இனியொரு விதி செய்ய.. இனியாவது செய்ய...
Wednesday, August 5, 2009
பயந்தாங்கொள்ளிகள்........!
வங்கியில் சம்பளம்
வாங்கிய கையோடு
பேருந்தில் பயணித்து
நிறுத்தத்தில் இறங்கும்போது
திடீரென வந்தது மின்தடை
தடுமாறி நின்றது என்நடை
"தெருவில் தொடருமே நாய்ப்படை !
ஆரம்பிக்கிறதா எனக்குப் பீடை ?
மனிதனின் நிலை தெரியாமல்
மாதாந்திரப் பராமரிப்பா தேவை !
இருளில் நடக்கவேண்டும்
திருடர்களைக் கடக்கவேண்டும்
பதட்டம் மறைக்கவேண்டும்
பாதுகாப்பாய் இருக்கவேண்டும்
பத்திரமாய் வீடு போய்சேர்வதற்குள்
பாதி உயிர் போய்சேர்ந்துவிடும்"
உயிரைக் கையில் பிடித்து
தெருவில் இறங்கி நடக்கிறேன்
குட்டிச்சுவற்றில் நாலுபேர்
வெட்டியாய் அமர்ந்துகொண்டு
குத்துமதிப்பாய் என்னையே
உற்றுப் பார்த்துக்கொண்டு !
நுரையீரல் வெளியே துள்ளி
தரையில் வலிய விழுகிறது
தாண்டியபின் கவனிக்கிறேன் - அட
தெருவைத்தான் பார்தது இருக்கிறார்கள்
தூரத்திலிருந்து ஆளரவம் வேகமாய்
அருகே நெருங்கி வருகிறது
இருக்கும் இடத்திலிருந்து இதயம்
குதித்து நொறுங்கி விழுகிறது
வரிசையாய் என்னைச் சுற்றி
வியூகம் அமைக்கிறார்கள்
ஒருநொடியில் 'ஐஸ்பால்' சொல்லி
திரும்பிப் பறக்கிறார்கள்
*எதிரே கட்டியிருக்கும் எருமை
*என்னைச் சுற்றியிருக்கும் கருமை
*வேகமாய்த் துரத்தி ஓடும் நாய்
*வெகுதூரத்தில் ஊளையிடும் பேய்
உலகமே ஒன்றுகூடி என்
ஒருவனைத்தான் கவனிக்கிறது !
இருளிலும்கூட இது எனக்குத்
தெளிவாகவேப் புரிகிறது !!
பதைபதைக்கும் மனத்தையும்
பையிலிருக்கும் பணத்தையும்
தடவிக் கொடுத்தபடியே
வீதிக்குள் நுழைகிறேன்
வரும் வழியெல்லாம் தப்பி வந்தவன்
வீட்டுவாசலில் தடுக்கி விழுகிறேன்
திடுக்கிட்டுப் எழுகிறேன்
கால்களுக்கு இடையில் புகுந்து
கருப்பு உருவம் ஒன்று
அலறிக் கொண்டு ஓடுகிறது
"அப்பா வந்தாச்சு - இதோ
அப்பா வந்தாச்சு - இனி
பயமில்லை நமக்கு"
மீசையைத் திருக்கிக் கொண்டு
தரையைத் தடவிக் கொண்டே
தலை நிமிர்ந்து வீட்டுக்குள்
மெல்ல நுழையும்போது
மெதுவாய் முணுமுணுக்கிறேன்
"சரியான பயந்தாங்கொள்ளிகள்"
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அருமை பாஸ்.. இருட்டில் நடந்து வந்ததுபோல் உணர்வை எற்படுத்திவிட்டீர்கள்..
ஹாஹாஹாஹா சூப்பர்!
Post a Comment