Sunday, January 18, 2009

ரெய்ன்,ரெய்ன் கோ அவே...!!


மாரி மழை பொய்த்து விட்டது
மானாவாரியும் ஏய்த்து விட்டது
வயல் வரப்புக்குள் எங்கும் நிறைந்து
வெறுமையே வியாபித்திருக்கிறது

ஏழை எங்கள் பிழைப்பு எல்லாமே
மழையை நம்பித்தானே இருக்கிறது
வானம் பார்த்த பூமியெல்லாம்
தினம் ஏங்கும் எங்க மனம்போல
வரண்டுபோய்த் தான் கிடக்கிறது
இருண்டுபோய்த் தான் இருக்கிறது

வீட்டிற்குள் இன்றும் இடி மின்னல்
வீதியில் நின்று சத்தமிடுகிறாள்
விதியை நொந்து சமாளிக்கிறேன்

"ஒரு மழை வந்தாலே போதுமே
இரு போகம் நல்லாவே வெளஞ்சிருமே
கொஞ்சம் பொறுமை காத்தா
மிஞ்சும் காசு பாத்திரலாம்
கொஞ்சம் பொறு ஆத்தா"

கெஞ்சி அவள் முன் நிற்கிறேன்

ஆசைமகனை அடுத்த ஊர்
ஆங்கிலப் பள்ளீயில் சேர்க்க
அவதாரமெடுத்து ஆடுகிறாள்

"போதுமே ஒங்க ஒழப்பு
இதுவுமா ஒரு பொளப்பு
என்னன்னுதான் படிச்சீங்க
என்னத்தப் பண்ணி கிழிச்சீங்க"


விசத்தை வார்த்தையாக்கி
வாய்வழியே கொட்டுகிறாள்

"வெசயம் தெரியாம பேசாதீங்க
வெவசாயமே வேணாமுங்கிறேன்
உழவு மாடு மட்டுமெதுக்கு
உடனே வித்திட்டு வந்து சேருங்க"


எளியவன் சொல் எதுவும்
ஏறவில்லை அம்பலத்தில்
எல்லாம் முடிந்துவிட்டது
மாடு விற்ற பணப்பையோடும்
மறு கையில் பையனோடும்
பள்ளி நோக்கி செல்கிறேன்

உச்சிவேளைப் பொழுதில்
உச்சந்தலையின் நடுவில்
நச்சென விழுகிறது ஒரு துளி
உள்ளே சோர்ந்து போயிருந்த
உயிர் உறக்க விழிக்கிறது
மழையோ என எதிர்பார்த்து
மேலே நிமிர்ந்து பார்க்கிறேன்
கறைபடுத்தி விட்டு காகம் ஒன்று
கடந்து போய்க் கொண்டிருக்கிறது
சொர்ப்ப நேரமானாலும்
சொர்க்கத்தைக் காட்டிய
காக்கையிடம் நான்
கடவுளையே உணர்கிறேன்

பள்ளியினுள் நுழைகிறேன்
பாடம் நடந்து கொண்டிருக்கிறது
மொத்தமாய் சேர்ந்து குழந்தைகள்
சத்தமாய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்

"ரெய்ன் ரெய்ன் கோ அவே..
ரெய்ன் ரெய்ன் கோ அவே ..."


என்ன நிகழ்ந்தாலும் சரி
எந்த விளைவுக்கும் தயாராகிறேன்
வந்த வழியே திரும்புகிறேன்
இந்தப் படிப்புமட்டும் என் குழந்தைக்கு
வேண்டவே வேண்டாம்

2 comments:

தேனீ said...

Ungal kanvu(gal) meipada vendum. Arumai...

venkatx5 said...

ஒரு யாதார்த்தமான உண்மை..