளைகுடாவின் பனிக்காலம்...

ஏங்கியபடி நம்குழந்தை..

அவளைத் தாங்கியபடி அங்கே நீ..

உன்னைத் தொங்கியபடி எனது நினைவுகள்..

அவற்றைத் தூக்கியபடி இங்கே நான்..


ஏனோ ஒரு நொடியில்

எல்லாமே தலைகீழாகிப்போனது


எனதுலகை இழந்திருக்கிறேன்.. இங்கே

ஏதோ இருக்கிறேன்...........

Wednesday, January 5, 2011

ஓவியமாய் ஒருத்(தீ)தி :

அழகுக் கவிதைகள்..

அதீதக் கற்பனைகள்..

சிறுசிறு சீண்டல்கள்..

திடீர் தீண்டல்கள்...கலந்த

அற்புதக் கலவையிலிருந்து

எனதுவிரல் தூரிகையால்

வண்ணம் எடுத்துத்

தீட்டத் துவங்குகிறேன் நான்.....


சின்னச் சிணுங்கல்கள்..

செல்ல மிரட்டல்கள்..

தள்ளி உதறுதல்..

வெட்டி விலகுதல்...என

தூரிகையின் வண்ணங்களுக்கு ஏற்ப

நொடிக்கொரு ஓவியமாய்

மாறிக்கொண்டிருக்கிறாள் அவள்........


[நன்றி :கரு: இயற்கை சிவம்]

Monday, January 3, 2011

நேரான பாதையை விட்டு விலகியும்....

திரும்பிப் பார்க்கிறேன் :

நிதானமாய்ச் செல்லும்

நேரான பாதையைத் தவிர்த்து...

சுற்றிச் சுழலும்

மாற்றுப் பாதையைத் தேர்ந்து...


சீரற்ற வேகத்தில்

சரேலென வளைந்து...

இடமும் வலமுமாய்

திடீரென நுழைந்து...

குறுக்கும் நெடுக்குமாய்

வேகத்துடன் விரைந்து...

திகைக்கவைக்கும் திருப்பங்களுடன்

திசையெல்லாம் பயணித்து.........


முடியுமிடத்தில் இருந்து

திரும்பிப் பார்க்கிறேன்


அழகாய்

உருவாகி இருந்தது

கோலம் ஒன்று ............!

Sunday, January 2, 2011

முயல்.......!

ஊடே விழுந்து வழிமறிக்கும்

கூட இருந்தே குழிபறிக்கும்

உலகின் தரம்பார்த்து

உடைந்து கலங்காமல்

நிமிர்ந்தே

ஒருமுறை

களமிறங்கி முயன்றுதான் பாரேன்.....


நிலவும் உன்கையில் கிட்டும்...

உலவும் மேகமும் முன்வந்து கைகட்டும்...

மின்னும் நட்சத்திரங்களும் உனக்கு எட்டும்...

இன்னும் முயன்றுபார் அந்த

விண்ணும் உன்தலையில் தட்டும்.......