
நெடுநாளைக்குப்பின் விழாவில்
குடும்பத்துடன் சந்திக்கிறோம்
நண்பனவன் இல்லாள் அங்கு
பம்பரமாய்ச் சுழல்கிறாள்
வருபவர்கள் யார் என்றாலும்
வாய்நிறைய வரவேற்கிறாள்
அவனைப் பார்க்கிறேன்
மெதுவாய் சிரிக்கிறான்
”அப்படித்தான்” என்கிறான்
”கொடுத்து வைத்தவன்” என்கிறேன்
குழந்தைகளுக்குத் துடைத்து எடுத்து
கால்கழுவி விடுகிறாள்
அவனைப் பார்க்கிறேன்
மெதுவாய் சிரிக்கிறான்
”எப்பவுமே அப்படித்தான்” என்கிறான்
”யோகம் அமைந்தவன்” என்கிறேன்
விழாவின் வேலைகளெல்லாம்
விழுந்து விழுந்து செய்கிறாள்
அவனைப் பார்க்கிறேன்
மெதுவாய்ச் சிரிக்கிறான்
”அவள் எப்பவுமே
...அப்படித்தான்” என்கிறான்
”சொர்க்கத்தோடு வசிக்கிறாய்” என்கிறேன்
வயதானவர்கள் காலில் விழுந்து
வாழ்த்துப் பெறுகிறாள்
அவனைப் பார்க்கிறேன்
மெதுவாய் சிரிக்கிறான்
”வெளியே அவள்
.....எப்பவுமே அப்படித்தான்” என்கிறான்
”கடவுள் உன்னுட........”
எனது வார்த்தை பாதியில் உடைந்துபோனது
அது வரும் பாதையில் உறைந்துபோனது
வார்த்தையது செய்தியை உரக்கசொன்னது
அவனது சிரிப்பின் ரகசியம் விளக்கிச்சென்றது
’அவனும் வெளியே மட்டுமே சிரிக்கிறான்’
2 comments:
நீங்களுமா பாஸ்?
நல்லாயிருக்கு.. நடத்துங்க!!
வெளிவேடம் நம்ப முடியாதது!!! சரிதான்!!
Post a Comment