Tuesday, January 6, 2009

சொர்க்கத்தின் மறுபெயர்...!



"கால் கடுக்க நின்னு
கையெடுத்துக் கும்பிட்டாலும்
கண்டுக்காம போயிருவானுக,
கடவுளே! இப்ப வந்து எங்
காலுல இல்ல உழுறானுங்க!"

"நாதியத்துப்போன என்ன
நாய்கூட மோந்து பாக்கலியே,
நாலு நாளா கார்ல வந்து
நல்லா இருக்கியான்னு நாலுவார்த்த
எந்த ஊரு மவராசங்களோ
எங்கிட்ட வந்து கேட்டுப் போறாங்களே!"

"கட்ட எப்ப சாயும் திண்ண எப்ப காலியாவுமுன்னு
பாட கட்டிக் காத்திருந்தாங்க பெத்த மகனுங்க,
படுபாவி மகளே போய்சேந்திராதேன்னு
பொத்திப் பொத்திப் பாத்துக்கிறாங்க வந்த புள்ளைங்க!"

"நாலணாகாசு கேட்டாக்கூட
நாக்கத் துறுத்திட்டு தொரத்துவானுவோ
நான் கைய நீட்டுறதுக்கு முன்னாடியே
நூறு நூறா வெட்டுறானுவளே"


இல்லாத சாலைகள் கிடைக்கும்
இலவசமாய் சேலைகள் கிடைக்கும்
வேட்டி சட்டையும் சேர்ந்து கிடைக்கும்
வட்டி கட்டவும் பணம் கிடைக்கும்
திருவிழாபோல கறிசோறு
திகட்டும் மட்டும் கிடைக்கும்
வேலை வேண்டுமே என்ற
கவலை இனிமேல் வேண்டாம்
தினம் தோறும் ஐந்நூறு
தவறாமல் கிடைத்து விடும்
இந்தியாவே இப்ப இருட்டுக்குள இருந்தாலும்
எங்க ஊரு எப்பவும் வெளிச்சத்திலேயே மிதக்கும்

இருங்க!...இருங்க!!....இருங்க!!!.....

ஊர்மக்களின் பேச்சைக் கேட்க கேட்க
உள்ளபடியே சந்தேகம் பூதாகரமாய் எழுகிறது!
சொர்க்கத்திலா இருக்கிறார்கள் அவர்கள்?
சந்தேகமாய் இருக்கிறது எங்களுக்கு!

அட!இடைத் தேர்தல் அறிவித்திருக்கிறார்கள் அங்கே
ஆமாம்!!இலவச சந்தையை திறந்திருக்கிறார்கள் அங்கே

சந்தடிச் சாக்கில் எங்களுக்குள்ளும்
அந்த சாத்தான் எட்டிப் பார்க்கிறது

இனிமேல் எல்லா தொகுதியிலும்
இடைத்தேர்தலாகவே இருந்தால் என்ன?
ஒருமாத இடைவெளி விட்டு
ஒவ்வொன்றாய் நடத்தினால் என்ன??

நடத்தி முடிக்க கொஞ்சம் பேசிப் பார்க்கலாம்!
நடந்தால் நாமும் நாலு காசு பார்க்கலாம்!!

சட்டத் திருத்தம் கொண்டுவந்தால்
நாட்டு மக்கள் அனைவருமே
நலம் பலப் பெறுவார்களே!
நல்வாழ்க்கை அடைவார்களே!!

1 comment:

duraian said...

திருமங்கலம் இடைத் தேர்தலின் பாதிப்பு இது