சுற்றிலும் வியூகம் அமைத்துச்
சூழ்ந்திருக்கிறார்கள் அவர்கள்....
இடுப்பிலிருக்கும் கத்தியின்உறையை
ஒருகையால் இறுக்கியபடி..........
உருவுவதற்குத் தயாராய்
உறையின் முனையில்
மறுகையை இறக்கியபடி............
வருவது எதுவென்றாலும்
எதிர்கொள்ளும் எண்ணத்துடன்
எதிர்த்துக் கொல்லும் திண்ணத்துடன்.......
கண்கள் சிவக்க
உதடுகள் துடிக்க
தசைகள் உருள
தோள்கள் திரள
தன்னந் தனியனாய்
திறமாய் நிற்கிறேன் நான்........
துளியும்
அசையாமலிருக்கும்
எனது கைகளின் மேல்
மொத்த கவனத்தையும்
இமைக்காமல் குவித்தபடி...
இதுவரை
உருவப்படாதிருக்கும்
கத்தியின் உருவத்தையும்...
வெளியே வந்தபின் அது
சொருகப்போகும் வேகத்தையும்
உதிரப்போகும் உதிரத்தையும்
கருகப்போகும் உயிர்களையும்
சருகாகப்போகும் உடல்களையும்
மனதுக்குள் உருவகப் படுத்தியபடி....
பயத்தை மறைத்து
பாதுகாப்பாய் மறைந்தபடி...
தமது வாள்களைத்
தொடர்ந்து கூர்தீட்டியபடியே
இருக்கிறார்கள் அவர்கள்........
குறையத் தொடங்கியிருந்த
அவர்களது வாளின் அளவு...
தொடர் தீட்டுதலில்
திடம் குலைந்து
மேலும் கரைந்து
கைப்பிடிகள் மட்டுமே
மீதமாகும் வரையிலும்...
நிலை நிறுத்தியிருக்கும்
எனது பிம்பத்தை
கலைக்கப் போவதில்லை நான்
இடையிடையே
சூழ்நிலையை புரியாமல்.....
எனது இடையிலிருந்தபடி
என்னைக் கேலிசெய்த படியே
கத்திச் சிரித்துக் கொண்டிருக்கிறது...
'கத்தி' இல்லாத
அந்த வெற்று உறை.......
[நன்றி : கரு; ப்ராங்க்ளின்குமார்]
No comments:
Post a Comment