இனியொரு விதி செய்ய.. இனியாவது செய்ய...
Saturday, March 14, 2009
அவனை விடக் கேவலமாய்....
அதிகாலைப் பொழுது
ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறேன் நான்
அவனும் தயாராகி இருப்பான்
ஆரம்பமாகப் போகிறது எங்கள் ஊர்வலம்
தெருவுக்கு வந்து விட்டேன் நான்
தூரத்தில் காத்திருக்கிறான் அவன்
பெருமையோடு முன்னே நடக்கிறேன் நான்
பின் தொடர்ந்து வருகிறான் அவன்
இதோ ஆரம்பம் எங்கள் பயணம்
இனிவரும் ஒருமணி நேரம்
என் அருகில் எனக்கு எதிரில்
என் நிழலின் அருகில் கூட
எவரும் நெருங்கி வரமுடியாது
வாசல்வரை கொண்டு சேர்த்தபின் அவன்
விலகித் தன்வழிப் போய்விடுவான்
பத்து வருடமாய் தொடரும் நட்புக்கு
பதிலுக்கு நான் என்ன செய்யப்போகிறேன்
இத்தனை நன்றி காட்ட நான்
இவனுக்கு என்னதான் செய்துவிட்டேன்
முன்னம் ஒருநாள் இரவில்
சின்னஞ்சிறிய தாள் அளவில்
ரொட்டித் துண்டை வீசியதிலிருந்து
ஒட்டிக் கொண்டான் அன்றிலிருந்து
வீட்டிலும் வளர்க்கிறேன் நாய் ஒன்றை
வாசலைத்தாண்டி நான் வந்தவுடன்
வாலை லேசாய் ஆட்டி
காலை வாகாய் நீட்டி
கண்ணை லேசாய் சிமிட்டி
கவிழ்ந்து படுத்துக்கொள்ளும்
திடீரெனத் தடைபட்டது என் சிந்தனை ஓட்டம்
தெரு முனையில் அவனின் அலறல் சத்தம்
சுறுக்கு வலையில் சிக்கி அவன்
சுற்றிலும் நாய் பிடிக்கும் ஊழியர்கள்
ஒன்பதுபேர் இருந்தாலும் கூட
ஒருவராலும் நெருங்க முடியவில்லை
என்னைப் பார்த்தவுடன்
எப்படியும் காப்பேன்
என்ற எதிர்பார்ப்போடு
எதிர்த்து போராடாமல்
ஏக்கத்தோடு நிற்கிறான்
அமைதியாய் நிற்கிறேன் நானும்
அடுத்து என்ன செய்யவேண்டும்
அமைதியான அவனை அப்படியே
அடித்துத் தூக்கி கூண்டிற்க்குள் அடைக்கும்
அவர்களிடம் விடச் சொல்லிக் கேட்கலாமா?
அல்லது அப்படியே விட்டு விடலாமா?
இந்தப் பெரிய மனுசனுக்கும் தெரு நாய்க்கும்
இது என்னய்யா தொடர்பு என
ஏளனமாய்ப் பேசிவிடுவார்களோ?
என்வீடுவரை சொல்லிவிடுவார்களோ?
அமைதியாய் கூண்டுக்குள் நிற்கிறான் அவனும்
ஆயிரம் அதிர்ச்சி தெரிக்கிறது அவன் முகத்தில்
பலவருடம் பாதுகாத்த அவனுக்காக
சில நொடிகூட போராடாத என்முகத்தில்
இன்னும் எதையோ எதிர்பார்த்து
இமைக்காமல் தேடிக்கொண்டிருக்கிறான்
வண்டி அவனோடு மெல்ல நகர்ந்து
சின்னப் புள்ளியாகித் தொடர்ந்து
கண்ணிலிருந்து மறைந்ததே போனது
அவன் பார்வையிலிருந்தும் நான்
அர்த்தமில்லாத ஒற்றை புள்ளியாகி
அசிங்கமாகி மறைந்தே போய் இருப்பேன்
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
மிகவும் அருமையான கவிதை வாழ்த்துக்கள்
தமிழன் வேணு
என் பாலபருவத்தை நினைவூட்டி விட்டீர்கள் கவிஞரே! பள்ளிப்பருவத்தில் ஒரு
நாய்; வடிவு என்று பெயர் வைத்திருந்தேன். அதை நகராட்சியிலிருந்து வந்து
பிடித்துக்கொண்டு போனபோது நான் என்னென்ன நினைத்தேனோ அவற்றையும் அதற்கு
மேலும் எழுதியிருக்கிறீர்கள்.
தமிழன் வேணு
அன்பின் துரை,
உங்கள் கவிதையைப் படித்தது என் மனதில் ஆயிரம் உணர்ச்சிகள்
கிளர்ந்தெழுந்தன. அத்தனை அற்புதமான் கருத்தொன்றைச் சாரமாகக் கொண்டு
இக்கவிதையை வடித்திருக்கிறீர்கள்.
உங்கள் பார்வையின் விசாலத்தைப் பாராட்டுகிறேன்.
அன்புடன்
சக்தி
Chidambaram Kasiviswanathan
அன்பின் துரை
இயலாமை - என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைவது - மனம் கட்டளையிட்டும் மூளை செயல் பட மறுப்பது இயல்பாக நடக்கிறது. இது மட்டுமல்ல - இதைப் போல பல நேரங்களில் பல செயல்கள் செய்ய இயலவில்லை. ஏன் - சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வாழ்வில் செய்ய வேண்டியதை செய்ய வேண்டிய நேரங்களில் - செய்யாமல் இருப்பது மாபெரும் குற்றம். என்ன செய்வது .......
அந்த அருமை நண்பனின் நிலையைச் சிந்திப்போம். ஒன்பது பேரினை நெருங்க விடாமல் எதிர்த்து நின்றவன் - நண்பனைக் கண்டவுடன் - ஆகா ஆகா - வந்து விட்டான் தோழன் - இனி நமக்கு விடுதலை என மகிழ்ந்து கண்களில் எதிர்பார்ப்போடு நிற்கையில் நாமும் ஒன்றும் செய்யாமல் நின்று விடுகிறோமே ! -
நம்பிக்கைத் துரோகமில்லையா ................. ஆண்டவனே - சக்தி கொடு
நட்புடன் ..... சீனா
படித்து முடிக்கையில் மனம் கனத்துப் போனது. உண்மை எப்போதுமே கசக்கும்,
கனக்கும். எல்லோராலும் வேடம் புனையாமல் இருக்க முடிவதில்லை. அருமையான
கவிதை!
அன்புடன் - கல்பகம்
"பாஸ்கர் (Baskar) அ"
மிக அருமையாக வந்திருக்கிறது. இது பல சமயம் உண்மைதான்.
--
http://oliyavan-baskar.blogspot.com/
http://oliyavan-sirukathaigal.blogspot.com/
http://theneerneram.blogspot.com/
அன்புடன்,
பாஸ்கர் (எ) ஒளியவன்.
Cheers,
Baskar.A
சூர்யா ஜிஜி
//அவன் பார்வையிலிருந்தும் நான்
அர்த்தமில்லாத ஒற்றை புள்ளியாகி
அசிங்கமாகி மறைந்தே போய் இருப்பேன்//
இறங்கி செயலில் காட்டாது, வெறும் இரக்கம் கொளவது யாருக்கு லாபம்?
அருமை.
கதை கவிதை என்று ரொம்ப பொருத்தமாக தலைப்பு வைத்தீர்கள் .எத்தனை முறை இப்படி தோர்த்து போய் நிற்கிறோம் . உதவாத காரணங்களை சொல்லிக் கொண்டு ..
Post a Comment